என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடைகள்"

    • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
    • உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.

    முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.

    • ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
    • திருப்பூரில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என டெல்லி வரையில் இயங்கும் முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.

    பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும் திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.

    வருகிற 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று நவராத்திரி விழாவும் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. இதற்காக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும் அவற்றுடன் சேர்த்து கன்டெய்னர் லாரி மற்றும் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

    பெரியவர்களுக்கு டி-சர்ட், டிரக் பேன்ட்' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்து வகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பூர் பின்னலாடைகளில் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 26.8 சதவீதம் பங்களித்தது

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இது பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8 சதவீதம் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.

    சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், வரி விதிப்பால் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க இறக்குமதியாளர்களும் அடிப்படை வரியை 10 சதவீதம் பகிர்ந்து வருகின்றனர். ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது . திருப்பூரில் உள்ள சில அலகுகள் மூடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலை இழப்புகள் எதுவும் இல்லை.

    2030 ம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ரூ.1லட்சம் கோடியை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைவதை கடினமாக்குகிறது என்றார்.

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் (சிட்டி) கூற்றுப்படி, இந்தியா 2025ம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜூன் 2025ல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 3.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டை விட மிகவும் குறைவாகவும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தை விட மிகவும் பின்தங்கியதாகவும் உள்ளது.

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் தரவுகளின்படி, இந்தியா வியட்நாமிடம் சந்தைப்பங்கை இழந்து வருகிறது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5.36 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 18.5 சதவீதம் அதிகரித்து 8.54 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி ஜனவரியில் 860 மில்லியன் டாலரில் இருந்து ஜூன் மாதத்தில் 770 மில்லியன் டாலராக குறைந்தது.

    ஏற்றுமதியாளர்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதம் வரியுடன் இணைந்து, அமெரிக்காவில் இந்திய ஜவுளிகள் மீதான மொத்த வரிகள் 59-64 சதவீதமாக உயரக்கூடும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் விற்பனையாவதால் இந்தியா அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அதன் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

    இருப்பினும் கூடுதல் 25 சதவீதம் வரி தற்காலிகமானது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சந்தைகளை பன்முகப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இங்கிலாந்துடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றொரு ஒப்பந்தம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளனர்.

    பருத்தி வரி தள்ளுபடி

    இதற்கிடையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பருத்தி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து பங்களாதேஷ் ,வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 30 வரையிலும் என்பது குறுகிய கால அளவாக உள்ளதால் அதனை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செயற்கை நூலிழை ஆடைகளை பொறுத்தவரை, திருப்பூரில் 10 முதல் 20 சதவீதம் வரை செயல்படுத்தி வருகிறோம். தற்பொழுது பருத்தி விலை குறைய வாய்ப்பிருப்பதால் பருத்தி ஆடைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் . இதன் மூலம் போட்டிநாடுகளுடன் போட்டியிட்டு வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்த விலை குறைப்பின் மூலம் அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    • வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
    • துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.

    இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திலிருந்து சாலை, ரெயில் வழியாக சணல் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

    இருப்பினும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, நவா ஷேவா துறைமுகம் வழியாக வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மே 17 அன்று, அண்டை வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது. 

    • வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
    • துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.

    வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    ஆனால் அதே சமயம் மும்பை, கொல்கத்தா துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கடந்த மாதம் சில இந்தியப் பொருட்களுக்கு வங்கதேசம் தடை விதித்த நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    • சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
    • தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 கடைகள் உள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி இங்கு விற்பனை செய்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான உள்நாட்டு பனியன் ஆடைகள், உள்ளாடைகள் என அனைத்து ஆடை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காதர்பேட்டை பனியன் சந்தை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகள் அனைத்தையும் பூட்டி விட்டு வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டனர். 2 காவலாளிகள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வியாபாரிகள் கடையை பூட்டி விட்டு சென்ற சிறிது நேரத்தில் பனியன் பஜாருக்குள் உள்ள ஒரு கடையில் திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த காவலாளிகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    ஆடைகள் என்பதால் தீ மளமளவென பற்றி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. ஒவ்வொரு கடைகளிலும் பனியன் ஆடைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 10 நிமிடத்துக்குள் 50 கடைகளுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் இரவு 9-30மணி முதல் இரவு 12-30 மணி வரை சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணை த்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ராயபுரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 50 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இன்று காலை வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தீயில் எரிந்து சேதமான பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சேதமான பொருட்கள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் , செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை தீ விபத்து நிகழ்ந்த பனியன் பஜார் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர். 

    • கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர்.

    திருப்பூர்:

    ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூர் வணிகவரி மாவட்டம் இயங்கி வந்தது. வணிக வரி அமலாக்க பிரிவு அதிகாரிகள், ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு வந்து வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பாட்டை துவக்கியுள்ளது.அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் அமலாக்கப்பிரிவுடன் கூடிய வணிக வரி இணை கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. வரி ஏய்ப்புகளை கண்டறிந்து பிடிக்க 8 பறக்கும்படை ரோந்து வாகனங்கள் களத்தில் உள்ளன. இதையடுத்து, கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும் சரக்குகளுக்கு உரிய இ-வே பில், இ- இன்வாய்ஸ் உள்ளதா,சரக்குகளின் தொகை விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா, வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என ஆய்வு நடத்துகின்றனர்.

    தீபாவளி நெருங்கும் நிலையில் உற்பத்தி செய்த பின்னலாடைகளை, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விரைந்து அனுப்புவதில் திருப்பூர் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் அபராதங்கள் விதிக்கின்றனர்.

    இது குறித்து ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:-

    திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவானதையடுத்து அமலாக்க பிரிவினர் தினந்தோறும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் சோதனைகளால் வரி ஏய்ப்பு பெருமளவு கண்டறிந்து தடுக்கப்படும். இது வரவேற்கத்தக்கது.

    இ-இன்வாய்ஸ், இ-வே பில் உருவாக்கப்பட்டு விட்டது என்றாலே வரி ஏய்ப்பு நடைபெற வாய்ப்பு இல்லை. வாகன சோதனையில் ஈடுபடும் அமலாக்க பிரிவு பறக்கும்படையினரோ, உரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றில் சிறு சிறு பிழைகள் இருந்தாலும்கூட (கிளெரிக்கல் மிஸ்டேக்), 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என அபரிமிதமான வரி விதிக்கின்றனர்.

    அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பின்னலாடை துறையினரை பாதிக்க செய்கிறது. சாதாரண பிழைக்கு கூட பெருந்தொகையை அபராதமாக செலுத்த நேரிடுவதோடு குறித்த நேரத்தில் ஆடைகளை, துறைமுகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காலதாமதமும் ஏற்படுகிறது.முறையான ஆவணங்கள் இருந்து, வரி ஏய்ப்பு நோக்கமில்லை என தெரிந்தால், சிறு பிழைகளுக்கு, குறைந்தபட்ச அபராதம் மட்டும் வசூலித்துவிட்டு வாகனங்களை விடுவித்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து, வணிகவரி அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-வே பில், இ-இன்வாய்ஸ் இருந்து, சிறு சிறு பிழைகள் இருப்பின் அவற்றை பெரிதுபடுத்த வேண்டாம் என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்படும் என்றார். 

    • ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.
    • ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    நாகை மாவட்டம் கீழையூர் ராம்கோ தொண்டு நிறுவனத்தில் ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

    இந் நிகழ்ச்சிக்கு துணை ஆளுநர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சுமார் 35 பயனாளிகளுக்குசங்க உறுப்பினர்கள் பங்களிப்புடன் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்க ப்பட்டது.

    முன்னாள் ஆளுநர் ஆர்.எஸ். ஆர் இளங்கோவன் உணவுகளையும் வழங்கினார்.

    இதில் முன்னாள் தலைவர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் பத்மநாதன்நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் செல்வம் மற்றும் எழிலரசி ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
    • ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக புதுவை மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் விதவிதமான ஆடை மற்றும் அணி கலன்களை அணிந்து ஸ்டைலாக நடந்து வந்தனர்.

    இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • சுமார் 20 டன் குப்பைகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் நேற்று முன்தினம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா அன்று பக்தர்கள் விட்டுச் சென்ற 20 டன் குப்பை, 40 டன் ஆடைகளை துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஆடை அகற்றும் ஊழியர்கள் அகற்றினர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசம் செய்தார். சனி பெயர்ச்சியன்று திருநள்ளாறு நளன் குளம், கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் சுமார் 20 டன் குப்பைகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

    அதேபோல் நளன் குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விட்டுச் சென்ற சுமார் 40 ஆயிரம் டன் ஆடைகளை நளன்குளத்தில் ஆடைகளை அகற்ற ஏலம் எடுத்தவர்கள் அகற்றியுள்ளனர். வருகிற சனிக்கிழமை சனி பெயர்ச்சியன்று வராத பக்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஊழியர்கள், போலீசார் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து வருகின்றனர்.

    சனி பெயர்ச்சியன்று கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள ரூபாய் 300, 600, 1000 கட்டண டிக்கெட் வசதி மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனி பெயர்ச்சியன்று வழங்கப்பட்டுள்ள இலவச சிறப்பு பாஸ் இனிமேல் செல்லாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் கட்டண டிக்கெட்டை பெற்று எளிதாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்
    • சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது

    இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.

    சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

    • அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கணவர் பார்ட்டி கொடுப்பார்
    • 5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நடந்துவந்துள்ளது.

    மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை  ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண்  சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    அடிக்கடி தனது  நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை  நண்பர்கள்  முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக  எப்ஐஆர் பதிந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    ×