என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு- காஷ்மீரில் மேக வெடிப்பால் கனமழை: 3 பேர் உயிரிழப்பு
    X

    ஜம்மு- காஷ்மீரில் மேக வெடிப்பால் கனமழை: 3 பேர் உயிரிழப்பு

    • மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராம்பன் மாவட்டம் பக்னா கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது.

    இதனால் அங்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து ஓடியதால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.

    செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

    நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களுக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

    மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி-பனிஹால் இடையே பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.

    நிலச்சரிவால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, "ராம்பனில் ஏற்பட்ட துயரமான நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளன. உடனடி மீட்பு முயற்சிகளை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

    இன்று மாலை, மறுசீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்டவற்றை நான் மதிப்பாய்வு செய்வேன். பயண ஆலோசனைகளை கடைபிடிக்கவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அத்தியாவசியமற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும் மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×