என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி, குன்னூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு; 3 கார்கள், லாரி சேதம்
    X

    ஊட்டி, குன்னூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு; 3 கார்கள், லாரி சேதம்

    • சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த கனமழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சாலையில் விழுந்தன.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மண்சரிவில் சிக்கி கொண்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண் திட்டுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அங்கு போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதேபோன்று குன்னூர்-கொலக்கெம்பை, சேலாஸ் செல்லும் சாலையில் 7 இடங்கள், குன்னூர்-ஊட்டி சாலையில் 4 இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கனமழைக்கு குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதேபோன்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையோரம் நின்றிருந்த 3 கார்கள் மீது மண் குவியல் விழுந்து கார்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன. அங்குள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது. இதனால் ரெய்லி காம்பவுண்ட் மற்றும் மாடல் அவுஸ் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    மேலும் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் குன்னூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முதல் இன்று காலை வரை மின்வினியோகம் தடைபட்டது.

    இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்தது.

    ஊட்டி, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    குன்னூர்-215, கோத்தகிரி-114, குன்னூர் புறநகர்-90, கீழ்கோத்தகிரி-73, கெத்தை-66, கிண்ணக்கொரை-63, பாலகொலா-60, கொடநாடு, குந்தா-51, பர்லியார்-46, ஊட்டி-37.4 அளவு மழை பெய்துள்ளது.

    Next Story
    ×