என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knitwear"

    • திருப்பூர் பின்னலாடைகளில் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 26.8 சதவீதம் பங்களித்தது

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இது பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8 சதவீதம் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.

    சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், வரி விதிப்பால் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க இறக்குமதியாளர்களும் அடிப்படை வரியை 10 சதவீதம் பகிர்ந்து வருகின்றனர். ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது . திருப்பூரில் உள்ள சில அலகுகள் மூடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலை இழப்புகள் எதுவும் இல்லை.

    2030 ம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ரூ.1லட்சம் கோடியை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைவதை கடினமாக்குகிறது என்றார்.

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் (சிட்டி) கூற்றுப்படி, இந்தியா 2025ம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜூன் 2025ல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 3.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டை விட மிகவும் குறைவாகவும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தை விட மிகவும் பின்தங்கியதாகவும் உள்ளது.

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் தரவுகளின்படி, இந்தியா வியட்நாமிடம் சந்தைப்பங்கை இழந்து வருகிறது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5.36 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 18.5 சதவீதம் அதிகரித்து 8.54 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி ஜனவரியில் 860 மில்லியன் டாலரில் இருந்து ஜூன் மாதத்தில் 770 மில்லியன் டாலராக குறைந்தது.

    ஏற்றுமதியாளர்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதம் வரியுடன் இணைந்து, அமெரிக்காவில் இந்திய ஜவுளிகள் மீதான மொத்த வரிகள் 59-64 சதவீதமாக உயரக்கூடும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் விற்பனையாவதால் இந்தியா அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அதன் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

    இருப்பினும் கூடுதல் 25 சதவீதம் வரி தற்காலிகமானது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சந்தைகளை பன்முகப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இங்கிலாந்துடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றொரு ஒப்பந்தம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளனர்.

    பருத்தி வரி தள்ளுபடி

    இதற்கிடையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பருத்தி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து பங்களாதேஷ் ,வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 30 வரையிலும் என்பது குறுகிய கால அளவாக உள்ளதால் அதனை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செயற்கை நூலிழை ஆடைகளை பொறுத்தவரை, திருப்பூரில் 10 முதல் 20 சதவீதம் வரை செயல்படுத்தி வருகிறோம். தற்பொழுது பருத்தி விலை குறைய வாய்ப்பிருப்பதால் பருத்தி ஆடைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் . இதன் மூலம் போட்டிநாடுகளுடன் போட்டியிட்டு வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்த விலை குறைப்பின் மூலம் அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    • ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
    • மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. பின்னலாடை ரகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய பின் ஏற்றுமதியாளர்கள் உரிய ஆவணங்களுடன் மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரீபண்ட் தொகை விடுவிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு (2022 - 23) நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகம் மூலம் 360 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

    16 சரகங்களை உள்ளடக்கிய திருப்பூரின் இரண்டு வணிக வரி மண்டலங்கள் மூலம் 520 கோடி ரூபாய் என மத்திய, மாநில வரித்துறைகள் மூலம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை மொத்தம் 880 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு பரிசீலித்து உடனடியாக ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகை விடுவிக்கிறோம். இக்கட்டான சூழல்களில் உரிய காலத்தில் ரீபண்ட் கிடைப்பது, பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதன தேவைக்கு பக்கபலமாக உள்ளது என்றனர்.

    • உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் வந்தனர்.
    • சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளது. பனியன் உற்பத்தி வேகமெடுத்து வரும் நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வந்தனர். இந்த குழுவின் தலைவர் அவிடேஸ் செபரியன், துணைத்தலைவர் மார்க் ஜேகர் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணைசெயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் உலக அளவிலான 12 விதிமுறைகளை கடைபிடித்து ஆடைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்து அந்த நிறுவனங்களுக்கு 'உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி' என சான்று வழங்குவார்கள். இந்த சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

    ஏற்கனவே திருப்பூரில் சாயக்கழிவுநீர் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 90 சதவீத நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் பசுமை திருப்பூராக மாற்றும் வகையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு மரங்களாக வளர்ந்துள்ளன. இதுதவிர காற்றாலை, சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பின்னலாடை நிறுவனங்களுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விவரங்களை அமெரிக்க குழுவினர் கேட்டறிந்தனர்.

    மேலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிற்சாலை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தினர். உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி சான்று பெறுவதற்கான சாத்தியங்கள் திருப்தியளிப்பதாக குழுவினர் தெரிவித்தனர். நிறுவனங்களுக்கு சான்றுகள் கிடைக்கும்போது இதன் மூலம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினராக இருந்து வரும் நிலையில் சங்கத்தை அந்த கவுன்சிலில் ஆயுட்கால உறுப்பினராக மாற்றுவது என்றும், அதற்காக சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்வது என்றும், பின்னலாடை தொழில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் மின்கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் மந்தநிலை காரணமாக வங்கிகள் கடன் பெற்றவர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தொழிலை காப்பாற்ற வங்கிகள் வழங்கிய கடனை குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் இ-இன்வாய்ஸ் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏ.எக்ஸ்.என். நிறுவனம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேபோல் சங்க உறுப்பினர்கள் தங்களது நிறுவனங்களுக்கு காப்பீடும் செய்யும்போது அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், காப்பீடு செய்யாவிட்டால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் விளக்கமளித்தனர்.

    • காற்று, நிலம், நீர் மாசுபடாமல் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்
    • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காற்று, நீர், நிலம் மாசுபடாத உற்பத்தி என்ற தரச்சான்று அவசியம்.

    திருப்பூர்:

    புதிதாக ஏற்படுத்தப்ப ட்டுள்ள சர்வதேச ஜவுளி கொள்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காற்று, நிலம், நீர் மாசுபடாமல் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை முக்கியமானது.கொரோனாவுக்கு பிறகு இயற்கை மாசு ஏற்படுத்தாத பசுமை சார் உற்பத்தி என்ற அங்கீகார தரச்சான்று இருக்கும் ஆடைகளையே வெளிநாட்டு மக்கள் வாங்கி அணிகின்றனர்.

    திருப்பூரில் இயங்கும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம், சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகளும் புதிய அங்கீகார தரச்சான்று பெற வேண்டியது கட்டாயமாகி விட்டது. கிரீன் டேக் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. தற்போது கார்பன் கிரெடிட் என்ற சான்றும் அவசியமாகிறது.சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் பயன்படுத்தும் இங்க் மற்றும் ரசாயனத்தின் தன்மை, இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காக கார்பன் கிரெடிட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.குறிப்பிட்ட நாடுகளில் கார்பன் கிரெடிட் சான்றிதழ் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வர்த்தகம் செய்ய முடியும். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என பல்வேறு நாட்டு மக்களும் விரும்புகின்றனர். ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் திருப்பூர் அவர்களின் தேர்வாக இருக்கிறது. இனிவரும் நாட்களிலும் ரசாயன பயன்பாடு, இங்க் பயன்பாடு உள்ளிட்ட பணிகளிலும் அங்கீகார தரச்சான்று பெற்றிருக்க வேண்டியதும் அவசியமாகி யுள்ளது.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அதன்படி அங்கீகார தரச்சான்று பெற்றிருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்கின்றனர். தூய ரசாயனம் - தூய செயலாக்கம் - தூய தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்து கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காற்று, நீர், நிலம் மாசுபடாத உற்பத்தி என்ற தரச்சான்று அவசியம்.

    அதற்காக அடல் இன்குபேஷன் மையம் உதவியுடன் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தரச்சான்று நிறுவனங்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம் என்றார். 

    • சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர்.
    • திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாடும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சமூக நலன் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்க உறுப்பினர்கள் குழு தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிலாளர்கள் குழு தலைவர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர். அப்போது அவர்களிடம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறினோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளிட்ட திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தோம். பசுமை சார் உற்பத்தியை கவுரவித்து, அங்கீகார சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அப்போது திருப்பூர் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பதாக சுவிட்சர்லாந்து குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மே மாதத்திற்கான நூல் விலை மாற்றம் இல்லாமல் கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

    நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான (மே) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.

    இதில் கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 30 எண்ணுக்கு அதிகமான நூல் வகைகள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத விலையில் குறைப்பு இல்லை என்றாலும் நடப்பு மாதத்தில் விலை ஏறாமல் இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

    இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
    • இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.

    இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.

    இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

    சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.

    திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

    ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

    ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×