search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagercoil"

    • அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை.
    • வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    மேலும் குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
    • போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.

    சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

    அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.8,

    பெருஞ்சாணி 32.4,

    சிற்றார் 1-16.4,

    சிற்றார் 2-18.2,

    கன்னிமார் 6.2,

    கொட்டாரம் 3,

    மயிலாடி 4.8,

    நாகர்கோவில் 5.4,

    பூதப்பாண்டி 12.4,

    முக்கடல் 10.4,

    பாலமோர் 52.4,

    தக்கலை 10,

    குளச்சல் 5,

    இரணியல் 6,

    அடையாமடை 21,

    குருந்தன்கோடு 3.8,

    கோழிப்போர்விளை 12.4,

    மாம்பழத்துறையாறு 6.4,

    களியல் 18.6,

    குழித்துறை 12.4,

    புத்தன் அணை 29.2,

    சுருளோடு 6.2,

    ஆணைக்கிடங்கு 5,

    திற்பரப்பு 14.8,

    முள்ளங்கினாவிளை 14.8.

    • குளோரின் கலனில் இருந்து திடீரென வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான குளோரின் கலனில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து குளோரின் கசிவால் 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர். 

    இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.

    • அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

     அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.

    பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.

    • நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
    • சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.

    எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.

    • கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 5 பேர் தவிர 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார், பெரியவிளை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் விஜிகுமார் (வயது 26).

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரியவிளையை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண் குமார் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இன்று பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ், பெரியவிளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண்குமார் உட்பட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். இதில் இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரிய விளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மீதமுள்ள 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேலும் பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷுக்கு கொலை முயற்சி வழக்குக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழிமறித்து தாக்குதல் குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார்.

    தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.

    நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி சரோஜா (வயது 55). இவர், தென்னந்தோப்புகளில் தேங்காய் வெட்டு நடக்கும்போது தேங்காய் எடுப்பதற்காக செல்லும் தொழிலாளி ஆவார். இவர் நேற்று காலை மங்காவிளை நெடுவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கு வெட்டி போட்ட தேங்காயை எடுத்துக் கொண்டு இருந்தார். தென்னந்தோப்பின் நடுவில் 40 அடி ஆழ கிணறு இருந்தது.

    தேங்காய் எடுத்து கொண்டிருந்த சரோஜா கிணறு இருப்பதை கவனிக்கவில்லை. அதே சமயத்தில் கிணற்றின் தடுப்பு சுவரும் உயரம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் சரோஜா எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. விழுந்த அதிர்ச்சியில் அவர் அங்கேயே மயங்கி விட்டார். இதனால் அவர் கிணற்றில் விழுந்தது, முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. சிறிது நேரம் கழித்த பின்னர் தான் சரோஜா கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை சக தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.

    பின்னர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த சரோஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் இறங்குவதற்கு படிக்கட்டுகள் இல்லாததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    40 அடி ஆழ கிணறு

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் சரோஜாவை ஒரு வலையில் தூக்கி வைத்து மேலே கொண்டு வந்தனர். இந்த மீட்பு போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. கிணற்றில் விழுந்ததில் சரோஜாவுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிணற்றில் விழுந்த சரோஜாவை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-நாகர்கோவில் (12689/12690) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒரு முறை மட்டுமே சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே ரெயிலும் இதுதான். இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த ரெயில் பேருதவியாக இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே வாரத்திற்கு 3 முறை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலில் இருந்து புறப்படும் ரெயில் திருச்சிக்கு செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக புறப்படும் ரெயில் திருச்சி செல்லாமல் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலுக்கு வந்தடையும். தெற்கு ரெயில்வேயின் எதிர்வரும் கால அட்டவணையில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    நாகர்கோவிலில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #MKStalin
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரிக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளைவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

    பின்னர் அவர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வருகிறார். நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள பயோனியர் பாரடைஸ் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் ஸ்டாலின் நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறார். #LokSabhaElections2019 #MKStalin

    நாகர்கோவில் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அரசு பஸ்சில் கொண்டுவந்த ரூ.52½ லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி தொகுதியில் 54 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நிலையான கண்காணிப்பு அதிகாரி சரஸ்வதி தலைமையிலான குழுவினர் இன்று காலை நாகர்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது பஸ்சில் இருந்த 2 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் வைத்திருந்தவர்கள் மதுரையை சேர்ந்த கனகராஜ், திண்டுக்கல்லை சேர்ந்த முகமது அனிபா என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 2 பேரும் பணத்தை துணியில் கட்டி இடுப்பில் சுற்றி வைத்திருந்தனர். அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    கனகராஜிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரமும், முகமது அனிபாவிடம் இருந்து ரூ.30 லட்சமும் சிக்கியது. பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இருவரிடமும் இல்லை. அந்த பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு வரப்பட்டது. ஹவாலா பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.52½ லட்சம் பணத்தை கண்காணிப்பு குழுவினர் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரூ.28 லட்சத்து 66 ஆயிரத்து 855-ம், குளச்சல் தொகுதியில் ரூ.2 லட்சமும் சிக்கி உள்ளது.

    இதுவரை மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் கன்னியாகுமரி தொகுதியில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 190-ம், நாகர்கோவில் தொகுதியில் ரூ.39 லட்சத்து 8 ஆயிரமும், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளியும், 4 கார்களும், குளச்சல் தொகுதியில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்து 200, 288 கிராம் நகையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.59 லட்சத்து 22 ஆயிரத்து 561-ம், 39 கிராம் தங்கம், 11 வாகனங்களும், விளவங்கோடு தொகுதியில் ரூ.5 லட்சத்து 66 ஆயிரமும், கிள்ளியூர் தொகுதியில் ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 750 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் இன்று காலை வரை குமரி மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 701 ரொக்கப்பணமும், 327 கிராம் தங்கமும், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. #LokSabhaElections2019

    நாகர்கோவிலில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். #RahulGandhi #MKStalin
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு நாள் குறித்து விட்டது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தென்கோடி முனையான நாகர்கோவில் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி நாளை காலை சென்னை வருகிறார். அங்கு ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டம் முடிந்ததும், விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் புறப்படுகிறார்.

    நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரி மைதானத்தில் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் வந்திறங்க தளம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 2 மணிக்கு வந்து சேரும் ராகுல்காந்தி அங்கிருந்து நேராக விழா மேடைக்கு செல்கிறார்.

    தொடர்ந்து கட்சியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    காங்கிரஸ் நடத்தும் இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் நாகர்கோவிலில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலினும், கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.



    இதுபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

    நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டமே தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார கூட்டமாக அமைகிறது. இதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அவரவர் கட்சி தலைவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்காட் கல்லூரி மைதானத்தை சுற்றிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கூட்டணி தலைவர்கள் அமரும் மேடை வித்தியாசமாக திறந்தவெளி மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேடையில் அமரும் தலைவர்களை தொண்டர்கள் மேடையின் 3 புறத்தில் இருந்தும் பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

    கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் அமர தனித்தனி இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உயர் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். 2 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #RahulGandhi #MKStalin
     
    ×