search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையே அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும்
    X

    பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையே அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும்

    • கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    • பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது, உயர்மட்ட பாதை பணிகள், சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 ரெயில் நிலையங்களில் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கான நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து பவர் ஹவுஸ்- பூந்தமல்லி இடையே உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'பிளமிக்கோ' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி பணியை தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரமான 'கழுகு' தனது பணியை கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இது கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக போட்கிளப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைய உள்ளது.

    இதற்கிடையில், தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி 'பிகாக்' என்ற எந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தற்போது, இந்த எந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×