search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha"

    • மத்திய மந்திரிகள் இருவர் உள்பட 12 பேர் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர்.
    • மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக எல். முருகன் உள்ளார். இவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மொத்தம் 12 பேர் இன்று மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் போட்டியிடவில்லை. தற்போது ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    எல். முருகன் நீலகிரி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர்.
    • முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார்.

    1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாளையுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

    மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர். 

    • 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
    • பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

    அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
    • மத்தியபிரதேசத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வானார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்

    இந்நிலையில், ஜே.பி.நட்டா இன்று குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    • சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
    • அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்காக அவர் மனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் இருந்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானார்.

    சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி இருக்கிறார்.

    • தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது
    • பிரதமர் மோடி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்

    வரும் ஏப்ரல்-மே மாத இடையில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த ஜனவரி 31 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இக்கூட்டத்தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்று நடைபெற்றது.


    இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" என தெரிவித்தார்.

    இதையடுத்து, பட்ஜெட் தொடர் நிறைவடைந்து, முதலில் மக்களவையும், பிறகு மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

    இத்துடன் 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரும் நிறைவுக்கு வந்தது.

    மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 17-வது அவையில், கடந்த 5 வருட காலங்களில், 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
    • அப்போது பேசிய அவர், இந்த நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பொருத்தது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு இன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குறிப்பாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சி பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.

    எத்தனையோ நெருக்கடிகள், அடக்குமுறைகள் மற்றும் பல இன்னல்களைச் சந்தித்தோம். ஒருமுறை குஜராத் மாநிலத்தில் இயற்கை பேரழிவு ஏற்பட்டது. அப்போது பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. குஜராத் பூகம்ப பாதிப்புகளைகூட அப்போது பிரதமர் பார்க்க வரவில்லை.

    இயற்கை பேரிடர்களில் முதல் மந்திரியாக நான் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறேன். அதனால் இன்றும் எனது தாரக மந்திரம் இந்தநாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பொருத்தது. அதனால் இந்தப் பாதையில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.

    அதன்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களுக்கு நிதி பகிர்வு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் வளர்ச்சி தடைபட்ட மாநிலங்கள் சமநிலை பெறமுடியும் என குறிப்பிட்டார்.

    • பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 சீட்டுகள் கூட வெல்லாது என ஒரு அறைகூவல் வந்துள்ளது.
    • ஒரு பெரிய கட்சி, எத்தனை வருடம் ஆட்சியில் இருந்த கட்சி. இந்தக் கட்சி எப்படி கீழே விழுந்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீங்கள் (காங்கிரஸ்) சென்ற முறை செய்தது போல இந்தமுறை செய்வீர்கள் என்றால் அதற்கு நானும் தயாராக வந்துள்ளேன். சென்ற முறை எனது பேச்சுக்கு எதிராக 2 மணி நேரம் நீங்கள் என்ன கொடுமை செய்தீர்கள். நாடு அதை பார்த்துக் கொண்டிருந்தது. நானும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 சீட்டுகள் கூட வெல்லாது என இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு அறைகூவல் வந்துள்ளது.

    என்னுடைய பிரார்த்தனை என்னவென்றால் குறைந்தபட்சம் நீங்கள் 40 இடங்களாவது வெல்ல வேண்டும். இன்று என்னவெல்லாம் பேசப்பட்டது என்று நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்வேன்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கே பேசியதையும், இங்கே பேசுவதையும் கேட்டேன். என்னுடைய நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.

    எதிர்க்கட்சியின் காலக்கெடு முடிந்துவிட்டது.

    ஒரு பெரிய கட்சி, எத்தனை வருடம் ஆட்சியில் இருந்த கட்சி. இந்தக் கட்சி எப்படி கீழே விழுந்துவிட்டது. ஆனால் இந்தநோயாளிக்கு டாக்டர் என்ன செய்வார், பாவம். நோயாளிக்கு...நான் மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    மிகப்பெரிய பேச்சுக்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய படிப்பை இழந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சியான நீங்கள் 40 இடங்களாவது வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.
    • காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது. டஜன் கணக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்த கட்சி தான் இந்தக் கட்சி.

    இதே காங்கிரஸ் கட்சி தான் இந்த நாட்டின் ஜனநாயகத்தை, மக்களவையின் மாண்பை ஜெயிலுக்கு தள்ளி பூட்டியவர்கள். இதே காங்கிரஸ் கட்சி தான் நாட்டை துண்டாடவும் பல பணிகளைச் செய்தது. இப்போது வடக்கு இந்தியா, தென் இந்தியா என பிரிப்பதற்கான பேச்சுக்களை பேசிவருகிறது.

    இந்த காங்கிரஸ் இன்று நமக்கு பாடம் எடுக்கிறது. இந்த காங்கிரஸ் அரசு பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தன்னுடைய பயனுக்காகப் பயன்படுத்தியது.

    காங்கிரஸ் ஆட்சியில் தான் நக்சல்வாதம் என்பது பெரும் வெற்றி பெற்றது. உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பாதுகாப்பு பற்றி பாடம் எடுக்கிறது. தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டுமா? அல்லது விவசாயி வளர்ச்சி அடையவேண்டுமா? என்ற தன்னுடைய குழப்பத்திலேயே காலத்தை காங்கிரஸ் கடத்திவிட்டது.

    10 ஆண்டுகளில் 12-வது இடத்தில் இருந்த பொருளாதார நிலையை 11-வது இடத்திற்கு நாங்கள் எடுத்துவந்தோம். 11- ல் இருந்து 10 வருவது மிகப்பெரிய செயல் அல்ல.

    இந்த காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கை பற்றி மிகப் பெரிய பேச்சுகளை எல்லாம் பேசினார்கள். இவர்கள் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு முயற்சி செய்யவில்லை.

    ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு தர முயற்சி செய்யவில்லை. பாபா சாகேப் அம்பேத்கரை பெருமைப்படுத்த முயலவில்லை. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 'பாரத ரத்னா' விருதுகளை தன்னுடைய குடும்பத்தாருக்கு கொடுத்தார்கள்.

    காங்கிரஸ் கட்சி தன்னுடைய தலைவரை பற்றி எந்த உத்தரவாதம் இல்லையோ, அவர்கள் மோடியின் உத்தரவாதம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.

    ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எங்களுடைய 10 ஆண்டுகால வளர்ச்சியை உலகம், நாடு ஏன் அப்படி ஒரு பார்வை பார்க்கிறது.நாங்கள் சொல்லியதால் எதுவும் நடக்கவில்லை.

    நாங்கள் செய்த பல நல்ல பணிகளின் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாங்கள் அவர்களை எந்தவிதமான குற்றமும் சொல்லவில்லை. அவர்களுடைய கட்சிக்காரர்களே அவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை சொல்லி இருகிறார்கள்.

    சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவை உறுப்பினர்கள் நம்முடைய நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது, ஜிடிபி வளர்ச்சி குறைந்துவிட்டது, விலைவாசி சில வருடங்களாக அதிகரித்தே வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருகிறது என்கின்றனர்.

    இது பாரதிய ஜனதா கட்சி பேச்சு அல்ல. என்னுடைய பேச்சு அல்ல. இது 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் கூறிய வார்த்தைகள்.

    இப்போது இரண்டாவதாக ஒரு பேச்சு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

    நாடு முழுவதும் மக்கள் கோபம் அடைந்து இருக்கிறார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்ற கோபம் இருக்கிறது. இதையும் டாக்டர் மன்மோகன் சிங் சொன்னார்.

    ஊழல் பற்றி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வரி வசூலில் ஊழல் நடக்கிறது. இதற்காக ஜி.எஸ்.டி. கொண்டு வரவேண்டும். ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகிப்பதில் ஊழல் நடக்கிறது.

    இதனால் ஏழை மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள். இதனை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவையும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் சொன்ன வார்த்தைகள்.

    அப்போது வேறொரு மாதிரி சொன்னார். இந்தியாவில் இருந்து தலைநகர் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் போனால் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது. தங்களுக்கு உள்ள குறை மட்டும் தெரிந்திருந்தது. ஆனால் வைத்தியம் என்ன என்று தெரியவில்லை.

    மந்தம் மற்றும் மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தைப் பா.ஜ.க. கடுமையான உழைப்பின் மூலமாக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளோம் என தெரிவித்தார்.

    • டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி பரிந்துரை
    • ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆதிமியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

    டெல்லி கலால் ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்யசபா நியமனத்திற்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட அனுமதிக்குமாறு திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது

    தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டார், ஆசிட் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளில் ஸ்வாதி மாலிவால் முக்கிய பங்கு வகித்தார்

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களிலும் ஆம் ஆத்மி 62 இடங்களை கொண்டிருப்பதால், ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த 10 பேர் மேலவையில் உள்ளனர். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளது.

    • நீண்ட விவாதத்திற்கு பின் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியது.
    • ஏற்கனவே மக்களவையிலும் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேறியது.

    புதுடெல்லி:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பாராளுமன்ற நிலைக்குழு (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது.

    இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த 3 மசோதாக்களும் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் இருந்த நிலையில் இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று 3 திருத்தப்பட்ட சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நீண்ட நேரம் விவாதம் நடத்தினார். இதன் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் 3 மசோதாக்களும் நிறைவேறின. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    • மிமிக்ரி செய்கையை ராகுல் படம் பிடிக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது
    • வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் நீங்கள் விவாதிக்கவில்லை என்றார் ராகுல்

    கடந்த டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அலுவல் நேரத்தில் கோஷங்களை எழுப்பினர்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக கூறி அவர்கள் கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டனர்.

    இரு அவைகளிலும் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது வரை 140க்கும் மேல் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று புதிய பாராளுமன்றத்தின் "மகர் துவார்" பகுதியில் பெரும்பாலான எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பேனர்ஜி, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் பேசுவதை போல் மிமிக்ரி செய்து காண்பித்தார். அதை பல எம்.பி.க்கள் நகைச்சுவையுடன் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தியும் தனது மொபைல் போனில் படம் பிடித்தார்.

    இவையனைத்தும் சமூக வலைதளங்களில் பரவியது.

    நேற்று மதியத்திற்கு பின் அவை கூடிய போது, தன்னை மிமிக்ரி செய்ததையும் அதனை வீடியோ படம் எடுத்ததையும் குறித்து துணை ஜனாதிபதி மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்தார்.

    அவையில் இருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் "என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என மூத்த அரசியல்வாதியான உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்" என கூறினார்.

    மேலும், பிரதமருடனும் பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய ஜக்தீப்பிற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி தனக்கு எதிராக தேவையற்ற விமர்சனங்களை கிளப்புவதாக ஊடகங்களை விமர்சித்தார்.

    ராகுல் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    யாரை யார் அவமானப்படுத்தினார்கள்? எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர். ஊடகங்களும் வீடியோ எடுத்தன; நானும் வீடியோ எடுத்தேன். என் வீடியோ எனது மொபைலில்தான் உள்ளது.

    சுமார் 150 எம்.பி.க்கள் அவைக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர். அதை குறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    அதானி குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை. ரஃபேல் குறித்தும் விவாதிக்கவில்லை.

    நாடு முழுவதும் பாதித்துள்ள வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது; அது குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைந்த மனதுடன் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களாகிய நீங்கள் மிமிக்ரி சம்பவம் குறித்து மட்டுமே விவாதிக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×