search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public expectation"

    • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.
    • போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.

    போக்குவரத்து நெருக்கடி

    ஏற்கனவே அகலம் குறைவாக உள்ள இந்த ரோட்டில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள், கடைகள் முன்புள்ள கழிவுநீர் கால்வாயை ஒட்டி நடப்படாமல் 3அடி தள்ளி நிறுவப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.

    தார் ரோடு அமைக்கும்போது இருபக்கம் உள்ள கழிவு நீர் கால்வாய் வரை அமைக்காமல் 18 அடி அகலத்திற்கு குறைவாக ரோடு போட்டு விட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலைமை இங்கு உள்ளது.

    இந்த போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதியம்புத்தூர் ஊருக்கு வடபுறம் 120 அடி அகலத்தில் ஒரு ஓடை உள்ளது.

    இந்த ஓடையில் தற்சமயம் சாக்கடை நீர் செல்கிறது மழை காலங்களில் திருச்சிற்றம்பல பேரி குளத்தின் மறுகால் நீர் இந்த ஓடை வழியாக செல்வதுண்டு. இந்த ஓடை நடுவக்குறிச்சியில் ஆரம்பித்து மேற்கே இசக்கியம்மன் கோவில் அருகே ஓட்டப்பிடாரம் ரோட்டில் இணைகிறது.

    இந்த ஓடையின் வலது பக்கத்தில் தூத்துக்குடி பக்கிள் ஓடை போன்று கான்கிரீட் கான் கட்டி மீதமுள்ள இடத்தில் மண் நிரப்பி சாலை அமைத்தால் கனரக வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக சென்று விடும். இதனால் தற்போது உள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட முடியும். நடுவக்குறிச்சியில் இருந்து மேளமடம் சந்திப்பு வரை பஸ் சென்றுவர 20 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

    எனவே புதியம்புத்தூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அரசிடம் தெரிவித்து நிதி பெற்று இந்த போக்குவரத்து நெருக்குடிக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    • பனியன் தொழில் நகரான திருப்பூருக்கு தினமும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
    • சமூக விரோதிகளால் அச்சுறுத்தலும் உள்ளது. பருவ மழை காலம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரின் மைய பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. தற்போது அங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    பனியன் தொழில் நகரான திருப்பூருக்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பஸ் நிலைய கட்டுமான பணியாலும், நெருக்கடியை குறைக்கும் வகையிலும் பஸ் நிலையத்தை 4 பகுதிகளில் இருந்து இயக்கி வருகிறது.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே இருந்து சேலம், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு மட்டும் தனியாக பஸ் நிலையம் இயங்கி வந்தது. இன்று முதல் அங்கிருந்து இயக்கப்பட்ட ஈரோடு, சேலம், திருவண்ணாமலை பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் மார்க்கம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கரூர், திருச்சி, வேளாங்கண்ணி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இப்படி 4 இடங்களில் பஸ் நிலையம் இருப்பதால் பயணிகளுக்கு அவதியாக உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி நிலவுவதால் குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்சை உரிய நேரத்தில் பிடிக்க முடியாமல் பயணிகள் தவற விடுகிறார்கள். தற்காலிக பஸ் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் அச்சுறுத்தலும் உள்ளது. பருவ மழை காலம் தொடங்க உள்ளது.

    எனவே பயணிகள் நலன் கருதி பழைய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டுமானப்பணி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
    • சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி உட்பட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    அவினாசி:

    குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நபார்டு மற்றும் ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தில், அவிநாசி மற்றும் திருப்பூர் ஒன்றியத்தை சார்ந்தகிராமங்களுக்கென ரூ.362 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2020ல் பணி துவங்கியது.அவிநாசி ஒன்றியத்தில், சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம், புதுப்பாளையம், வேட்டுவபாளையம் உள்ளிட்ட சில ஊராட்சிகளை உள்ளடக்கி நடந்து வருகிறது.

    இதில் சின்னேரிபாளையம் பகுதியில் கட்டுமானப்பணி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

    இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை உள்ளடக்கி, ஒவ்வொரு ஒப்பந்ததாரர் மூலம் பணி நடந்து வருகிறது. அதன்படி, சின்னேரிபாளையம் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மற்ற கிராமங்களில் ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.அனைத்து இடங்களிலும் பணி முடிந்தவுடன் ஒரே சமயத்தில் சுண்ணாம்பு அடித்து வர்ணம் பூசும் பணி துவங்கும். இக்கூட்டு குடிநீர் திட்டத்துக்கென, நரியம்பள்ளியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி உட்பட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடுமலையில் 3 மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கவும் வழியில்லை.

