search icon
என் மலர்tooltip icon

  புதுச்சேரி

  • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
  • இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.

  இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

  பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.

  பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

   

  • திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
  • அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி.

  புதுச்சேரி:

  புதுச்சேரி பாராளு மன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

  அதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

  இந்நிலையில் நேற்று அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.

  மதியம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ. தனித்தனியாக கவர்னரை சந்தித்துபேசினர்.

  இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கேட்ட போது தொகுதியில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.

  • கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

  அப்போது திருநள்ளாறு நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

  ஆய்வின் முடிவில் யாசகர்களுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்த கெட்டுப்போன பரிகார உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  • வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
  • மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

  புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
  • 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது.

  புதுச்சேரி:

  புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து விஷ வாயு பரவியது.

  விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவில் வசிக்கும் செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

  வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அந்த பகுதியின் இறுதியில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

  4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது. இதனால் பொதுப்பணித் துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

  இந்த நிலையில் இன்று அதிகாலையில் 4-வது தெருவில் வசிக்கும் புஷ்ப ராணி (வயது38) கழிவறைக்கு சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் திரண்டு நிற்கின்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
  • மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு.

  புதுச்சேரி:

  புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீட்டு கழிவறையில் வெளியேறிய விஷ வாயுவால் தாய், மகள், சிறுமி என 3 பேர் இறந்தனர்.

  வீட்டு கழிவறையில் விஷ வாயு பரவியது எப்படி? என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுவை நகர் மற்றும் நகரை அடுத்துள்ள புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையின் மேன்ஹோலுக்கு செல்கிறது. அங்கிருந்து கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.

  அங்கு திட கழிவுகளை தனியாக பிரித்து கழிவுநீரை சுத்திகரித்து வாய்க் காலில் விடுகின் றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும் போது, குழாயில் சில இடங்களில் காற்று வெற்றிடம் உருவாகும்.

  அங்கு விஷ வாயு உருவாகி வெற்றிடத்தை நிரப்பும். சில நேரம் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மேன்ஹோலில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன், நைட்ரஜன் சல்பைடு, அமோனியா போன்ற வாயுக்கள் உருவாகும்.

  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு கழிப்பறை கட்டவே இடம் போதாத நிலை உள்ளது. அதோடு பலர் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாயில் வாயு வெளியே வராதபடி எஸ் அல்லது பி பென்ட் வடிவ அமைப்பை ஏற்படுத்த வில்லை.

  இதனால் மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

  ஒவ்வொரு வீட்டிலும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட பிளம்பர் மூலம் பணிகளை செய்ய வேண்டும். இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா? துர்நாற்றம், விஷவாயு வெளியேறாமல் இருக்க எஸ் அல்லது பி பென்ட் அமைக்கப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.

  கழிப்பறையில் இருந்து செல்லும் குழாய்க்கும், பாதாள சாக்கடையில் இணைக்கும் குழாய்க்கும் உள்ள இடைவெளியில் சிறிய சதுர தொட்டி கட்டி காற்று வெளியேற வென்ட் அமைத்தால் இதுபோன்ற விஷ வாயு தாக்கத்தை தவிர்க்கலாம்.

  பாதாள சாக்கடை மென்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கழிவுநீர் குழாய்களில் நாப்கின், துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட மக்காத குப்பைகளை போடக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

  ஹைட்ரஜன் சல்பைடு வாயு

  விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல், உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டின் கழிவறையில் விஷ வாயு தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன எந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.

  வீட்டின் கழிவறைகளில் விஷ வாயு ஏதும் இல்லை. மேன்ஹோலில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஹைட்ரஜன் சல்பைடு வாயு மூலம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வாயு வெளியேற மேன்ஹோல்கள் உடனடியாக திறந்து வைக்கப்பட்டது.

  • பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
  • போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

  புதுச்சேரி:

  புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

  இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

  இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

  தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

  பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை

  அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.

  பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

  • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

  புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

  இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

  விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

  இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

  • கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.
  • பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

  புதுச்சேரி:

  புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது.

  இந்த கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

  கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.

  கோவிலில் உள்ள மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீஸ்வரர் உட்பட தெய்வங்களை பற்றி எடுத்துக்கூறினர்.

  பின்னர் பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

  108 தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

  இதன்பின் வேதாம்பிகை சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

  • இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
  • நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும்.

  புதுச்சேரி:

  புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் தாளடி நவரை பருவத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

  ஏ.டி.டி-51, என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

  பயிர்களில் கதிர்பிடித்து தற்போது நெல்மணிகள் வளர்ந்துள்ளன. அடுத்த ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

  23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த மழை பெய்தால் விளைந்த நெற்பயிர்கள் மடிந்து சேதமடையும்.

  எனவே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மற்றும் சற்று பசுமையாக உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.

  இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை பெய்து வருவதால் முன்கூட்டியே அறுவடை செய்தால் ஓரளவாது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே அறுவடை நடந்து வருகிறது.

  ஏற்கனவே பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், செயின் போட்ட அறுவடை எந்திரம் மூலம் பணிகள் நடக்கிறது.

  நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.