search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் சரிவு"

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்றிரவும் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

    குன்னூர் மவுண்ட் ரோடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கீழ்புறம் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்றிரவு ஜெயலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார். இரவில் மழை பெய்து கொண்டே இருந்ததால் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து ஜெயலட்சுமி எழுந்து வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக கதவை திறந்தார்.

    அப்போது கனமழைக்கு அவரது வீட்டின் முன்பு இருந்த மண் திட்டு எதிர்பாராத விதமாக சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் ஜெயலட்சுமி மண்சரிவில் சிக்கி, மண் முழுவதுமாக அவரை மூடியது. ரவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள அறையில் இருந்ததால் காயமின்றி உயிர் தப்பினர்.

    பயங்கர சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் ரவி அறையை விட்டு வெளியில் வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் முழுவதும் மண் சரிந்தும், அதில் மனைவி சிக்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, வீட்டின் முன்பு இருந்த மண் திட்டுகளை அகற்றி ஆசிரியை ஜெயலட்சுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆசிரியை ஜெயலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வீட்டிற்குள் இருந்த ஆசிரியையின் கணவர் ரவி மற்றும் குழந்தைகளும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டனர். இரவில் மண்சரிந்து பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    குன்னூரில் பெய்த மழைக்கு காட்டேரி, டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

    குன்னூர் ஆப்பிள் பி சாலையில் நள்ளிரவில் மழைக்கு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விடிய, விடிய பெய்த மழையால் மின்தடையும் ஏற்பட்டது.

    இதனால் குன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    ×