என் மலர்
உலகம்

பயங்கரவாதி ராணா நாடுகடத்தல் குறித்து அமெரிக்கா அறிக்கை.. புதிய புகைப்படங்கள் வெளியீடு
- பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான ராணாவும் கூட்டு சதியில் ஈடுபட்டார்.
- 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.
தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின் நேற்று அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணா கை கால்களில் விலங்குடன் நாடுகடத்தப்பட்ட 2 புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ராணா நாடுகடத்தல் குறித்து வாஷிங்க்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பேசினார்.
"2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அவரது பங்கிற்கு நீதியை எதிர்கொள்ள ஏப்ரல் 9 ஆம் தேதி, அமெரிக்கா தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.
அதிபர் டிரம்ப் கூறியது போல், உலகளாவிய பயங்கரவாதக் கொடுமையை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






