என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Transport corporation"
- புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க வசதி
- டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை
சென்னை:
சென்னையில் ஓடும் புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாற்றுத் திறனாளிகளை ஏற்றி இறக்கு வதற்கு டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும் போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி அவர்கள் ஏறு வதற்கு உதவி செய்ய வேண்டும்.
பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளை பஸ்சில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் 'லாக்' செய்ய கண்டக்டர்கள் உதவ வேண்டும்.
அதேபோல் மாற்றுத் திறனாளிகள் இறங்கும் போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பஸ்சில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும். இதில் எவ்வித புகாரும் வராத வகையில் டிரைவர்-கண்டக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள்.
சென்னை:
சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்த துடன் புதிய பஸ்சில் ஏறி சிறிது தூரம் வரை பயணம் செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.
புதிதாக துவக்கி வைக்கப்பட்ட பஸ்கள் பிராட்வே, கிளாம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, திருப்போரூர், திருவொற்றியூர், திருவேற்காடு, தி.நகர், மகாபலிபுரம், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீல நிறத்தில் விடப்பட்டு உள்ள இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறுவதற்கு சிறப்பு சாய் தளம், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
- அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன.
- பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்த மக்கள், வேறு ஊர்திகளில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்கள். அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது.
பழுதடைந்த பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25 சதவீத பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில பணிமனைகளில் மேலாளர்களே தங்களின் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி பழுது நீக்க வேண்டியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டு கின்றன. 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து சிக்கியது.
- பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை வள்ளியூரில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின்ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து சிக்கியது. மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தி இருப்பதாவது:
* சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்.
* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
* பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.
* பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
* பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகளில் பழுது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது.
- டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப் படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ.தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டாலும் 5.68 கி.மீ. இதுவரை இயக்கப்படுகிறது.
டீசலுக்கு பதிலாக இயற்கை கியாசை பயன்படுத்தி பஸ்களை இயக்கி னால் 'மைலேஜ்' கூடுதலாக கிடைக்கும் என்ற ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயற்கை கியாசுக்கு மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.
டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் சோதனை முறையில் இயற்கை எரிவாயு பஸ்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் பரீட்சார்ந்த செயல்பாடு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இயற்கை எரிவாயுவுக்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். இயற்கை எரிவாயு சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்படும். மேலும் டீசலினால் ஏற்படும் காற்று மாசுவை விட இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் மிக குறைவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் புறநகர் மின்சார பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நேற்று விடுமுறை நாளில் குறைவான அளவில் சேவை இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சார ரெயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 22-ந் தேதி வரை இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை சென்னை கடற்கரை-முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
- மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.
இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.
மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.
சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
- படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
- பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக் கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப் போய்விட்டது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மாணவர்களின் படிக்கட்டு பயணம் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே மாறிப்போய் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுப்ப தற்கு போலீசாரும் போக்கு வரத்து அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய் தும் படிக்கட்டு பயணத்தை மாணவர்கள் கை விடுவதாக இல்லை.
இதனால் படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பஸ்சின் பின்பக்க வாசலில் உள்ள படிக்கட்டில் தொங்கிய படியேதான் மாணவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அருகிலுள்ள ஜன்னல் கம்பிகளை கையால் பிடித்துக் கொண்டு உயிரை பனையம் வைத்து அவர்கள் பயணம் மேற் கொள்வது வழக்கம். இதனை தடுக்கும் வகையில் படிக்கட்டு அருகில் ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாத அளவுக்கு மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி மாணவர்கள் பிடித்து தொங்கும் படிக்கட்டு அருகில் உள்ள 2 ஜன்னல் களையும் இரும்பு தகரம் கொண்டு மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான பணி களை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மண்டலத்துக்குட்பட்ட ஒரிக்கை, மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடுகின்றன. இதில் 140 பஸ்கள் மாநகர பேருந்துகளாகும். உள்ளூர்களில் இயக்கப்படும் இந்த பஸ்கள் அனைத்திலும் இரும்பு தகடுகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரையில் 47 பஸ்களில் முழுமையாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவ டிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதனை செயல்படுத்தி மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:
போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இது குறித்து மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில் கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு கேட்டு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. குறிப்பாக தீபாவளிக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை செயலாளர் உறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
- 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்:
வருகிற 10மற்றும் 11 -ந் தேதிகளில் சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் மக்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எண்ணிக்கை குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ் களை ஏற்பாடு செய்யவும், பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
- கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்:
வார இறுதி நாளினை முன்னிட்டு, வருகிற 26-ந் தேதி அன்று மக்கள் அவரவர் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும்,பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
- மாணவர்கள் மேற் கூரையில் ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
- போலீசார் மாணவர்களை கட்டுப்ப டுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போதிலும் மாணவர்கள் பஸ்களில் ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் 57,44 33சி, 102, 15, 2ஏ ஆகிய மாநகர பஸ்களில் ஜன்னல்களில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். மேற் கூரையில் ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனை தட்டிக் கேட்கும் டிரைவர், கண்டக்டர்கள் தாக்கப்படுகிறார்கள்.
இதுபோல மாநகரில் சுமார் 30 இடங்களில் ரகளையில் ஈடுபடுகிறார்கள். இந்த இடங்கள் எவை எவை என்று குறிப்பிட்டுள்ளோம்.
பட்டாளம், புரசைவாக்கம், அயனாவரம், பெரம்பூர், தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு வொற்றியூர், வியாசர்பாடி, நந்தனம், தாம்பரம், வண்டலூர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆவடி-அம்பத்தூர் சாலை, காமராஜர் சாலை, நியூ ஆவடி ரோடு உள்ளிட்ட இடங்களில் காலை மற்றும் மாலை வேளையில் போலீசாரை நிறுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் தொல்லை குறையும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் மாணவர்களை கட்டுப்ப டுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்