search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை: கொடைக்கானல் சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
    X

    3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை: கொடைக்கானல் சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு

    • மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கன மழையாக வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரம் இடை விடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ஏரிச்சாலை, கலையரங்கம், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த திடீர் மழையினால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். மாலையில் பெய்த மழையினால் அவர்கள் விடுதிக்கும் திரும்ப முடியாமல் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் தவித்தனர். மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    செண்பகனூர் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வத்தலக்குண்டு மலைச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நகராட்சி மண் அள்ளும் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட மண் சரிவுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், ஒரு சில நாட்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்கு பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியிலும் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே கன மழை சீசனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    கொடைக்கானலில் ஒரே நாளில் 5 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×