என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beggar"

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லெக்ராஜ் இறந்து போனார்.
    • இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

    அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்தவர் லெக்ராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரபரப்பான ரெயில்வே சாலை மற்றும் ஹனுமன் கோவில் ஆகிய இடங்களில் பிச்சை எடுத்து வந்தார்.

    அழுக்கான கிழிந்த உடைகள், தளர்வான முகம் மற்றும் பழைய 3 சக்கர மிதிவண்டியில் சென்று பிச்சை எடுப்பது வழக்கம். இவருக்கு கடந்த 9-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு தொண்டு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் லக்ராஜை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லெக்ராஜ் இறந்து போனார். இதையடுத்து தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்பாலா போலீசார் லெக்ராஜின் 3 சக்கர சைக்கிளை சோதனை செய்தனர். சைக்கிளின் பின்புறம் இருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் அந்த பெட்டியில் இருந்த இந்தியன் வங்கி கணக்கு அட்டையை சோதனை செய்தபோது அதில் ரூ.3.32 லட்சம் இருந்தது. இதனை கண்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

    • மத்திய பிரதேச அரசு பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
    • உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ளார்.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்கிலால் என்ற உடல் ஊனமுற்ற நபர் பிச்சை எடுத்து கோடீஸ்வரரான சம்பவத்தை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு தலையே சுற்றியுள்ளது.

    சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

    மங்கிலால் என்பவர் பிச்சை எடுத்து மூன்று கான்கிரீட் வீடுகள், மூன்று ஆட்டோக்கள், மாருதி சுசுகி கார் என கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

    தன்னிடம் உள்ள வீடுகளையும் கார், ஆட்டோக்களையும் வாடகை விட்டு பணம் சம்பாதிக்கும் அவர், வட்டிக்கு பணம் கொடுத்தும் உதவுகிறாராம்.

    இவர் தினமும் கடைவீதிகளில் மக்களிடமிருந்து 400-500 ரூபாய் வரை வசூலிக்கிறாராம். உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ள அவர், தொடர்ச்சியாக பிச்சை தொழிலை விடாமல் செய்துவருகிறார்.

    • அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
    • இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.

    பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் இளைஞர் அண்மையில் ரெயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ரெயிலில் பயணித்த சில நபர்கள் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகவும், சங்கடமான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.

    இதனைக் கண்ட கோலு யாதவ் உடனடியாக அப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டினார்.

    அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அந்தப் பெண்ணைத் தன்னுடன் பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் இளைஞர் தெரிவித்தார்.

    அவரது மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்த அனாதைப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.

    நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

    மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.       

    • மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.
    • விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன.

    பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி செல்வப்பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.

    டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்?

    என்னை 'பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை' என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன.

    விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.

    எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார்.
    • தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், 'ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க' என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு அனுப்பி தர்மபிரபுவாக திகழ்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

    தனது 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி முழு நேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன்.

    தற்போது முதலமைச்சர் நிவாரணநிதிக்கு பணம் வழங்குவற்தகாக வந்துள்ளேன். வாழ்க்கையை நடத்த ஓரளவுக்கு பணம் இருந்தால் போதும். மிச்சப்பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்? மிகவும் சிரமப்பட்ட காலத்தில் குடும்பம் நடத்துவதற்காக யாசகம் பெற்றேன். தற்போது எனக்காகவும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காகவும் யாசகம் பெற்று அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன் என்றார்.

    பின்னர்தான் கொண்டு வந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாமக்கல் கலெக்டர் ஸ்ரோயா சிங்கிடம் வழங்கினார்.

    • சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார்.
    • ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி.

    இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுத்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் கவுரவ தலைவர் கவுதம் ரெட்டியிடம் வழங்கினார்.

    இது குறித்து கவுதம் ரெட்டி கூறுகையில், யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 நன்கொடையாக வழங்கி உள்ளார் தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார் என்றார்.

    யாதி ரெட்டி கூறுகையில் கோவில் முன்பாக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் போனக்கல்லை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் போனக்கல்லில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

    அசோக் பிச்சை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக ரூ.50 ஆயிரம் வரை சேமித்து வைத்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனக்கல்லில் நரசிம்ம ராவ் என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் உணவு சாப்பிட சென்றார். அப்போது நரசிம்ம ராவ் அசோக்கிடம் தனக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. கடனாக கொடுத்தால் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறினார்.

    இதனை நம்பிய அசோக் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை நரசிம்மராவிடம் கொடுத்தார். பணம் கொடுத்ததற்கான ஆதாரமாக பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தொழிலதிபர் நரசிம்ம ராவிற்கு ரூ.2.75 கோடிக்கு கடன் இருப்பதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை திருப்பி தர முடியாது என தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    பின்னர் கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் பிச்சைக்காரர் அசோக்கிற்கும், நரசிம்ம ராவ் திவால் நோட்டீஸ் அனுப்பினார்.

    நோட்டீசை கண்ட அசோக் கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது. தொழிலதிபரை நம்பி பணம் கொடுத்ததால் தனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.

    • பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்.
    • நான் பேராசைக்காரன் இல்லை. கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்.

