search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garments"

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
    • தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 கடைகள் உள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி இங்கு விற்பனை செய்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான உள்நாட்டு பனியன் ஆடைகள், உள்ளாடைகள் என அனைத்து ஆடை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காதர்பேட்டை பனியன் சந்தை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகள் அனைத்தையும் பூட்டி விட்டு வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டனர். 2 காவலாளிகள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வியாபாரிகள் கடையை பூட்டி விட்டு சென்ற சிறிது நேரத்தில் பனியன் பஜாருக்குள் உள்ள ஒரு கடையில் திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த காவலாளிகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    ஆடைகள் என்பதால் தீ மளமளவென பற்றி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. ஒவ்வொரு கடைகளிலும் பனியன் ஆடைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 10 நிமிடத்துக்குள் 50 கடைகளுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் இரவு 9-30மணி முதல் இரவு 12-30 மணி வரை சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணை த்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ராயபுரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 50 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இன்று காலை வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தீயில் எரிந்து சேதமான பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சேதமான பொருட்கள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் , செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை தீ விபத்து நிகழ்ந்த பனியன் பஜார் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர். 

    • கடந்த 20 ஆண்டுகளில் திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது.
    • சர்வதேச வர்த்தகம் 80 சதவீதம் செயற்கை நூலிழை, 20 சதவீதம் பருத்தி என்ற அடிப்படையில் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 49வது இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் அசோசியேஷன் சேர்மன் சுவாமிநாதன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர், செயற்கை நூலிழை ஆடை கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

    முன்னதாக சுவாமிநாதன் கூறியதாவது:- கடந்த 20 ஆண்டுகளில் திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.சீனாவுக்கு மாற்றாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன. அந்நாடுகளை ஈர்க்கும் வகையில் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மறுசுழற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பிடம் பெற்று நாட்டின் தலைசிறந்த தொழில் நகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக பின்னலாடை உற்பத்தி யை டிஜிட்டல்மயமாக்க தொழில்துறையினர் திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறுகையில், பின்னலாடை உற்பத்தியில் தனிமுத்திரை பதித்துள்ள திருப்பூர் 80 சதவீதம் பருத்தி, 20 சதவீதம் செயற்கை நூலிழை ஆடை தயாரித்து வருகிறது.சர்வதேச வர்த்தகம் 80 சதவீதம் செயற்கை நூலிழை , 20 சதவீதம் பருத்தி என்ற அடிப்படையில் நடக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி திருப்பூரின் பருத்தி மற்றும் செயற்கை நூலிழை ஆடைகள் ஏற்றுமதி 50:50 என்று உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    சாக்கடை கால்வாய்களில் குப்பை மேட்டில் நீக்கமற நிறைந்து சுற்றுச் சூழலுக்கு பேராபத்து விளைவிக்கும் 'பெட் பாட்டில்' எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சாயமிடப்பட்ட பாலியஸ்டர் நூல் தயாரிப்பதில் திருப்பூரை சேர்ந்த தனியார் காட்டன் குழுமம் சாதனை படைத்துள்ளது.

    சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மலை போல் செலவு வைக்கும் நிலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் நூலிழை தயாரிக்கும் போதே, நிறமேற்றப்பட்ட நூலாக மாற்றும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் தினமும் 70 லட்சம் பெட் பாட்டில்களில் இருந்து பைபர் தயாரிக்கிறது.இதன் வாயிலாக 1.30 லட்சம் கிலோ நூலிழை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒன்று, இரண்டல்ல இதுவரை 60 வகையான நிறங்களில் நூலிழை தயாரித்து துணியாகவும், ஆடையாகவும் மாற்றி அசத்தியுள்ளனர்.

    இதேபோல் பனியன் ஆடை தயாரிக்கும் போது மொத்த துணியில் 15 சதவீதம் வரை கட்டிங் வேஸ்டாக நீக்கப்படுகிறது. அவற்றை மீண்டும் பைபர் ஆகவே மாற்றி அதிலிருந்து நூல் தயாரிக்கும் தொழில்நு ட்பமும் வெற்றியடைந்துள்ளது.