    உடுமலை,

    உடுமலை வருவாய் கோட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ஆதிதிராவிடர்கள் கணிசமான அளவு வசிக்கின்றனர். இவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக ஆதிதிராவிட மாணவர்கள் கல்விக்காக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்படுகின்றன.

    உடுமலையில் 3 மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையின் பணிகளை கண்காணிக்க வேண்டிய தனி தாசில்தார் பணியிடம் உடுமலை வருவாய் கோட்டத்தில், உருவாக்கப்படவில்லை.தற்போது துறை திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிப்பவர்கள் காங்கயத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிக செலவிட்டு, காங்கயம் சென்று வருவதில் சிக்கல் நிலவுவதால், பல்வேறு அரசுத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் அதிகளவு பெறப்படுவதில்லை.மேலும் பல கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டமும் தொய்வடைந்துள்ளது.

    இது குறித்து அரசுக்கு பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலிருந்து, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை உட்பட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிக்க காங்கயம் செல்ல வேண்டியுள்ளது.மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கவும் வழியில்லை. அனைத்து பணிகளுக்கும் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து அங்கிருந்து காங்கயம் தனிதாசில்தாருக்கு அவ்விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த நடைமுறையால், நலத்திட்டங்கள் உடனடியாக கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், தனி தாசில்தார் பணியிடத்தை உருவாக்கி அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. #MetroTrain
    சென்னை:

    வடசென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் வந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    மெட்ரோ ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ஜெயந்தி (திருமங்கலம்):-

    சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-வது அடுக்கு தரை தளத்தில் இருந்து சுமார் 100 அடி ஆழத்தில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் போது திகில் அனுபவமாக உள்ளது. அதேபோன்று சென்டிரல் ரெயில் நிலையம்- அரசினர் தோட்டம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கூவம் ஆற்றுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ரெயில் கடந்து செல்லும் போது பயணிகளுக்கு திகில் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. பாமர மக்களும் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை சற்று குறைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.

    சாந்தி(சென்னை):-

    வடசென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் வந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுவது ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

    சுமதி(வண்ணாரப்பேட்டை):-

    வடசென்னையில் உள்ள மின்சார ரெயில் நிலையங்களில் எத்தனை வசதிகள் செய்து தரப்பட்டாலும், சமூக விரோதிகளின் கூடாரமாகத்தான் பெரும்பாலான ரெயில் நிலையங்கள் காட்சி அளிக்கின்றன. எனவே சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெண்கள் பயமின்றி பயணம் செய்ய கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    ஜோஸ்பின்(வியாசர்பாடி):-

    வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது முன்னோர் வாக்கு, ஆனால் சென்னையை பொறுத்தவரையில் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது என்ற அளவில் தான் இருக்கிறது. குறிப்பாக வடசென்னையில் அடிப்படை வசதிகள், போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் ஓடியதை வரவேற்கிறோம். இனிமையான பயணமாக இருந்தது. நேரம் மிச்சம் மற்றும் மாசு இல்லாத பயணமாக இருந்தது. #MetroTrain

    நாகையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிறப்பு பெற்ற மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட மும்மதத்தினரும் வழிபட்டு செல்லும் முக்கிய இடமாக உள்ளது. நாகைக்கு வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நாகை பழைய பஸ்நிலையத்தில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தோணித்துறை அருகே ரெயில்வே கேட் மேம்பால பகுதி உள்ளது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை சாலை வழியாக அக்கரைப்பேட்டை, கல்லார், தெற்கு பொய்கைநல்லூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு இந்த சாலையை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்களை சரக்கு வேன், ஆட்டோக்களில் ஏற்றி இந்த வழியாக தான் மீனவர்கள் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் போது அக்கரைப்பேட்டை, தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி சாலையை சீரமைப்பதை தாமதப்படுத்தி வருகின்றனர்.

    எனவே, தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 
    நாகக்குடையான் ஊராட்சியில், பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் அரசின் செலவில் சிறுவர்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு ஊராட்சிகளில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதே போல நாகக்குடையான் ஊராட்சியில் ஜீவா நகர் சாலையில் ஊராட்சி சேவைக்கட்டிடத்தின் எதிர்புறத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. ஆடு, மாடுகள் கட்டும் இடமாக மாறியுள்ளது.

    மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மக்களுக்கு உபயோகப்படாமல் உள்ளது.

    எனவே பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 
    ×