என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல்"

    • உத்தவ் லால் ஜோஷி என்ற முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சிகிச்சைகாக வந்திருந்தார்..
    • வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் முதியவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

    ஏப்ரல் 17 அன்று நடந்த இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

    உத்தவ் லால் ஜோஷி என்ற அந்த முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.

    மற்ற அனைவரையும் போல வரிசையில் நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாக மருத்துவர் வந்து தன்னைத் தாக்கியதாக அவர் கூறுகிறார்.

    அவர் ஊடகத்திடம் கூறியதாவது, ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் என்று மருத்துவர் கூச்சலிட்டார். விளக்க முயற்சிக்கும்போது மருத்துவர் தன்னை தாக்கி வெளியே  இழுத்துச் செல்ல முற்பட்டார் என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்த 500 ரூபையை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார், பாஸ் பண்ணிவிடுங்க.
    • நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க.

    கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு SSLC தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் விடைத்தாளில் பணதை இணைத்து வைத்த கோரிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தகவலின்படி, சில மாணவர்கள் "பாஸ் பண்ணுங்க, என் காதல் உங்கள் கையில் தான். நான் பாஸ் ஆனால்தான் என் காதல் தொடரும்" என்ற கோரிக்கைகளை எழுதி வைத்துள்ளனர்.

    அதில் ஒரு மாணவர் ரூ.500 பணத்தை விடைத் தாளில் இணைத்து, "இந்த 500 ரூபையை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார், பாஸ் பண்ணிவிடுங்க" என கேட்டுள்ளார்.

    மேலும், "நீங்க பாஸ் பண்ணினா பணம் தர்றேன்" என்று சில சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் எழுதி வைத்துள்ளனர்.

    ஒரு மாணவர், "நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க" என எழுதியுள்ளார்.

    • அந்த சிகரெட்டை டாக்டர் பற்ற வைக்கிறார்.
    • டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.

    உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவர் சுரேஷ் சந்திரா, சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி சிகரெட் பிடிக்க வைத்துள்ளார்.

    சிகெரட்டை சிறுவனிடம் கொடுத்து அவனின் வாயில் வைக்க சொல்லி, அந்த சிகரெட்டை டாக்டர் பற்ற வைக்கிறார். பின் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்
    • பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல.

    சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு அவர் கையாண்ட வழிமுறை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.

    இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட  சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.

    அவர் தனது பதிவில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் ஊழியர்களை சின்ன சின்ன விஷயங்களுக்காக பாராட்டுவதால் கூட பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கும். பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும் என்று நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏஞ்சலாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

    • வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
    • ஆறு அறைகளில் இதை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வெயிலின் தாக்கத்தை தணிக்க வகுப்பறையில் பசுவின் சாணம் கொண்டு பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் வகுப்பறை சுவரில் மாட்டுச் சாணத்தை பூசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் அந்த வீடியோவை கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வகுப்பறைகளை குளிர்விக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி இந்த முயற்சி என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் எதிர்மறை கருத்துக்களை குவித்து வருகிறது. வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே இதுகுறித்து பேசிய வத்சலா, "இது சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி.

    ஆறு அறைகளில் இந்த பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் மாட்டு சாணம் அல்ல. மாட்டு சாணம், மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர் மற்றும் முல்தானி மண் ஆகியவற்றைக் கலந்து இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதனுடன், அறையின் வெப்பநிலையை அளவிடுவதற்கான உபகரணங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    • கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா
    • கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.

    அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த எல்லப்பா கால்நடை மருத்துவரை அழைத்தார்.

    கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெயடுத்து வருகிறது.  

    • இதை வெறும் கண்களால் காண முடியும்.
    • வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும்.

    இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும். எனவே இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.

    வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.

    வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. இதன் பின்னணியிலேயே PINK MOON என்று பெயர் வந்தது.  

    • அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது.
    • சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் தனது காதலியை சூட்கேசில் அடைத்து தான் தங்கியிருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலுள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஆனால் அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது. சத்தம் கேட்டவுடன் செக்யூரிட்டிகள் மாணவனைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    தற்போது வைரலாகி வரும் காணொளியில், காரிடாரில் வைத்து சில காவலர்கள் ஒரு பெரிய சூட்கேஸைத் திறப்பதைக் காணலாம். சூட்கேஸ் திறந்ததும், அதனுள் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள்.

    அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியைத் தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர். இணையத்தில் பரவி வரும் இந்த காணொளி அனைவரிடையேயும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

    • பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.
    • கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்தது.

    கேரளாவில் அரசு ஊழியர் துறைத் தேர்வில், செம்பருந்து பறவை தேர்வரின் ஹால்டிக்கெட்டை தூக்கிச் சென்ற விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று அரசு ஊழியர் துறைத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன் காலை 7.20 மணியளவில் தேர்வறைக்கு வெளியே படித்துக்கொண்டிருந்த பெண் தேர்வரிடம் இருந்து ஹால்டிக்கெட்டை பருந்து பறித்துப் கொண்டு பறந்தது.

     ஹால்டிக்கெட்டை பிடித்தபடி பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.

    கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்து, ஹால்டிக்கெட்டை பல நிமிடங்கள் பிடித்துக் கொண்டிருந்தது.

    இருப்பினும் தேர்வு தொடங்கும் முன் அந்த பருந்து இறுதியில் ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால் அந்த பெண் தேர்வர் குறித்த நேரத்தில் தேர்வு எழுத முடிந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

    • பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
    • போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரால்களுக்கு உள்ளாகி வருகின்றன.

    கொளுத்தும் வெயிலுக்கு பீகார் அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் கொடுத்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த சுரேந்திர மேத்தா விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வாட்டி வதைத்து வரும் சுரேந்திர மேத்தா தனது பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள அஹியாபூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட கம்பளிப் போர்வைகளை விநியோகித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.

    தான் செய்த நற்காரியத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மேத்தா, "உலகின் மிகப்பெரிய கட்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வோடு செயல்படும் பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கோவிந்த்பூர்-2 பஞ்சாயத்தின் அஹியாபூர் கிராமத்தில் இன்று கொண்டாடப்பட்டு, மக்களுக்கு போர்வைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அவர் போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. 

    • தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா?
    • நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது ஓய்வு நேரங்களில் பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.

    இந்த விடயம் கடந்த வாரத்தில் இருந்து பயங்கர வைரலாகி வந்தது. மேலும் சமூக ஊடககங்களிலும் நெட்டிசன்கள் இதுகுறித்து தீவிரமாக விவாவித்து வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஊழியர் குறித்து பெண் ஒருவர் போட்ட பதவு மேலும் வைரலாகி வருகிறது.

    அதாவது," அதிகமான மக்கள் கிக் வேலையை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

    மேலும் " நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?" என்றும் அவர் தனது பதிவில் வினவியிருந்தார்.

    உண்மை கசக்கும் என்பதற்கிணங்க இந்த பதிவு குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். 

     

    • திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
    • பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர்.

    பெங்களூருவில் ஒரு பெண் இரவில் வெறிச்சோடிய தெருவில் நடந்து சென்றபோது மர்ம நபரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் தனது பெண் தோழியுடன் மங்கலான வெளிச்சம் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்து செல்லும் போது, மர்ம நபர் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான்.

    திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர். பின் பயத்தில் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.

    இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் நேற்று இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறை வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    ×