search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Landslide"

    • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது, பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
    • அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.

    தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால், அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    நிலச்சரிவால் அழிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் எட்டு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டான். இதுதவிர, அருகிலுள்ள நகரமான சாண்டானா டோ பரைசோவில் மற்றொரு உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நகரின் பெத்தானியா பகுதியில் உள்ள மலையின் ஓரத்தில் உள்ள ஒரு தெருவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவு அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.

    அவரின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீட்கப்பட்டனர். 

    • தமிழ்நாட்டில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
    • மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

    வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயரை தாங்கியபடி வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் இருந்து கண்ணாமூச்சி காட்டியபடியே பயணித்தது.

    முதலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என நினைத்து, வலுஇழந்து, மீண்டும் உதயமாகி முன்பை காட்டிலும் வலிமையுடன் கடலில் நிலை கொண்டிருந்தது.

    புயல் உருவாவதில் எப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியதோ? அதேபோல், கரையை கடப்பதிலும் தன்னுடைய ஆட்டத்தை காட்டியது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி, மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக வைத்து கடந்த நவ.30-ந்தேதி புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.

     

    கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.

    தமிழ்நாட்டில் 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் 'ஃபெஞ்சல்' புயல் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சாலைகள் வெள்ளக்காடானது. ஊத்தங்கரை பகுதியில் மட்டும் 50 சென்டி மீட்டர் மழை பெய்ததால் ஊத்தங்கரை நகரை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது.

     

    கடலூர் தென்பெண்ணையாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    குறிப்பாக ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரிக்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார்கள், மினி வேன்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அந்த சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதேபோல ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினார்கள்.

    இதேபோல் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. கலெக்டர் பங்களாவுக்குள்ளேயே வெள்ளம் புகும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.

     

     

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி. நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

    இந்த மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு குடியிருப்புகளுக்கு மேல் தொங்கியவாறு நின்றது. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலை ஆஸ்பத்திரிக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு, மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த துணை முதலமைச்சர், இறந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
    • மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் புயல் மழை காரணமாக பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர்.

    இதனைத் தொடர்ந்து மகா தீப மலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    மகாதீப தரிசனத்திற்காக ஆண்டு தோறும் 2500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டும் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

    மகா தீப மலையில் பல இடங்களில் ஈரப்பதம் இருப்பதால் பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழு மூலமாக நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

    மகா தீப மலையில் ஈரப்பதம் 900 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.

    வழக்கம்போல் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப கொப்பரை, நெய், காடா துணி சுமார் 30 கிலோ கற்பூரம் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இதற்கு கோவில் ஊழியர்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை.

    இது குறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கூலி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
    • நன்றி கூறியபடி விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், கூலி படத்தின் படப்பிடில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். சில தினங்களில் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்-க்கு அங்கிருந்த ரசிகர்கள், செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அனைவருக்கும் நன்றி கூறியபடி விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த்-இடம் செய்தியாளர்கள் திருவண்ணாமலை மண் சரிவில் ஏழுபேர் உயிரிழந்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதை கேட்ட ரஜினிகாந்த் எப்போ நடந்தது, ஓ மை காட் - எக்ஸ்ட்ரீம்லி சாரி என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.
    • மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா?

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வ.உ.சி.நகரில் வசித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில் 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியது.

    தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    மலையில் ஏற்பட்ட மண் சரிவினால் மகாதீபத்தின்போது மலைக்கு செல்லும் 2,500 பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் வனத்துறையினர் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு மேற்கொண்டனர்.


    இதுபற்றி அவர்கள் கூறுகையில், மலையேறும் முக்கிய பாதைகளான கந்தாஸ்ரமம் பாதை, முலைப்பால் தீர்த்த பாதை, அரைமலை பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டு புதைக்குழி போல் காட்சி அளிக்கிறது.

    மலையேறும் அனைத்துப் பாதைகளும் மண் சரிந்து உள்ளது. ஆபத்தான சூழலில் 200 மற்றும் 300 டன் எடை கொண்ட பாறைகள் ஆபத்தான நிலையில் நிற்கின்றன. குறிப்பாக மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    மலை உச்சியில் தீபம் ஏற்றும் சமயத்தில் மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறையினரின் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புவியியல் வல்லுனர்கள் அண்ணாமலையார் மலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்த பின்னர் கொடுக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் மலையேறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.

    ஆண்டிற்கு ஒருமுறை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தின்போது மலைஏற அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன.
    • தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ந்தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால் தரைவழி துண்டிக்கப்பட்டதால் மாநில பேரிடர் குழு, தேசிய பேரிடர் குழு, இந்திய ராணுவ விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது. இதனிடையே வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    இதனிடையே, நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு ரூ.2000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனறு பிரதமர் மோடிக்கு கேரள மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது.

    இந்த கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து வந்த பதில் கடிதத்தில், நாட்டில் எந்தவொரு பேரிடரையும் தேசியப்பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் விதிமுறைகளில் இடமில்லை.

    மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 2024-25ம் ஆண்டில் கேரள அரசுக்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடி இரு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரளத்திடம் போதிய நிதி கையிருப்பு உள்ளது' என்று தெரிவித்து இருந்தது.

    இந்த நிலச்சரிவு மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் பேரிடர் நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டு நிலையில், மத்திய அரசு எந்த கூடுதல் நிதியையும் வழங்காமல் நிலச்சரிவின் போது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் மேற்காண்டதற்காக கேரள மாநிலத்து வழங்க வேண்டிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.153 கோடியை மத்திய அரசு பிடித்தம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
    • 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

    திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது.

    இந்த நிலையில் அண்ணாமலையார் என பக்தர்களால் அழைக்கப்படும் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.

    அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அதுமட்டுமின்றி அத்துடன் பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன

    அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.

    இந்த மண் சரிவில் புதைந்து 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். அது காண்போர் அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.

     

    இந்நிலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி அஞ்சலி செலுத்தினர்.

    7 பேரின் உடலை பார்த்து அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார். உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    • லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
    • மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து பலியான மேலும் 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.

    இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர். 

    • மண் சரிந்து பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.

    சென்னை:

    திருவண்ணாமலையில் மண் சரிந்து 7 பேர் பலியானார்கள் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், தொடர் மீட்பு பணி நடைபெற்ற போதும் துருதிஷ்டவசமாக 7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியால் வேதனை அடைந்தேன். மண் சரிந்து பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

    நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.

    • மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
    • உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த 7 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், ஒரு சிறுவன் உட்பட்ட மூவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதப்படும் வேளையில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய சூழல்களில் துரிதமாக செயல்பட்டு, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    • பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அதி மிக கனமழை பெய்தது. இதனால் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் சிக்கிய நிலையில் அவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.

    இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×