search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "casualty"

    • ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
    • உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).

    இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

    இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

    இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.

    குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    • படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினீத் (வயது34). சி.பி.எம். உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர், எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தில் பணியாற்றி வந்தார். வினித் இன்று அதிகாலை தனது நண்பர் அக்ஷய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பள்ளிபுரம் பகுதியில் வந்த போது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வர்க்கலாவில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது. இதில் வினீத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் அக்ஷய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்,

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் காளிதாஸ், கல்யாண குமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, கேரளா வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை உதவிக்கோரி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலி கூறியிருப்பதாவது,

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னன்னன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    • அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.
    • பாலஸ்தீனம் மெது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நகரமான  டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனைச் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    இன்று [ஜூலை 19] அதிகாலை 3.15 மணியளவில் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கட்டடம் அமெரிக்க  தூதரக கட்டடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது.

     

     இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளி மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை  38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர்
    • 1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட்.

    அமெரிக்காவைச் சேர்ந்த 94 வயதாகவும் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் பாப் நியூஹார்ட் உயிரிழந்துள்ளார். சிகாகோவைச் சேர்ந்த பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர். அவரது டெட்பான் வகை நகைச்சுவைகள் அவரை உச்சபட்ச தொலைக்காட்சி நட்சத்திரமாக மாற்றியது.

     

    1929 செப்டம்பர் 5 இல் இல்லினோய்ஸ் புறநகரில் பிறந்த பாப் நியூஹார்ட் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்று அதன்பின் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். கொரிய போரில் பணியாற்றிய அவர் நாடு திரும்பியபின் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை இடையிலேயே கைவிட்டுவிட்டு அக்கவுன்டன்டாக தனது பணியை தொடங்கிறார்.

    ஆனால் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட பாப் நியூஹார்ட் இடையிடையே காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். அதன்பின் கவனம் பெற்ற அவர், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காமெடி  ஆல்பங்களை வழங்கத் தொடங்கினார். நியூஹார்ட்டின் "The Button-Down Mind of Bob Newhart" காமெடி ஆல்பம் அவருக்கு பபுகழைத் தேடித் தந்தது.

    1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட். 90 களில் நடந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு தோற்றங்களில் தோன்றினார். பிரபல சீரிசான பிக் பாங் தியரியிலும்  சிறப்பு தோற்றத்தில் பாப் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவு அமெரிக்க ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    • ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது
    • வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஐடி நிறுவனமான இன்ஸ்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வயது குறைந்த ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் [ ஒரு நாளைக்கு சுமார் 14 மணி நேரம் வேலை] என்று கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். உடனே இதற்கு பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிளம்பியது.

     

    ஆனால் ஊழியர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைக் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்களை அடிமைகளைப் போல் நடத்துவதற்கு இது ஒப்பாகும் என்று எதிர்ப்புக்குரல்கள் எழத் தொடங்கின. இந்த விவகாரம் இபப்டியாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கார் வாடகை சர்வீஸ் துறையில் கோலோச்சி வரும் பிரபல ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஸ் அகர்வால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஓலா நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

     

     

    ஆனால் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வது என்பது மரணத்துக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் கூறுவதாவது, ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது , இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது.

    வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது. மேலும், அதீத மன அழுத்தம், உடல் பருமன், பிரீ சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் மூலம் மரணம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    முதலாளிகள் தங்களின் சொத்துமதிப்பை அதிகரித்துக்கொள்ள ஊழியர்களை ஆபத்தில் தள்ளுவது ஏற்புடையது அல்ல. அதிக வேலை நேரத்தால் ஊழியர் நோய்வாய்ப்படும் அவர்களை நீக்கிவிட்டு அவர்களின் இடத்தை குறைந்த சம்பளத்தில் வேறொருவரை நியமித்து அதன்மூலமும் முதலாளிகள் லாபம் சமபாதிக்க முயல்கின்றனர் என்று அவர் கண்டித்துள்ளார். 

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
    • எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து நானும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடிவிபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்துமாறும் விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • என்கவுண்டரில் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
    • பதுங்கு குழி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அம்மைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர்நேற்று முன் தினம் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்த நிலையில் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் அவர்கள் வீட்டின் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் சுவரில் ரகசிய பதுங்கு குழி [BUNKER] அமைத்து அதில் அவர்கள் பதுங்கியிருந்து கண்டுபிடிக்கப்பட்டிள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
    • ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த 4ம் தேதி ஆக்கிரப்பு வீட்டை வருவாய்த் துறையினர் அகற்ற முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் 85சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் உயிரிழந்தார்.

    ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள்  ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில்  கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    • 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    "உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகள் என்று கூறியுள்ளார்.

    ×