    மறுசுழற்சி முறையில் பருத்தி நூலிழை தயாரிக்கும் போது 98 சதவீத கார்பன் டை ஆக்ைஸடு உருவாவது தவிர்க்கப்படுகிறது. வழக்கமான மின்திறனில் 78 சதவீதம் சேமிக்கப்படுவதோடு தண்ணீர் பயன்பாடும் 100 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது.பாலியஸ்டர் நூலிழை தயாரிக்கும் போது 96 சதவீதம் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு உருவாவது குறைந்துள்ளது. மின்திறனில் 78 சதவீதமும், தண்ணீர் பயன்பாட்டில் 96 சதவீதம் குறைந்துள்ளது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனியார் காட்டன் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குனர் பிரித்வி கூறியதாவது:- எங்கள் நிறுவனம் மறுசுழற்சி முறையில் பெட் பாட்டில் களில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிக்கிறது. சொகுசு மெத்தை தயாரிக்க பயன்படும் ஹாலோ பைபர்களும் இதிலிருந்து கிடைக்கிறது. நிட்பேர் கண்காட்சியில் வைத்துள்ளடி-சர்ட்டுகள், 80 சதவீதம் மறுசுழற்சி பாலியஸ்டர், 20 சதவீதம் மறுசுழற்சி விஸ்கோஸ் என 100 சதவீதம் மறுசுழற்சி முறையில் தயாரித்துள்ளோம். ஒரு டி-சர்ட் தயாரிப்பின் மூலம் 7.82 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவது குறைந்துள்ளது. மேலும் 39.74 லிட்டர் தண்ணீர் பயன்பாடு சேகரமாகியுள்ளது. அதாவது காரில் 28.56 கி.மீ., தூரம் பயணிக்கும் போது உருவாகும் சுற்றுச்சூழல் மாசு அளவுக்கு மாசுபடுவது குறைந்துள்ளது. 160.37 நாட்களுக்கு பயன்படுத்தும் குடிநீர் சேகரமாகியுள்ளது. பெட் பாட்டில் கழிவில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிக்கும் போது நிறமிகளை சேர்ப்பதால் எதிர்பார்க்கும் வண்ணத்தில் பாலியஸ்டர் நூல் தயாரிக்கிறோம். ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பயிற்சி பெற்ற தொழிலாளரை கொண்ட தொழில் முனைவோரையும் உருவாக்கி வருகின்றனர்.
    • வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கு முதலில் பயிற்சி அளிக்கிறது.

    திருப்பூர் :

    சிறந்த உட்கட்டமைப்பு வசதி, திறன்வாய்ந்த தொழிலாளர்களால் குறைந்த செலவில் சர்வதேச தரத்துடன் உற்பத்தி செய்யும் யூனிட்களை உருவாக்க தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு (ஐ சீடு). இந்த அமைப்பு திருப்பூர் பனியன் தொழிலை, பின்தங்கிய மாவட்டங்களில் விரிவாக்கம் செய்ய தகுந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    வேலைவாய்ப்பு குறைந்த பின்தங்கிய மாவட்டங்களில் பனியன் உற்பத்தி யூனிட்களை உருவாக்கி, பயிற்சி பெற்ற தொழிலாளரை கொண்ட தொழில் முனைவோரையும் உருவாக்கி வருகின்றனர்.

    இந்நிறுவனம் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கு முதலில் பயிற்சி அளிக்கிறது. தகுதியான நிதி ஆதார திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கடந்த, ஏப்ரல் - மே மாதங்களில், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதன்படி புதிய யூனிட்கள் மதுரை - தத்தனேரி, உசிலம்பட்டி, கல்லுப்பட்டி, விருதுநகர் - ராஜபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்கள் ஆடை உற்பத்தி மற்றும் பேக்கிங் ஆர்டர்களை அவர்களுக்கு வழங்கியுள்ளன.

    குறித்த நேரத்தில் கட்டிங் துணிகளை இணைத்து ஆடைகளாக உருவாக்கி தகுந்த முறையில் பேக்கிங் செய்தும் அனுப்பி வருகின்றன. இதன்மூலமாக 60க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுவருகின்றனர்.

    • ஏ.இ.பி.சி., ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    • 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    தென்கொரியாவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 0.67 சதவீத அளவிலேயே உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் வருகிற செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    கொரோனா பரவல் இருந்தபோதும்கூட கடந்த 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வர்த்தக வாய்ப்புகள் மிகுந்த தென்கொரிய சந்தையை கைப்பற்ற ஏதுவாக திருப்பூர் உள்பட நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகர் சந்திப்பில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்புவிடுத்துள்ளது. பங்கேற்க விரும்பும் நிறுவனத்தினர் வரும் 30ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களை அவற்றில் இடம் பெறும் பிரின்டிங், மதிப்பு கூட்டுகிறது. இத்தகைய பிரின்டிங் துறையை வளர்ச்சி பெறச்செய்வதற்காக 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது தொழில் பாதுகாப்புக்குழு.

    பழவஞ்சிபாளையத்தில் ரூ. 16.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் கிளாஸ் பிரின்ட், கியூரிங் எந்திரங்கள் வந்திறங்கின.இரண்டாம் கட்டமாக துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ரவுண்ட் கரோசல் பிரின்டிங் எந்திரங்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தன.

    பர்ன் அவுட், ஹீட் டிரான்ஸ்பர், 3டி பிரின்ட், ஷிம்மர், ரேடியம் பிரன்ட், எம்போசிங், லெதர் கோட்டிங், டை அண்டு டை, பிளாட்ச் உட்பட 27 வகை பிரின்டிங் செய்யமுடியும். பிரின்டிங் நிறுவனங்களின் திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதற்காக பொது பயன்பாட்டு மையத்தில் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தற்போது வந்துள்ள ரவுண்ட் கிரோசல் எந்திரம் தொழிலாளர்களுக்கு பிரின்டிங் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக தொழில் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.விரைவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த எந்திரம் சோதனை ஓட்டத்தை துவக்க உள்ளது.

    • வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,

    அதிக வாய்ப்புகள் நிறைந்த இத்தாலிய சந்தையை வசப்படுத்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி.,) தொடர் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இத்தாலி நாட்டின் மிலன் நகரில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்புக்கு ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இத்தாலி நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவதற்கான வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர். இதில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. வரும் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×