என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
    • சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆச்சே மாகாணத்தில் மையம் கொண்டிருந்தது.

    நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செமரு எரிமலை அமைந்துள்ளது.
    • திடீரென எரிமலை வெடித்துச் சிதறியதால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாம்பல் வெளியேறியது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செமரு எரிமலை அமைந்துள்ளது. 3 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள இந்த மலை சாகச வீரர்களுக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்நிலையில், சுற்றுலா பயணிகள் உள்பட 170-க்கும் அதிகமானோர் இந்த மலையில் ஏறிக்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாம்பல் வெளியேறியதால் அவர்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கிச் கொண்டனர்.

    தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

    • தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல மசூதி அமைந்துள்ளது.
    • மசூதியிலும் அருகே செயல்பட்டு கொண்டிருந்த பள்ளியிலும் எதிரொலித்தது.

    இந்தோனேசியாவில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர்.

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரபல மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.

     மதியம் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. இதன் பாதிப்பு மசூதியிலும் பள்ளியிலும் எதிரொலித்தது.

    தகவலறிந்து போலீசார், மீட்புப்படையினர் உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    முதல்கட்ட விசாரணையில் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டுகள் வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்பை துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • கப்பலில் ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்து, பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.

    படாம்:

    இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பள்ளி இடிந்த விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தனர்.

    • தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சிடொர்ஜொ நகரில் அமைந்துள்ளது அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி.

    இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வரும் நிலையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில், மாணவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள்ள சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 50க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

    • கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
    • இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஒரு பகுதியில் கட்டிட விரிவாக்க பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் மாணவர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தபோது பள்ளி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ராட்சத கான்கிரீட்கள் சரிந்தன. இதன் இடிபாடுகளில் ஏராளமான மாணவர்கள் சிக்கி கொண்டனர்.

    உடனே போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். 99 மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலோர் ஆண்கள் ஆவார்கள். கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் 65 மாணவர்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 7 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம். அவர்களை மீட்க போராடி வருகிறோம். உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர்.

    இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.

    இதற்கிடையே கட்டிடத்தின் 3-ம் மாடியில் கட்டுமான ஊழியர்கள் சிமெண்ட் கலவையை ஊற்றிய பிறகு கட்டிடம் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தோனேசியாவில் எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
    • அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    ஜகார்த்தா:

    தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று இந்தோனேசியா. இங்கு சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    இது அந்த நாட்டு மக்களின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும். எனவே எம்.பி.க்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அப்போது தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பாராளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எனவே போராட்டத்தைக் கலைக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களுக்கு இடையே போலீஸ் கவச வாகனம் தறிகெட்டு ஓடியது. இதில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பாண்டுங், யோககர்த்தா, மக்காசர் ஆகிய நகரங்களுக்கும் போராட்டம் பரவியது.

    அதன் ஒரு பகுதியாக மக்காசரில் உள்ள நகர்மன்ற அலுவலகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அந்தக் கட்டிடம் கொழுந்து விட்டு எரிந்தது.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்தச் சம்பவத்தில் 3 அரசு ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • நிலக்கடலையை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் வரை பில்களுடன் கூடிய சரக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 27-ந்தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை இந்தோனேசியா நிறுத்தி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நிலக்கடலையை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்திய நிலக்கடலையில் அதிக அளவு "அஃபிளாடாக்ஸின்" என்ற விஷப்பொருள் இருப்பதால் இந்த தடையை விதிப்பதாக இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. அஃபிளாடாக்ஸின் B1 என்பது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஒரு முக்கிய ரசாயனம் என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கடந்த 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் உத்தரவு ஏழு நாட்களுக்குப் பிறகு (செப்டம்பர் 3) அமலுக்கு வரும் என்று இந்தோனேசிய தனிமைப்படுத்தல் ஆணையம் (IQA) தெரிவித்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் வரை பில்களுடன் கூடிய சரக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், ஏற்றுமதிகள் இந்தோனேசியாவிற்குள் நுழையும்போது ஆய்வு மற்றும் மறு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்தோனேசிய எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
    • இது அந்த நாட்டின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் உள்ள எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இது அந்த நாட்டின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

    இதுதவிர பல்வேறு சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களது சம்பளத்தைக் குறைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

    எனவே போராட்டத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பதியில் ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவானது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று மதியம் 1:54 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

    ஏற்கனவே இந்தோனேசியாவில் கடந்த 7-ம் தேதி 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறியது.
    • அதில் இருந்து வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை.

    1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

    அந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. அதன்படி லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

    இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது. எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது.

    எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ×