search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adyar River"

    • 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
    • அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரம் வரை அமைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சுரங்கப்பாதையாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 116 கி.மீ. தூரத்திற்கு இரண்டாம் திட்டப் பணிகளில் 42 கி.மீ. கட்டுமானத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 19 எந்திரங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

    தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் போன்ற இடங்களில் களிமண் நிலம் இருந்தாலும் அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

    இந்த திட்டப் பணியில் சில சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பாறை மண்ணின் வழியாக சுரங்கப் பாதைகளை அமைக்க இணைக்கப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது ஆற்றின் பாதி வரையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மற்றொரு எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே பல மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ளும். கிரீன்வேஸ் ரோடு ஸ்டேஷன் முதல் அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கி.மீ. தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் எந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும் என்று மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

    மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் மெதுவாக ஸ்டெர்லிங் சாலையை நோக்கி முன்னேறி வருகிறது. ஸ்டெர்லிங் சாலையை அடைய 3 மாதங்கள் ஆகலாம். மற்றொரு எந்திரம் சேத்துபட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மத்திய குழுவிடம் வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதில் வெள்ளத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

    2015-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் நீர் வழித்துறை அடையாறு ஆற்றை அகலப்படுத்துவது கரைகளை பலப்படுத்துவது, மதகுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனாலும் வெள்ள சேதத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் தெரிவித்து கொள்கிறோம்.

    அடையாறு ஆறு மற்றும் கரைகளை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். அடையாறு ஆற்றை 10 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டதாக அமைக்க வேண்டும். அடையாறு ஆற்றின் இருபுறமும் ஒரு சில இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆற்று பகுதி அனைத்து இருபுறத்திலும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண் டும். தற்போதுள்ள தடுப்பு சுவர் உயரத்தில் இருந்து கூடுதலாக 4 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். மழைக்காலங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் அமைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை ஆற்றில் விட வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாறு ஆற்றில் விடுவ தற்கு பதிலாக முட்டுக்காடு வழியாக கடலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியை 4 அடிக்கு குறையாமல் தூர்வார வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தூர்வார வேண்டும். இதனால் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். அதிகபடியாக தண்ணீர் வெளியேற்றத்தை தடுத்தும் அடையாற்றின் மேல் வெளிவட்ட சாலையில் கட்டப்பட்ட பாலம் அகலம் குறைவாக உள்ளதால் ராயப்பா நகர் பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.

    எனவே ராயப்பா நகரில் கூடுதல் பாலம் அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள வரதராஜபுரம் பகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழுவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    • படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரே நாளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் கட்டுக்கடங்காமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை நகரின் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அங்கு 9500 குடும்பங்கள் வசித்து வந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 4,500 குடும்பங்கள் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

    கோட்டூர்புரம் சித்ரா நகரில் அடையாறு ஆற்றின் கரையோரம் 206 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடத்தில் மறுகுடி யமர்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டன. இந்த 206 குடும்பங்களும் மறைமலை நகர் அருகில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அங்கு வசித்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் கோட்டூர்புரம் சித்ரா நகரில் இருந்து புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு சென்றதும் கோட்டூர்புரம் சித்ரா நகரில் புல்டோசர் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. தற்போது ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    • கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூ.61,843 கோடி செலவில் 3 வழித் தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதில் மாதவரம்-சிப் காட் இடையேயான வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. கிரீன் வேஸ் சாலையை அடையாறு பகுதியுடன் இணைக்க இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    4 மாதங்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக காவேரி எனப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அடுத்து அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சவாலான பணியில் ஈடுபட நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும்.

    மற்ற 2 எந்திரங்கள் மந்தவெளியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும். இதில் காவேரி என்ற எந்திரம் மட்டும் 150 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கீழ் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும்.

    ஆற்றுபடுகையின் மட்டத்தில் பொதுவாக சிறிய மாறுபாடு இருப்பதாலேயே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க கடினமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுரங்கம் தோண்டும் எந்திரத்தில் அழுத்த அளவுகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

    ஆற்றுப்படுகையின் ஆழம் சுமார் 3 முதல் 5 மீட்டர் ஆகும். அதற்கு கீழே 11 முதல் 13 மீட்டர் வரை துளையிட வேண்டும். இதன் மூலம் ரெயில் மட்டம் 18 மீட்டர் ஆக இருக்கும். அதற்கு ஏற்ப கவனமாக அளவிட்டு சுரங்கம் தோண்ட வேண்டும்.

    அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் போது இதில் மாறுபாடு காணப்படலாம் என அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் சில வாரங்களில் ஆற்றுப்படுகையை அடையும்.

    சவாலான சூழ்நிலைகள் காரணமாக இந்த சுரங்கப் பாதை பணிகளை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.
    • ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

    சென்னை:

    அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் மீது இன்று காலை சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் மந்தைவெளியை சேர்ந்த ராமச்சந்திரன். வயது 36 என்பது தெரியவந்தது. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இதுகுறித்து ராமச்சந்திரனின் தந்தை லோகநாதன் போலீசாரிடம் கூறுகையில், 'எனது மகன் நேற்று காலை பணிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க செல்லும்போது திரு.வி.க. பாலத்தில் எனது மகனின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

    வாகனத்தின் மீது செல்போன் மற்றும் ஆவணங்கள் வைக்கப் பட்டிருந்தது. நெடுநேரமாகியும் வராததால் போலீசில் தகவல் கூறினேன்.

