என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • போதிய நிதி இல்லை என மத்திய அரசு கைவிரிப்பு
    • ரூ.8 ஆயிரம் வழங்கக்கோரி புதுச்சேரி பாஜக கோரிக்கை

    புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பரிசுத்தொகை பொங்கலுக்கு பின்னர் அவரவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை வழங்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த தொகை ரூ.4000மாக குறைக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ரூ.140 கோடி தேவைப்பட்ட நிலையில் புதுச்சேரி அரசு மத்திய அரசை நாடியது. ஆனால் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசும் கைவிரித்தது. 

    இந்நிலையில் தொகையை ரூ.3000 என குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி. இதனிடையே புதுச்சேரி பாஜக பொங்கல் பரிசாக ரூ.8000 உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது. ரூ.10,000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

    தமிழ்நாட்டிலும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் கூடப்பாக்கம் அருகே பைக்கில் எடுத்துச்சென்ற வெடிமருந்து எதிர்பாராத விதமாக வெடித்ததில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

    பைக்கில் சென்ற இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தோர் எனத் தகவல்; காட்டுப்பன்றி வேட்டைக்காக வெடிமருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

    வெடி மருந்து வெடித்ததில் நரிக்குறவர் இன பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் என்பதும் மற்றொருவர் புதுச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வரும் வாலிபர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தி வந்ததும், பின்னர் பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்.

    புதுச்சேரி:

    கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த கட்சி தொண்டர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

    தொண்டர்கள் காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் முண்டியடித்து உள்ளே செல்லும்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம் 'மைதானத்தில் ஏராளமாக இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார். இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, தனி ஆளாக நின்று கெத்து காட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதன் பின்னர் இஷா சிங்கிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தன.

    இந்த நிலையில் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே, தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம், இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே, சில அழகிய வலிகளும் தருதே, போகின்றோம், போகின்றோம் தூரம் தூரம், ஓ ஓஹோ.. ஓ ஓ ஹோ... என்னை விட்டு செல்லும் உறவுகளே ஓ ஓ ஹோ'. என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டுள்ளனர். மேலும் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்கின் தந்தை, தாத்தாவும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். இவரது தாயார் மும்பை கோர்ட்டு வக்கீல் ஆவார். சமூக சேவையில் அக்கறை கொண்ட இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது.
    • எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டது. தொண்டர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

    கூட்டத்திற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதற்கிடையே கூட்டம் அதிகரித்தபோது தொண்டர்கள் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சினியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம், மைதானத்தில் ஏராளமான இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் சொல்லாதீர்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டீர்களா? இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அவரை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாராட்டுகள் குவிந்தன. இதனால் அவர் உயர் போலீஸ் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

    • புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
    • புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.

    அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

    புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள்.

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டன.

    தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் நகர வீதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வலம் வருகிறார்கள். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    நாளை மறுநாள் நள்ளிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, வருகிற 31-ந் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகர மைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 31-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங் கள் செல்ல அனுமதியில்லை.

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை தற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கட்டணமில்லா பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.

    கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக சிறப்பு கட்டணமில்லா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலாப் பயணிகள் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
    • ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை போலி மருந்து தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிரபல நிறுவனம் அளித்த புகாரில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேட்டுப்பாளையம், திருபுவனை பாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கிய போலி மருந்து தொழிற்சாலைகள், 10-க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.

    தொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள், பல கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.

    போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட் உறுதுணையாக இருந்த ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

    தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 ½கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராஜா பல தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அதன்படி போலீசார் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும் ரசாயான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது என்பதாலும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை காரணங்களால் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பினர்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு குழுவினர் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவிடம் ஜி.எஸ்.டி.வரி செலுத்தியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஜி.எஸ்.டி. வரியை செலுத்த புதுவை வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி தனக்கு உதவி செய்ததாக கூறினார்.

    மேலும் சத்திய மூர்த்தியிடம் ரூ12 கோடி பணம் கொடுத்ததாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரி தனது அதிகாரிகள் தொடர்பின் மூலம் உதவியதாகவும் ராஜா தெரிவித்தார். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை நேற்று இரவு கைது செய்தனர் அவரை இரவோடு இரவாக புதுச்சேரி கொண்டு வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பெயரை சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

    இதனையடுத்து புதுவை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஜி.எஸ்.டி அதிகாரியை கைது செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெறும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். விரைவில் ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் இந்த வழக்கில் கைதாவார்கள் என தெரிகிறது.

    • கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது
    • தவெக, என்.ஆர். காங்கிரஸ் இடையே உருவாகும் புதிய கூட்டணி?

    புதுச்சேரியில் தற்போது பாஜக, என்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்தாண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

    இந்நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம். புதுச்சேரி வளர்ச்சி குறித்து பாஜக செயல் தலைவர் நிதின் நபீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்" என தெரிவித்தார்.  

    முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா , புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் முதலமைச்சருடன் வழிபட்டனர்.

    • நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
    • புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.

    நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.

    • தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தார்.
    • விஜய்யின் முகத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியிருந்தார்.

    நடிகர் தாடி பாலஜி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். 

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான,  ஜோஸ் சார்லஸ் சொன்னவாறே இம்மாதம் புதுச்சேரில் புதுக்கட்சி ஒன்றை தொடங்கினார். லட்சிய ஜனநாயக கட்சி எனப் பெயரிடப்பட்ட கட்சியின் கொடியையும் கடந்த வாரம்தான் அறிமுகம் செய்தார்.

    இந்நிலையில் நடிகர் தாடி பாலஜி இக்கட்சியில், அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் இணைந்துள்ளார். முன்னதாக நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தார். தவெக கட்சி தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலஜி, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் பொருப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார். பின்னர் தவெகவையே விமர்சனம் செய்யத் தொடங்கினார்.

    இந்நிலையில் தவெகவில் இருந்து விலகி, விஜய் பாணியிலேயே புதுச்சேரியில் கட்சி ஆரம்பித்த ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
    • தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

    இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.

    தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    ×