என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

50% வரிவிதித்த அமெரிக்கா - திருப்பூரில் முடங்கி கிடக்கும் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள்
- திருப்பூர் பின்னலாடைகளில் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 26.8 சதவீதம் பங்களித்தது
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இது பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8 சதவீதம் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், வரி விதிப்பால் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க இறக்குமதியாளர்களும் அடிப்படை வரியை 10 சதவீதம் பகிர்ந்து வருகின்றனர். ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது . திருப்பூரில் உள்ள சில அலகுகள் மூடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலை இழப்புகள் எதுவும் இல்லை.
2030 ம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ரூ.1லட்சம் கோடியை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைவதை கடினமாக்குகிறது என்றார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் (சிட்டி) கூற்றுப்படி, இந்தியா 2025ம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜூன் 2025ல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 3.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டை விட மிகவும் குறைவாகவும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தை விட மிகவும் பின்தங்கியதாகவும் உள்ளது.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் தரவுகளின்படி, இந்தியா வியட்நாமிடம் சந்தைப்பங்கை இழந்து வருகிறது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5.36 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 18.5 சதவீதம் அதிகரித்து 8.54 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி ஜனவரியில் 860 மில்லியன் டாலரில் இருந்து ஜூன் மாதத்தில் 770 மில்லியன் டாலராக குறைந்தது.
ஏற்றுமதியாளர்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதம் வரியுடன் இணைந்து, அமெரிக்காவில் இந்திய ஜவுளிகள் மீதான மொத்த வரிகள் 59-64 சதவீதமாக உயரக்கூடும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் விற்பனையாவதால் இந்தியா அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அதன் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
இருப்பினும் கூடுதல் 25 சதவீதம் வரி தற்காலிகமானது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சந்தைகளை பன்முகப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இங்கிலாந்துடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றொரு ஒப்பந்தம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளனர்.
பருத்தி வரி தள்ளுபடி
இதற்கிடையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பருத்தி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து பங்களாதேஷ் ,வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 30 வரையிலும் என்பது குறுகிய கால அளவாக உள்ளதால் அதனை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நூலிழை ஆடைகளை பொறுத்தவரை, திருப்பூரில் 10 முதல் 20 சதவீதம் வரை செயல்படுத்தி வருகிறோம். தற்பொழுது பருத்தி விலை குறைய வாய்ப்பிருப்பதால் பருத்தி ஆடைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் . இதன் மூலம் போட்டிநாடுகளுடன் போட்டியிட்டு வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்த விலை குறைப்பின் மூலம் அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.