    இந்நிலையில் எனது மகன் உடல் ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரது மொபைல் எண்ணில் கால் ஹிஸ்டரி டெலிட் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கான காரணங்கள் என்ன? கால் ஹிஸ்டரி மற்றும் மெசேஜ்கள் எதற்காக அழிக்கப்பட்டுள்ளன என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
    • நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நீர் வளத்துறை கொள்கை விளக்க குறிப்பின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டில் சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையார் ஆற்றின் தொடக்கத்தில் இருந்து முகத்துவாரம் வரை சீரமைப்பு பணிகள் ரூ.555.46 கோடி மதிப்பீட்டில் 56 குறுகியகால உப திட்டங்களாக 7 துறைகளின் மூலம் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது, இதில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை ஏழு நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.73.13 கோடி மதிப்பீட்டிலான 5 பணிகள் முடிவுற்றுள்ளது.

    மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் முதல் திரு.வி.க. பாலத்தின் கீழ்புறம் வரை அகலப்படுத்தி தூர்வாருதல் பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பெருநகர சென்னை நீர் வழிகள் மற்றும் நீர் நிலை களை புதுப்பித்து மறுசீரமைக்க பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் தொடர் வடிகால்கள், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் பெரிய வடிகால்களை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம், கூடு வாஞ்சேரி, மணலி, வெள்ளி வாயில், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அடையாறு மற்றும் கொசத்தலை ஆறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற 8 வெள்ளத்தணிப்பு பணிகளை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும்.
    • நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

    சென்னை:

    சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

    இதனை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அடையாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்களிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

    இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரினங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது.

    ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும். இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக்கலாம்.

    சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது.

    இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

    தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதிபடுத்தி உள்ளது.

    நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இனி அரசால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

    • தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதடல் பணி நடைபெற்றது.

    சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

    அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை அடையாறு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    அடையாறு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற முதியவர் நேற்று காலையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

    உடல்நலக்குறைவால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    அடையாறு ஆறு தாம்பரத்தை அடுத்த ஆதனூர் ஏரி கலங்கல் பகுதியில் இருந்து தொடங்குகிறது. மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்று சென்னை பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. அடையாறு ஆற்றின் மொத்த நீளம் 42 கி.மீ ஆகும். ஆற்றின் அகலம் ஒவ்வொரு இடத்துக்கும் தகுந்த வகையில் 60 அடி முதல் 200 அடி அளவில் உள்ளது.

    இந்த நிலையில் ஆற்றின் கரையோரம் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக அடையாறு ஆற்றின்அகலம் 20 அடி முதல் 100 அடியாக சுருங்கியது. இதன் காரணமாக மழை காலங்களில் ஆற்றில் அதிகளவு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 2015-ம் ஆண்டு பெய்த கனமழையின் போது ஆற்றின் அதிகபட்ச அளவை காட்டிலும் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன்காரணமாக ஆற்றின் கரையையொட்டியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது.

    அந்த மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகபட்சமாக 29,600 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் சேரும் இடத்தில் ஆற்றின் அகலம் 129அடியாகவும், திருநீர்மலை பாலம் இருக்கும் இடத்தில் 186 அடியாகவும் உள்ளது. இந்த ஏற்ற இறக்கம் காரணமாக ஆற்றில் கடுமையான அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க 2016-ம் ஆண்டு ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை 22 கி.மீ தூரத்துக்கு ரூ.19 கோடி செலவில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பல இடங்களில் அகலம் குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக கடந்த ஆண்டு பருவமழையின் போது கிளை கால்வாய்கள் வழியாக வந்த தண்ணீர் தடைபட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து திருநீர்மலை முதல் அனகாபுத்தூர் வரை 2.4 கி.மீ தூரத்துக்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பூமி பூஜை நடைபெற்றதையடுத்து அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிகள் நேற்று உடனடியாக தொடங்கியது. திருநீர்மலை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இனி மழை காலத்தின் போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மழை அதிகமாக இருக்கும் போது செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறந்தால் அதன் வேகம் அதிகரிக்கும். அப்போது அடையாறு ஆற்றில் உபரி நீர் மட்டுமே செல்லும். முடிச்சூர், தாம்பரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தடைபட்டு பின்னோக்கி செல்லும்.

    இதன் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் மூழ்கடிக்கிறது. அடையாறு ஆறு அகலப்படுத்தப்பட்டால் அதில் 40 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் செல்லும். இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்காது.

    அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாய் சேரும் இடத்தின் இடதுபக்க கரையை ஒட்டி தரிசு நிலம் உள்ளது.அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்தி ஆற்றை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையும்.

    அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் போது இடது புறத்தில் 3,600 அடி தூரத்துக்கும், வலது புறத்தில் 600 அடி தூரத்திற்கும் 16.5 அடிஉயரத்துக்கு சிமெண்ட் தடுப்பு கட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×