என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
    X

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
    • ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக மாற்றம் செய்வதற்கான மசோதா கொண்டுவர வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் 21ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 13-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில், பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    கடந்த 5 ஆண்டாக ஜம்மு காஷ்மீர் மக்கள் முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு அது பொருந்தாமல் உள்ளது.

    ஒரு முழுமையான மாநிலம் அதன் பிரிவினைக்கு பிறகு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாக அமைந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க வேண்டும்.

    இதற்கான மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும். இந்தக் கோரிக்கை நியாயமானது. இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    Next Story
    ×