search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுரங்கப்பாதை அமைக்கும் பணி: நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு
    X

    சுரங்கப்பாதை அமைக்கும் பணி: நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு

    • பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னிட்டு ஏற்கனவே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுரங்கப்பாதை ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் உள்ள 4 தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் பாலம் அமைத்து தண்டவாளத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்பட்டு நேற்று முதல் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இன்று காலையிலும் பணி நடந்தது. ராட்சத கிரேன் மூலமாக தண்டவாளங்கள் அகற்றப்பட்டு கர்டர் பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நாளைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்டர் பாலம் அமைக்கப்பட்டு ரெயில்வே தண்டவாளம் அமைத்து விட்டால் ரெயில் போக்கு வரத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ள முடியும்.

    தற்போது கர்டர் பாலத்திற்காக தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுவதையடுத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்து சேர்ந்தது.

    சென்னை, பெங்களூர், கோவை, ராமேசுவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரும். இந்த ரெயில் இன்று காலையில் வழக்கமான நேரத்திற்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே கேபின் பகுதிக்கு வந்தது.

    ஆனால் சுரங்கப்பாதை பணி காரணமாக அந்த ரெயில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தொடர்ந்து 7.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.45 மணிக்கு சென்றடைந்தது.

    இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 4.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலும் வள்ளியூரில் 2 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.30 மணிக்கு வந்து சேரும். இன்று 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரெயில் அதிகாலையில் 3.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் 4¾ மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேர வேண்டிய சிறப்பு ரெயில் 8.50 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.15 மணிக்கு வழக்கமாக புறப்பட்டு செல்லும். இன்று 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக 7.35 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணி கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    Next Story
    ×