    இன்றைய காலக்கட்டத்தில் உழைத்தாலே, தினமும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தே, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது அவர் தான் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டு இருக்கிறார்.

    அவரது பெயர் பாரத் ஜெயின் (வயது 54). மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தினமும் 12 மணி நேரம் பிச்சை எடுப்பாராம். அதன் மூலம் தினசரி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 வரை கிடைக்குமாம்.

    ஒரு ரூபாய் பிச்சை போட்டாலும், அதனை இன்முகத்துடன் வாங்கி கொள்வாராம். மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறார்.

    பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இதுதவிர 2 கடைகளையும் வாங்கி இருக்கிறார். அந்த கடைகள் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவரது 2 பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர், இனியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பாரத் ஜெயின், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.

    இது குறித்து அவர் கூறும் போது, 'நான் பேராசைக்காரன் இல்லை. நான் தாராளமாக வாழ்கிறேன். கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்' என்று கூறுகிறார்.

    இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை பிச்சை எடுக்கும் தொழிலில் நிதி புரள்கிறது. மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். லட்சுமி தாஸ் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி இருக்கிறது.

    "என்னைப் பார்த்தால் பேசாமல் பிச்சை எடுக்கலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று கர்வத்துடன் கூறுகிறார் பணக்கார பிச்சைக்காரர் பாரத் ஜெயின்.

    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
    • பிச்சை எடுத்த பணத்தில் ஐபோன் வாங்கியதாக பிச்சைக்காரர் தெரிவித்தார்.

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிச்சைக்காரர் ஒருவர் ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 ஐ வாங்கியதாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஆப்பிள் நுண்ணறிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வைத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் பேசிய பிச்சைக்காரர், "இந்த ஐபோன் 16 ஐ நான் மொத்தமாக ரொக்கப்பணம் கொடுத்து வாங்கினேன்" என்று தெரிவித்தார்.

    மேலும், அந்த வீடியோவில், 'ஒருவர் பிச்சைக்காரரிடம் எப்படி இந்த ஐபோனை வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு அவர் பிச்சை எடுத்ததில் கிடைத்தது' என்று தெரிவித்தார்.

    அதே சமயம் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருதரப்பினர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிச்சைக்காரர் ஒருவர் நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #GajaCyclone
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப்பொருள்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நமது மேட்டுப்பாளையம் அமைப்பு மற்றும் அனைத்து பொதுநல அமைப்பினர் இணைந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பந்தல் அமைத்து நிவாரணப் பொருள்களை சேகரித்து வருகின்றனர். அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் நிவாரணத் தொகைகளையும் பொருள்களையும் வழங்கி செல்கின்றனர்.

    நேற்று இரவு மாற்றுத்திறனாளி முதியவர் தயங்கியபடி நிவாரணத்தொகை சேகரிக்கும் மையம் முன்பு நின்றார். அங்கிருந்தவர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.

    அதற்கு அவர் நான் ஒரு பிச்சைக்காரன். பிச்சையாக கிடைத்த பணத்தில் சாப்பிட்டதுபோக 12 ரூபாய் மீதம் உள்ளது. அதனை புயல் நிவாரணத்திற்கு தர விரும்புகிறேன். அதனை வாங்கிக்கொள்வீர்களா? என்று கேட்டார். நெகிழ்ச்சியடைந்த முகாமில் உள்ளவர்கள் கண்டிப்பாக வாங்கிக்கொள்கிறோம் என்று கூறினர். மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரர் பையில் வைத்திருந்த 12 ரூபாயை கொடுத்தார்.

    விசாரித்ததில் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (வயது70) என்பது தெரியவந்தது. #GajaCyclone
    திருவண்ணாமலையை சேர்ந்த கை, கால் இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்கினர். #KeralaFloods #KeralaFloodRelief
    திருவண்ணாமலை:

    கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். அம்மாநில மக்களின் துயர் துடைக்க, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கேரள மக்கள் படும்பாட்டை அறிந்த திருவண்ணாமலையை சேர்ந்த தொழுநோயாளிகள் சிலரும் மற்றும் பிச்சைக்காரர் ஒருவரும் நிவாரண தொகை அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மல்லவாடியில் தொழுநோய் இல்லம் உள்ளது. இங்கு 70 முதல் 80 வயதுடையவர்கள் 36 பேரும், 15 வயது மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களும் உள்ளனர்.

    இவர்கள், கேரள மக்கள் வெள்ளப்பாதிப்பால் தவிப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தனர். மேலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் கேள்விப்பட்டனர்.

    இதையடுத்து, தொழு நோயாளிகள் 38 பேரும் சேமித்து வைத்திருந்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக கொடுத்தனர்.

    அதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் 2 கைகள், ஒரு காலை இழந்து பிச்சை எடுக்கும் ஏழுமலை (45) என்பவரும் தன்னுடைய ஒருநாள் வசூல் தொகையான 100 ரூபாயை கேரள நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார்.

    திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவுக்கு நிவாரண தொகை வழங்கிய காட்சி.

