என் மலர்
இந்தியா

VIDEO: மூடிய ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர்.. ரெயில் மோதி பரிதாப பலி
- ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
- நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.
ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.
அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.
ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.
வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.






