உதகை மண் சரிந்து விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
உதகை மண் சரிந்து விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டனர்.

மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35) சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com