    தொழுநோயாளிகள் மற்றும் ஒரு பிச்சைக்காரர் கொடுத்த மொத்த தொகை ரூ.1135-ஐ திருவண்ணாமலை சமூக சேவகர் மணிமாறன் பெற்று, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

    அத்தோடு, சமூக சேவகர் மணிமாறன் தனது பைக்கை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ளார். இதுப்பற்றி அந்த சமூக சேவகர் கூறியதாவது:-

    பிச்சைக்காரர் ஏழுமலை ஆரம்பத்தில் கட்டுமான வேலை செய்தார். சென்டரிங் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலைக்கு 2 கைககள் மற்றும் ஒரு கால் முழுவதும் துண்டானது.

    கை, கால் இல்லாமல் அவதிப்படும் அவர், வாழ வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மனைவியும் உள்ளார். ஒரு நாள் பிச்சை எடுத்தால் 100 ரூபாய் கிடைப்பதே அரிது.

    அந்த சிறு தொகையில் தான் அவரும், அவருடைய மனைவியும் சாப்பிட வேண்டும். இந்த ஒரு சூழ்நிலையில் கேரள மக்கள் படும்பாட்டை எண்ணி வருத்தமடைந்தார். தன் பங்களிப்பாக ஒரு நாள் பிச்சையெடுத்ததில் வசூலான 100 ரூபாயை கொடுத்துள்ளார் என்றார்.

    சமூக சேவகர் மணிமாறன், கடந்த 16 ஆண்டுகளாக சுயமாக இயங்க முடியாத கை, கால்களை இழந்தவர்கள், தொழு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

    இதற்காக மத்திய-மாநில அரசுகளிடம் இருந்தும் அவர் விருது பெற்றுள்ளார். கை, கால்களை இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் கேரள நிவாரணம் வழங்கியிருப்பது உதவியே செய்யும் குணமே இல்லாத கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய செய்துள்ளது.  #KeralaRain #KeralaFloods
    பெற்ற பிள்ளைகள் 9 பேர் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட 95 வயது மூதாட்டியை சமூக ஆர்வலர் மீட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை கொழிஞ்சாறையை சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி அந்தோணியம்மாள். இவரது கணவர் தேவராஜ்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அந்தோணியம்மாள் தேவராஜை பார்த்து கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காட்பாடியில் உள்ள தனது மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு அந்தோணியம்மாள் வந்தார். அவரை மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நந்தகுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதற்கு பிறகு மகள் ஜெய்சிராணி அந்தோணியம்மாளை கவனிக்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்த அந்தோணியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அவரது மகள் வாங்கி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்தததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து பணிவிடை செய்து வந்தார்.

    இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் மூதாட்டியை அழைத்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

    அதில் அந்தோணியம்மாளுக்கு உணவு தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து கலெக்டர் ராமன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்து முதியோர் காப்பகத்தில் மூதாட்டியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    எங்களுக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சிலர் இறந்து விட்டனர். தற்போது 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும், எனது கணவரையும் பார்த்துக் கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. எனது மூத்த மகளை வேலூர் காட்பாடியை சேர்ந்த நந்தகுமார் என்ற போலீஸ்காரருக்கு திருமணம் செய்து வைத்தேன். இதையடுத்து அவர் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி, வேலூர் அழைத்து வந்தார்.

    என்னையும் அவரது தாய் போல் அரவணைத்து பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பின்பு எனது மகளும், என்னை கைவிட்டு விட்டார். நான் அனாதையானேன். வேலூர் நகரில் பிச்சை எடுத்துத் தான் சாப்பிட்டு வந்தேன். இதுவரை எனது மகன்கள் என்னை பார்க்கவரவில்லை.

    நான் சிறிது, சிறிதாக சேர்த்து வைத்த பணத்தையும் எனது மகள் அவ்வப்போது வந்து வாங்கிச் சென்று விடுவாள். சில மாதங்களுக்கு முன்பு நான் கீழே விழுந்தேன். இதனால் எனது கால்கள் முறிந்து விட்டன. எழுந்து நடக்க முடியவில்லை. பிச்சை எடுக்கக்கூட என்னால் எங்கும் செல்ல முடியவில்லை.

    தற்போது நான் தங்கியிருக்கும் இடத்தில், ஒரு பெண் தான் என்னை தாய் போல் பார்த்துக் கொள்கிறாள். நான் இயற்கை உபாதைகளை கழித்தால், முகம் சுழிக்காமல், என்னை சுத்தப்படுத்துவாள். சாகும் வரை நான் அவளுடன் இருந்து கொள்கிறேன். நான் இறந்தால் பெற்ற பிள்ளைகளோ, பேரன்களோ யாரும் வரவேண்டாம் என்றார். அப்போது அவர் அவரையும் அறியாமல் கதறி அழுதார்.

    சமூக சேவகர் மணிமாறன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தோணியம்மாள் இறந்து விட்டதாக பொய்யான தகவல் கொடுத்தோம். அப்போது நேரில் வந்த உறவினர்கள் இவர் உயிரோடு இருப்பதை பார்த்து எங்களை திட்டினர். இறந்தால் சொல்லி அனுப்புங்கள். அவரை எங்களுடன் அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் என்றார். 
    ×