என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statehood"

    • தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

    ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

    கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.

    இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

    கடந்த புதன்கிழமை லடாக் தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது லடாக் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டககாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "6 வருடங்களுக்கு முன்பு லடாக் யூனியன் பிரதேசம் உருவான போது அம்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்கொண்டது என்னவோ பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே!.

    தற்போது, லடாக் மக்களின் நிலமும், வேலைவாய்ப்பு உரிமையும் மிகுந்த ஆபத்தில் உள்ளது. அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம், துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டது.

    மாநில அந்தஸ்து, அரசியலமைப்பு 6வது பட்டியலில் சேர்க்கப்படுவது, தேர்தல் நடத்தபடுவது ஆகியவை குறித்து லடாக் மக்களின் கோரிக்கைள் குறித்து மீட்டிங் மேல் மீட்டிங் மட்டுமே நடக்கிறதே அன்றி எந்த முன்னேற்றமும் இல்லை.

    லடாக்கில் ஏற்கனவே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தங்கள் படைகளை இந்தியா அருகே நிலைநிறுத்தி சீனா ஒருதலைபட்சமாக மீறியதும் அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    லடாக் இந்தியாவுக்கு அதன் கலாச்சாரம், சூழலியல் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இந்தியர்கள் என்பதில் லடாக் மக்கள் எப்போதும் பெருமை கொண்டிருந்தனர்.

    அவர்களின் கோபமும், துன்பமும் இந்திய அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். மேலும் வெறும் மீட்டிங் பேச்சுக்களை மட்டுமே மேற்கொள்வதை விட்டு விட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முழு வீச்சில் முடிந்த அளவு விரைவாக நிறைவேற்றிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூன் 19, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றினார்.

    அந்தக் கூட்டத்தில், "நமது எல்லைக்குள் யாரும் வரவில்லை, நமது ராணுவப் paguthigalaiயாரும் கைப்பற்றவில்லை" என்று பிரதமர் மோடி கூறினார். இதையே பிரதமரின் பூசி மெழுகல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

    • லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.
    • போராட்டத்தைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இந்நிலையில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
    • அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

    ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்த பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த சூழலில், ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஊகங்கள் எழுந்தன.

     இந்த சூழலில், இன்று (ஆகஸ்ட் 5) ஆம் தேதி மத்திய அரசு மாநில அந்தஸ்து குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

    இருப்பினும், இந்த செய்திகளை முதல்வர் அப்துல்லா மறுத்தார். அவரது எக்ஸ் பதவில், 'ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற செய்திகளை நான் கேள்விப்பட்டேன். இருப்பினும், அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை. நாளை எதுவும் நடக்காது.

    சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தில் தெளிவு வரும் என்று நான் நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.  

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
    • ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக மாற்றம் செய்வதற்கான மசோதா கொண்டுவர வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் 21ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 13-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில், பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    கடந்த 5 ஆண்டாக ஜம்மு காஷ்மீர் மக்கள் முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு அது பொருந்தாமல் உள்ளது.

    ஒரு முழுமையான மாநிலம் அதன் பிரிவினைக்கு பிறகு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாக அமைந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க வேண்டும்.

    இதற்கான மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும். இந்தக் கோரிக்கை நியாயமானது. இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    • மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல.
    • எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.

    என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.

    எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் நாளில் நான் ஆளுநரிடம் சென்று சட்டசபையைக் கலைப்பேன் என தெரிவித்தார்.

    • தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
    • ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக தேக்கத்தை சரி செய்வதற்கு மாநில அந்தஸ்து தேவை என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    • பொய் பேசுவதை நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    • கூட்டணி கட்சியில் யார் வேண்டுமா னாலும் பிரதமராக வரலாம் என்ற கருத்தை கூறுகிறார்

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முரண்பட்ட கொள்கை களை கொண்ட கட்சிகளும், ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகளும் ஒருங்கிணைந்து இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கி ராகுல்காந்தியை பிரத மராக்க பல்வேறு முயற்சி களை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கட்சி தலைமையால் புறக்க ணிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இண்டியா கூட்டணி கட்சியில் யார் வேண்டுமா னாலும் பிரதமராக வரலாம் என்ற கருத்தை கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்திக்க கடந்த 2 ஆண்டாக பல முறை வாய்ப்பு கேட்டும், கிடைக்காமல் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி திரும்பி யுள்ளார். இதை காங்கிரசார் உணர வேண்டும்.

    பொய் பேசுவதை நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார். சுதந்திரத்தை பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என தொடர்ந்து பொய் கூறி வருகிறார். சுதந்திரத்தை பெற்றுத்தந்தது ஸ்தாபன காங்கிரஸ். நாராயணசாமி இருப்பது இந்திரா காங்கிரஸ்.

    அதுபோல ஜனநாயகம், மாநில உரிமை பற்றி யெல்லாம் நாராயணசாமி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை முடக்கி எமர்ஜென்சியை கொண்டு வந்தது இந்திரா காங்கிரஸ்தான். 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநில அரசுகளை அகற்றியும் இந்திரா காங்கிரஸ்தான்.

    எனவே நாராயண சாமிக்கு ஜனநாயகம், மாநில உரிமை பற்றி பேச தகுதி யில்லை. புதுவையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா? இல்லையா? என தெரியாத நிலை உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இண்டியா கூட்டணி என்ற பெயரில் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிக ளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யும் கட்சியாக அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்கள். புதுவை அரசு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் மின் கொள்முதல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை 3 மாதத்திற்கு உயர்த்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுக்கு ஒருமுறைதான் மின் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் புதுவையில் 3 மாதத்திற்கு ஒரு முறை மின் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர். இது எந்த மாநிலத்திலும் இல்லாத முறை. கொள்முதல் விலை ஏற்றத்தின் மூலம் ரூ.38 கோடிதான் உயர்ந்துள்ளது. ஆனால் அரசு கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் கூடுத லாக ரூ.60 கோடியை பெற முயற்சிக்கிறது. மின்துறைக்கு அரசு மானியமாக வழங்கி கொள்முதல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
    • இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    நாங்கள் எதைச் சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும் அதைச் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியா காந்தியால் மட்டுமே செய்ய முடியும்.

    புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் அபிலாஷைகளை அப்பட்டமாக புறக்கணிப்பதாக உள்ளது.

    காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2024 தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்ரீநகரில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
    • பிரதமரும் பொதுக் கூட்டங்கள்தோறும் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு இன்றைய தினம் ஆட்சியமைத்துள்ளது.

    ஸ்ரீநகரில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.

     

    இந்நிலையில் என்சிபியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் தற்போதைக்கு பங்கேற்கப்போவதில்லை என்றும் வெளியிலிருந்தே ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹமீத், இப்போதைக்கு ஜம்மு காஷ்மீர் அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குகொள்ளப்போவதில்லை. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்ப அளிக்கவேண்டும் என்று நாங்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    பிரதமரும் பொதுக் கூட்டங்கள்தோறும் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். எனவே இப்போதைக்கு அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. மாநில அந்தஸ்தை மீட்பதற்கான காங்கிரசின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

    ×