என் மலர்
நீங்கள் தேடியது "Nia investigation"
- காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. டிஜி மற்றும் ஐபி தலைவர் இன்று கூடுகின்றனர்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.
உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. ஒரு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி.க்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, என்ஐஏ ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் செயல்படும்.
இன்று, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, டெல்லி காவல்துறை மற்றும் அரியானா காவல்துறையினரிடமிருந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தொடர்பான அனைத்து வழக்கு ஆவணங்களையும் என்.ஐ.ஏ. கைப்பற்றும்.
கூடுதலாக, இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. DG மற்றும் IB தலைவர் இன்று கூடுகின்றனர்.
- ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்.
- விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.
நாகர்கோவில்:
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய, அவர்களது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் மூலம் யார் யாருடன் பேசினார்கள்? சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் பின் தொடர்ந்தனர்? மேலும் யாரெல்லாம் கைதானவர்களை பின் தொடர்ந்தார்கள்? என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்தது.
அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் வாலிபரின் வீட்டை கண்டறிந்து சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் இல்லை.
அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். வாலிபரை பற்றி அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை நடைபெற்றது.
அப்போது வாலிபர் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வாலிபரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
- தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3டி வரைபடம், 40-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.
புதுடெல்லி:
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடா்ந்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உண்டாகும் சூழலுக்கு காரணமான இந்த தாக்குதல் வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) கடந்த 27-ந் தேதி ஏற்றது. தாக்குதலை தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகள் குறித்து தகவல்களை சேகரிக்க 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஐ.ஜி. தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டு அவா்கள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. தலைமை இயக்குனர் சதானந்த் தாத்தே நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்தது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மூலம் இந்த சதி திட்டத்தை ஐ.எஸ்.ஐ. நடத்தியதாக தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டி என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
என்.ஐ.ஏ. விசாரணையில் இந்த தாக்குதலில் 5 முதல் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், இவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளான ஹாஷ்மி மூசா என்கிற சுலைமான், அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், தங்குமிடம், வழி, உளவு பார்த்தல் உள்ளிட்ட விவரங்களை உள்ளூர் தொழிலாளர்களிடம் பெற்றதும் தெரிய வந்தது.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3டி வரைபடம், 40-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. 3 செயற்கைகோள் தொலைபேசிகள் செயல்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இரண்டு தொலைபேசியில் இருந்து சிக்னல்கள் கண்டு பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு 24-ந் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நள்ளிரவில் நடைபெறும் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் 8-வது நாளாக தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டது. குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்கினார்கள். இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.
- குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
- ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.
தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபர் தஹாவூர் ராணா, ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தால் 18 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்டு ராணா பாட்டியாலா என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19 இல் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச்தேவா, ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், காவலில் இருக்கும் போது தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
இருப்பினும், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) இந்தக் கோரிக்கையை எதிர்த்தது, நடந்து வரும் விசாரணையை மேற்கோள் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவுர் ராணா குடும்பத்தினருடன் பேச அனுமதி மறுத்து அவரது மனுவை நிராகரித்தார்.
- லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
- தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்.ஜ.ஏ. காவல் அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து அவர் என்.ஐ.ஏ. தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராணாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியின் நம்பிக்கைக்கு உரியவராக ராணா திகழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அன்று தொடங்கிய அவர்கள் நட்பு தொழிலில் பங்குதாரராக ஆகும் அளவுக்கு விரிவடைந்தது. பின்னர் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு முன்பாக துபாயை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை ராணா சந்தித்து சதிதிட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? அவருக்கும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ராணாவிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர்.
அப்போது அவரை பற்றிய பல்வேறு விவரங்களை ராணா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மும்பை தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் ராணா தனது மனைவியுடன் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர், ஆக்ரா மற்றும் டெல்லி, கேரள மாநிலம் கொச்சி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் அவர் தனது மனைவியுடன் தங்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
அவர் இந்தியாவை வேவு பார்க்க வந்து இருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக ராணாவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான ராணாவும் கூட்டு சதியில் ஈடுபட்டார்.
- 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின் நேற்று அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணா கை கால்களில் விலங்குடன் நாடுகடத்தப்பட்ட 2 புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.


இதற்கிடையே ராணா நாடுகடத்தல் குறித்து வாஷிங்க்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பேசினார்.
"2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அவரது பங்கிற்கு நீதியை எதிர்கொள்ள ஏப்ரல் 9 ஆம் தேதி, அமெரிக்கா தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.
அதிபர் டிரம்ப் கூறியது போல், உலகளாவிய பயங்கரவாதக் கொடுமையை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 25). இவர் சேலம் கோட்டை அருகே உள்ள சின்னசாமி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரை கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆசிக்கிற்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆசிக் தலைமறைவாகிவிட்டார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.
