என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deportation"

    • 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
    • இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.

    2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

    இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். 

    • சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
    • கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு  ஆயுள் தண்டனை பெற்றார்.

    எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அவர் குற்றவாளி என கடந்த காலங்களில் 2 முறை தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குற்றவாளி அல்ல என புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் விடுவிக்கப்பட இருந்த நிலையில், 20 வயதில் சுப்பிரமணியத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டை காரணம் காட்டி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

    இந்தநிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்ரமணியத்தை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். 

    குடியேற்ற வழக்குகளுக்கான மேல்முறையீட்டு வாரியம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வரை அவர் நாடு கடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சுப்ரமணியம் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அவரிடம் நிரந்தர அமெரிக்க குடியுரிமை இருந்தபோதிலும் அவரை நாடு கடத்தி டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

    • பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
    • தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றது முதல் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் செயல்முறையில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    நாடுகடத்தப்படுபவர்கள் கைவிலங்கிடப்பட்டு மோசமாக நடத்தப்படுவது குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,790 இந்தியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுகடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், " இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் 29 வரை, தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 2,790க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் " என்று தெரிவித்தார்.

    இதேபோல் பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

    • விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்.
    • புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

    5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இந்த மதிப்பாய்வில் யாராவது விசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

    அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகளும் உன்னிப்பாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? அவர்கள் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறார்களா? விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது போன்ற பிரச்சினைகளை அதிகாரிகள் ஆராய்வார்கள்.

    இதற்காக, விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள், அவர்களின் சொந்த நாடுகளில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் அமெரிக்காவில் அவர்களின் நடத்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்குக்கும் அதிகமான விசாக்களை, குறிப்பாக மாணவர் விசாக்களை நான்கு மடங்கு அதிகமாக ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 6,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த இந்திய மாணவர் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டார்.
    • இந்திய மாணவர் குற்றவாளியை போல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜூன் 7 அன்று, குணால் ஜெயின் என்ற இந்திய அமெரிக்க தொழிலதிபர், இந்த கொடூர சம்பவத்தை தனது செல்போன் கேமராவில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

    உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த மாணவர், கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார். கண்ணீர் விட்டு அழுத போதும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் , வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி, இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பதிவில், "அமெரிக்கா தனது நாட்டிற்கு சட்டப்பூர்வ பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது, சகித்துக்கொள்ளவும் மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளது.

    அமெரிக்காவின் நெவார்க் நகரில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டு கிடக்கும் வீடியோ வைரலான நிலையில் அமெரிக்க தூதரகத்தின் இந்த எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்களை கை மற்றும் கால் விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய மாணவர் ஒருவர் கொடூரமாக தரையில் வீசப்பட்டு, அவரது கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிவைக்கப்பட்ட வீடியோ வைரலானது.
    • இந்தியர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது பிரதமரின் பொறுப்புகளில் மிக முக்கியமான அம்சம்

    வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கத் தவறியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    அமெரிக்காவில் நியூ யார்க் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளர்களால் இந்திய மாணவர் ஒருவர் கொடூரமாக தரையில் வீசப்பட்டு, அவரது கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிவைக்கப்பட்ட வீடியோ வைரலானது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் மோடி பெரும்பாலும் இந்தியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தவறிவிடுகிறார்.

    வரலாற்றில் முதல் முறையாக, ஒரு வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் கூறுகிறார். அமெரிக்காவில் இந்தியர்கள் அவமதிக்கப்பட்டாலும் பிரதமர் மோடி அமைதியாக உள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

    இந்தியர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது பிரதமரின் பொறுப்புகளில் மிக முக்கியமான அம்சம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி உடனடியாக அதிபர் டிரம்பிடம் பேச வேண்டும் என்று அவர் கோரினார். 

    • அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது.
    • கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர்  குற்றவாளியைப் நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜூன் 7 அன்று, குணால் ஜெயின் என்ற இந்திய அமெரிக்க தொழிலதிபர், இந்த கொடூர சம்பவத்தை தனது செல்போன் கேமராவில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

    உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த மாணவர், கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார். கண்ணீர் விட்டு அழுத போதும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் , வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி, இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோருகின்றனர்.

    முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்களை கை மற்றும் கால் விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது. 

    வெளியுறவு அமைச்சகத்தின்படி, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், ஜனவரி 2025 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 1,080 இந்திய குடிமக்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.

    • இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
    • இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு ராணுவ விமானத்தில் நாடுகடத்தப்பட்டது மத்திய அரசின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், புலம்பெயர்ந்தோர் விவகாரங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது.

    சட்டவிரோத வகையில் வசிக்கும் அல்லது பயணிக்கும் இந்திய குடிமக்களை நாடு கடத்தும் விஷயத்தில், அவர்களை பற்றிய விவரங்களை பெற்றதும், நாங்கள் அவர்களை அமெரிக்காவிலிருந்து திரும்ப அழைத்து கொள்கிறோம்.

    ஜனவரி 2025-ல் இருந்து, 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர்" என்று தெரிவித்தார்.

    • ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது.
    • ஷமீமாவும் அவரது கணவரும் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து அதைப் பெற்றனர்.

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பிரிவுகளின் கீழ் சிலரைத் தவிர, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 அன்று ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது.

    இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ஜவானை மணந்த பாகிஸ்தானிய பெண்ணான மினல் கான் நாடு கடத்தப்படுகிறார்.

