search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வராததால் விபத்தில் சிக்கும் பயணிகள்
    X

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வராததால் விபத்தில் சிக்கும் பயணிகள்

    • சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி, மும்பை, பெங்களூர் செல்லும் விரைவு ரெயில்களும், மின்சார புறநகர் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் என நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்தும் செல்கின்றன.

    மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரெயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரெயில் நிலையம் உள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரெயில்கள் மோதி விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மணவாளநகர் பகுதியில் இருந்து பெரிய குப்பம் செல்லும் பொது மக்களும் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் தானியங்கி நடை மேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    2019 - ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி, சி.சி.டிவி கேமரா வசதி, மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன் படுத்தக் கூடிய தடை இல்லா மின்சார விளக்கு வசதி, நடைமேடை செல்லும் வழி காட்டி பலகைகள், மின்னணு தகவல் பலகை, டைல்ஸ் பதிக்கப்பட்ட நடந்து செல்லும் பாதை, நீர் வடிகால் அமைப்பு, குப்பை தொட்டிகள் போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    ரூ. 6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரெயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது.

    அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொது மக்கள் பயணிகள் ரெயில் தண்டவா ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதிய வர்கள் படியில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையை முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×