என் மலர்tooltip icon

    இந்தியா

    லடாக்கில் நிச்சயமற்ற சூழல்: ஏமாற்றத்தில் மக்கள்.. கோரிக்கைகளை நிறைவேற்ற மோடி அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம்
    X

    லடாக்கில் நிச்சயமற்ற சூழல்: ஏமாற்றத்தில் மக்கள்.. கோரிக்கைகளை நிறைவேற்ற மோடி அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம்

    • இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

    கடந்த புதன்கிழமை லடாக் தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது லடாக் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டககாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "6 வருடங்களுக்கு முன்பு லடாக் யூனியன் பிரதேசம் உருவான போது அம்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்கொண்டது என்னவோ பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே!.

    தற்போது, லடாக் மக்களின் நிலமும், வேலைவாய்ப்பு உரிமையும் மிகுந்த ஆபத்தில் உள்ளது. அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம், துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டது.

    மாநில அந்தஸ்து, அரசியலமைப்பு 6வது பட்டியலில் சேர்க்கப்படுவது, தேர்தல் நடத்தபடுவது ஆகியவை குறித்து லடாக் மக்களின் கோரிக்கைள் குறித்து மீட்டிங் மேல் மீட்டிங் மட்டுமே நடக்கிறதே அன்றி எந்த முன்னேற்றமும் இல்லை.

    லடாக்கில் ஏற்கனவே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தங்கள் படைகளை இந்தியா அருகே நிலைநிறுத்தி சீனா ஒருதலைபட்சமாக மீறியதும் அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    லடாக் இந்தியாவுக்கு அதன் கலாச்சாரம், சூழலியல் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இந்தியர்கள் என்பதில் லடாக் மக்கள் எப்போதும் பெருமை கொண்டிருந்தனர்.

    அவர்களின் கோபமும், துன்பமும் இந்திய அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். மேலும் வெறும் மீட்டிங் பேச்சுக்களை மட்டுமே மேற்கொள்வதை விட்டு விட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முழு வீச்சில் முடிந்த அளவு விரைவாக நிறைவேற்றிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூன் 19, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றினார்.

    அந்தக் கூட்டத்தில், "நமது எல்லைக்குள் யாரும் வரவில்லை, நமது ராணுவப் paguthigalaiயாரும் கைப்பற்றவில்லை" என்று பிரதமர் மோடி கூறினார். இதையே பிரதமரின் பூசி மெழுகல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    Next Story
    ×