    ஜம்முவிலிருந்து தனது சொந்த நாட்டிற்கு செல்ல அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    கரோட்டாவில் தனது கணவர் முனீர் கான் மற்றும் குழந்தைகளுடன் மினல் கான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜம்முவிலிருந்து வாகா எல்லைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

    நாடு கடத்தப்படுவது குறித்து பேசிய மினல் கான், கணவன் மற்றும் குழந்தைகளிடம் இருந்து தன்னை பிரிக்க வேண்டாம் அரசாங்கத்தை வலியுறுத்தினார். மேலும் தாக்குதலில் அப்பாவிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மற்றோரு புறம் ஜம்மு காஷ்மீரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில், கான்ஸ்டபிள் முதாசிர் அகமது ஷேக்கின் தாயார் ஷமீமா அக்தரும் ஒருவர்.

    கான்ஸ்டபிள் முதாசிர் அகமது, மே 2022 இல் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இரகசியக் குழுவின் ஒரு நடவடிக்கையில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது கொல்லப்பட்டார்.

    முதாசிருக்கு மரணத்திற்குப் பின் சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது, ஷமீமாவும் அவரது கணவரும் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து அதைப் பெற்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானியர் என்ற காரணத்தால் ஷமீமா அக்தரும் நாடுகடத்தப்படுகிறார். ஷமீமா அக்தர் காஷ்மீரில் 45 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஆவார். இவர்களை போல பலர் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டு வருவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  

    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான ராணாவும் கூட்டு சதியில் ஈடுபட்டார்.
    • 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

    தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின் நேற்று அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணா கை கால்களில் விலங்குடன் நாடுகடத்தப்பட்ட 2 புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

     

     இதற்கிடையே ராணா நாடுகடத்தல் குறித்து வாஷிங்க்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பேசினார்.

    "2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அவரது பங்கிற்கு நீதியை எதிர்கொள்ள ஏப்ரல் 9 ஆம் தேதி, அமெரிக்கா தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது

    இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.

    அதிபர் டிரம்ப் கூறியது போல், உலகளாவிய பயங்கரவாதக் கொடுமையை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரியில் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்

    கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் மசூதிகளில் ஜும்மா தொழுகையைத் தடுக்க முயன்றதாகக் பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீமன் ஓவைசி கடுமையாக சாடினார்.

    ஒரு கூட்டத்தில் பேசியிருந்த ஓவைசி, "சிலர் உங்களுக்கு இவ்வளவு பயமாக இருந்தால், நீங்கள் தொழுகை செய்ய வேண்டாம், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    எங்கள் மசூதிகளை மூடியதைப் போல, எங்களை நாங்களும் மூடிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல. ஒரு முதலமைச்சர் (யோகி ஆதித்யநாத்) ஜும்மா தொழுகையை வீட்டிலும் நிறைவேற்றலாம் என்று கூறினார். நாங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல அவர் யார்? என்று பேசியிருந்தார்.

    உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்ட வட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி, ஹோலி வண்ணங்களால் சங்கடப்படுபவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியதை ஓவைசி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் ஒவைசி கருத்துக்கள் குறித்து பேசிய தெலுங்கானா பாஜகவை சேர்ந்த கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங், அசாதுதீன் ஓவைசி அரசியல் ஆதாயங்களுக்காக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது, தெலுங்கானாவில் தனது கட்சி(பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஓவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார். ஓவைசிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறிய ராஜா சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

    தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி நாடுகடத்தப்படுவர் என பாஜக எம்எல்ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    • கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.
    • வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்

    புதுடெல்லி:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

    2018ம் வருடம் கனடாவிற்குள் நுழைந்த தாங்கள் அனைவரும், படிப்பையும் முடித்து, நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நேரத்தில், கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    நாங்கள் முதலில் சேருவதற்காக வந்த கல்லூரியில் இடமில்லாததால், அதே பல்கலைக்கழகத்தின் வேறு கல்லூரிகளில் முகவர்கள் இடம் மாற்றி தந்ததாகவும், 3-4 வருடங்கள் கடந்த பின்னர், பட்டப்படிப்பும் முடிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமந்தீப் சிங் எனும் மாணவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    சேமிப்பு அனைத்தையும் செலவிட்டு கனடாவில் கல்வி பயில வந்ததாகவும், இந்த அறிவிப்பு பல மாணவ-மாணவியரின் மனநலத்தையும் பாதித்திருப்பதாகவும், ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும், இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு கனடா அரசுடன் பேச வேண்டும் என்றும் லவ்ப்ரீத் சிங் எனும் மற்றொரு மாணவர் தெரிவித்தார்.

    மாணவர்கள் கனடா செல்வதற்காக வீடு, நிலங்களை விற்று, நிறைய பொருட்செலவு செய்துள்ளனர் என்றும் அவர்கள் மிகப் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தலையீட்டை கோரியிருப்பதாகவும் பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்தார்.

    ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுமார் 700 மாணவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் உடனடியாக தலையிட்டு, கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் இவ்விஷயத்தை எழுப்பி துரிதமாக தீர்வு காண வேண்டும் என தாலிவால் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே இப்பிரச்சனையில் கனடாவிலுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசியபோது, மாணவர்களின் நாடு கடத்தலை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ட்ரூடோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதுதான் அரசின் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களை பழி வாங்குவதல்ல என கூறியுள்ளார்.

    இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் அரசும் கேட்டுக்கொண்டுள்ளது

    ×