மேலும் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஆசிக் வசித்து வந்த பகுதியில் உள்ள மக்களிடம் அவருடைய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவற்றை பதிவு செய்து கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
பெங்களூரு:
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. ஓட்டலில் கை கழுவும் இடத்திற்கு அருகே ஒரு பையில் இந்த குண்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும், பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் மற்றொரு புறம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடித்தது எந்த வகையான வெடிகுண்டு?, என்னென்ன பொருட்களை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்பட்டது?, இந்த குண்டு எந்த பயங்கரவாத அமைப்பினர் தயாரித்தது? என்பது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நிபுணர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும், மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அதுபோன்று, பெங்களூரு சர்ச்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கிய வெடிப்பொருட்களே, ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிவமொக்கா மாவட்ட ஆற்றுப்பகுதியில் பயங்கரவாதி ஷாரிக் மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து பயிற்சி பெற்றிருந்தனர். இந்த சம்பவத்திற்கும், தற்போது ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த ஆதாரங்கள் மூலமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்திற்கு சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் ஓட்டல் குண்டுவெடிப்பில் சிக்கிய டெட்டனேட்டர்கள், பேட்டரி, நட்டு, போல்ட்டுகள் ஆகியவையும், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் ஒன்று போல் இருப்பதை தடய அறிவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்யும் முன்பாகவே வெடித்திருந்தது.
ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குக்கர் வெடிகுண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி வெடிகுண்டை தயாரித்து, டைமர் மூலம் வெடிக்க செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவரில் 2 குண்டுகளை வைத்து, அதற்கு டைம் செட் செய்து வெடிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையான வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நிபுணத்துவம் பெற்றதும், அவர்கள் தான் ஓட்டலில் குண்டுகளை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.
ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக முதல் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரியது பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சிவகுமார், அவர்கள் ராஜினாமாவை விரும்புகிறார்களா? அவர்கள் கேட்கும் ராஜினாமாவை அவர்கள் விரும்பியபடி அனுப்புவோம். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் வெறும் அரசியல் செய்து வருகின்றனர். பெங்களூருவின் இமேஜை கெடுக்கின்றனர். அவர்கள் காலத்தில் கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.
அவர்கள் கர்நாடகாவை காயப்படுத்தவில்லை. மாறாக நாட்டையும், தங்களையும் காயப்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.
- பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார்.
- கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.
பெங்களூரு:
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் ஓட்டல், அரசு பஸ்களில் மர்மநபர் பயணம் செய்த போது சிக்கிய வீடியோ காட்சிகள் மூலமாக, அவரது உருவப்படங்கள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மர்மநபர் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் குண்டுவெடிப்பு நடந்து 11 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார். அதன்பிறகு, மர்மநபர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. கல்யாண கர்நாடக மாவட்டங்களான ராய்ச்சூர், கலபுரகியில் மர்மநபர் பதுங்கி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மர்மநபர் கலபுரகியில் இருந்து ஐதராபாத் அல்லது மும்பைக்கு தப்பித்து சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றாரா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களிலும் குண்டுவெடிப்பு குற்றவாளியை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்திய மர்மநபர் யார்? என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர், கர்நாடகத்தை சேர்ந்தவர் தான் என்றும், பிற மாநிலங்களை சேர்ந்தவர் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதற்கு முன்பு கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மூலமாக வந்த உத்தரவை தொடர்ந்து ஓட்டல் குண்டுவெடிப்பை மர்மநபர் அரங்கேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி குண்டுவெடிப்பு நடந்திருந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குண்டுவெடிப்பை நடத்தியது யார்?, அந்த நபருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட பிற தகவல்களை வைத்து குண்டுவெடிப்பை நிகழ்த்திய மர்மநபர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அடையாளத்தை வைத்து குண்டு வெடிப்பு குற்றவாளி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கூடிய விரைவில் குண்டு வெடிப்பு குற்றவாளி கைது செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
- சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில், சபீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.
கோவை:
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் தாகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அதிரடி சோதனையும் மேற்கொண்டனர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
கோவை சாய்பாபா காலனி பெரிய கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜாபர் இக்பால். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கர்நாடக போலீசார் காரில் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயில், கதவுகள் அனைத்தையும் யாரும் உள்ளே நுழையாதவாறு அடைத்தனர். தொடர்ந்து ஜாபர் இக்பாலின் வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக, அங்குலம் அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த ஜாபர் இக்பாலிடமும் விசாரித்தனர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.
இதேபோல் அவரது வீட்டின் அருகே உள்ள அவரது உறவினரான டாக்டர் நயன் சாதிக்கின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 10.20 மணிக்கு முடிவடைந்தது. சோதனையின் முடிவில் 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செல்போனில் உள்ள தரவுகளை ஆராய்ந்து சோதனை செய்து விட்டு திரும்ப ஒப்படைப்பதாக கூறி விட்டு சென்றனர். மேலும் அவர்கள் 2 பேரையும் வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இங்கு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.






