search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy rains"

    • ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
    • கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இன்று காலை முதலே வானம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 8.30 மணி முதல் சாரலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. இதனால் பணிக்கும், அலுவலகங்களுக்கும் புறப்பட்டு சென்றவர்கள் அவதி அடைந்தனர். ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    உடன்குடி மற்றும் சுற்றுப்புறபகுதியான பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, செட்டியாபத்து. லட்சுமிபுரம், மருதூர்கரை, பிச்சிவிளை, வட்டன்விளை, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய கடும் சிரமப்பட்டனர். இதனால் முக்கியமான பஜார் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், நங்கைமொழி, மாநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


    மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள விஜிகுமரன்நகர் பகுதியில் தேங்கிய தண்ணீரை 3 மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் ஷாலோம் நகரில வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியை பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு செய்து வருகிறார். கடந்த மாதம் பெய்த கனமழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து 25 நாட்கள் ஆகியும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் சுமார் 100-க்கு மேற்பட்டோர் நிவாரன முகாம்களிலும், சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுவையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று காலை மழை இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக இருண்டு காணப்பட்டது. நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலை வெளிச்சம் இன்றி இருண்டு காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். இதேபோல பல்கலைக் கழகமும் கனமழையை ஒட்டி விடுமுறை அறிவித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நகரையொட்டி உள்ள பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இப்பகுதிகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.


    முட்டளவு மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாய்க்கால்களில் மழைவெள்ளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

    நகர பகுதியில் உள்ள சில சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடியது. மழையினால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    • மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது.

    சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் கீழ்வேளுர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.
    • விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டிய கன மழையால் களக்காடு தலையணையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    அணை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 36 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,753 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.29 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,980 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் மாஞ்சோலை நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதியில் இருந்தே சுமார் 2 மாதங்களாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து பார்வையிட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காக்காச்சியில் 52 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 48 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 51 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று காலையில் புலியருவி, ஐந்தருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் தடை நீடிக்கிறது.

    காலை முதல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடனா, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் அந்த அணைகளுக்கு வரும் நீரானது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கனமழை, வெள்ளத்தால் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர்வு ஒத்திவைப்பு.
    • ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.

    வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18-ந்தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தன.

    மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. இதனால் பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும்,

    6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

     10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4-ந்தேதி அறிவியல், 6-ந்தேதி கணக்கு தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு, 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

    6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.
    • திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன.

    தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிக கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ள பெருக்காலும், பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.

    கேம்பலாபாத், நாணல் காடு மற்றும் ஆறாாம் பண்ணையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

    பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அந்த அமைப்பு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன. வெள்ள பெருக்கால் அந்த பகுதியை விட்டு செல்ல முடியவில்லை.

    இதனால் ஆம்னி பஸ்சில் இருந்து பயணிகள் தவித்தனர். அங்குள்ள நகராட்சி சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழக அமைப்பினர் சார்பில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வெள்ளம் வடிந்த பிறகு ஆம்னி பஸ்கள் அங்கிருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த 2 நாட்களாக நிவாரணம் வழங்கப்பட்டன.

    வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மேலப்பாளையம், பர்கிட் மாநகரம், ஆறாம் பண்ணை, பேட்டை, கொங்கராயக்குறிச்சி,தூத்துக்குடி, நெல்லை ஜங்ஷன், பாட்ட பத்து ஜங்ஷன், செய்துங்க நல்லூர், கோயில்பத்து, மெலசெவல்,கொழுமாடை, பத்தமடை, கணேஷ்புரம், புளியங்குடி, சுசீந்தரம், ஆகிய பகுதிகளில், சுமார் 10000-க்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருதல், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பது, மருத்துவமனைகளில் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கான பிரட், பால் வழங்குவது என பல பணிகளை செய்தது.

    • நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • கனமழையால் நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னை:

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியாக நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • நெல்லை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • கனமழையால் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • அவசர கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
    • நாளைக்கு பின் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    அதி கனமழை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், நீடித்து வரும் கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுதாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

    அவசர கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    நாளைக்கு பின் மழை படிப்படியாக குறையும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • மீட்புப் பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் விரைந்துள்ளன.

    சென்னை:

    அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

    நெல்லை, கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி-நாகராஜன், நெல்லை-செல்வராஜ், தூத்துக்குடி-ஜோதி நிர்மலா, தென்காசி-சுன்சோங்கம் ஜதக் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் விரைந்துள்ளன என தெரிவித்தார்.

    மிக கனமழை எச்சரிக்கையால் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதி. பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவசர உதவிக்கு 1070, 1077, 94458 69848 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    • நெல்லை, கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

    இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது
    • அருவிகளில் குளிக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல்தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    இதே போல மேற்கு தொடர்ச்சி அணை பகுதியில் கனமழை பெய்வதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் வழித்தடத்தில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அருவிகளில் குளிக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×