என் மலர்
நீங்கள் தேடியது "கேரளாவில் கனமழை"
- தொடர் மழை காரணமாக நேற்று இரவு மூணாறு பகுதியில் 2 இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
- குண்டலா அணை மற்றும் மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு மூணாறு பகுதியில் 2 இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. குண்டலா அணை மற்றும் மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
குண்டலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த வழியே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில் ஒரு வாகனம் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில் இருந்து 3 வாகனங்களில் சிலர் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். அந்த வாகனங்களில் ஒன்று தான் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அந்த வாகனம் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் டிரைவர் ரூபாஷ் (வயது 40) மட்டுமே இருந்துள்ளார். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் மூணாறு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் காட்டு யானைகள் அடிக்கடி வரும் பிரதேசத்தில் சுற்றுலா வாகனம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இருப்பினும் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக இரவில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர். மாயமான டிரைவர் ரூபாஷ் கதி என்ன? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூணாறு-வட்டவாடா சாலையில் வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
- வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
இதன் காரணமாக வருகிற 4-ந் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
இதுபோல வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி கேரள கடல் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள்.
- மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
- கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வருகிற 11-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதை தொடர்ந்து கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.
- பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
- கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாலக்காடு வடக்கஞ்சேரியில் தென்னை மரம் விழுந்ததில், தங்கமணி என்பவர் உயிர் இழந்தார்.
கனமழை காரணமாக மத்திய கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பலத்த காற்று காரணமாக பல மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தப்படி உள்ளன.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு இருவஞ்சி புழாவில் ஒருவரும், மலப்புரம் அமரம்பலத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கனமழை நீடிப்பதால் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பெரியாறு, முத்திரபுழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- கோட்டையம், திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்து உள்ளன.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 1,023 வீடுகள் பகுதி அளவிலும், 51 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை படகுகள் மூலமாக மீட்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்போதைய நிலவரப்படி 7,850 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கோட்டையம், திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழைக்கு மேலும் 8 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களை தவிர பல மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கடலோர பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசுவதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது.
கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
- கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் வட மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.
தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரள கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஆற்றங்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செ்ல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குவாரி தொடர்பான நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் கிணறு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.
- 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மழை தொடருவதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
- தொடர்மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக கேரளாவில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கனமழை கொட்டிவரும் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எசசரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அந்த மாவட்டங்களில் 64 முதல் 115 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடருவதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை மீட்கவும், மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டூரை சேர்ந்த ஜித்தின் (வயது27)என்ற வாலிபரும், மலப்புரத்தை சேர்ந்த முகம்மது முகம்மில்( 8) என்ற சிறுவனும் பலியாகினர்.
அதேபோல் சம்பகுளத்தை சேர்ந்த வேலாயுதன் நாயர்(84) என்பவர் குளத்தில் மூழ்கி இறந்தார். திருவனந்தபுரத்தில் விதுரை சேர்ந்த சோமன்(62) என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். காணாமல் போன அவரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலை மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
- கனமழை காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
- அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (4.10.2023) திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.
- கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
- மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.
பிரதான சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதில் சில வாகனங்கள் பழுதாகி நடுவழியின் நின்றன. அதில் பயணித்தவர்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டு தண்ணீரில் இறங்கி நடந்தே சென்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு சிரமத்துடன் சென்றனர்.
மேலும் சாலைகளில் ஓடிய தண்ணீர், வணிக நிறுவனங்களுக்குள்ளும் புகுந்தது. கட்டக்கடை பகுதியில் கோழிப்பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 5 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக இறந்தன. ஆலப்புழா மாவட்டத்திலும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழையின் போது வீசிய காற்றில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீதும் விழுந்தது. இதில் ஒரு சில வீடுகள் சேதம் அடைந்தன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 666 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்லம் மாவட்டத்தில் 877 பேரும், ஆலப்புழாவில் 752 பேரும், கோட்டயத்தில் 332 பேரும், எர்ணாகுளத்தில் 58 பேரும், திருவனந்தபுரத்தில் 35 பேரும், ஆலப்புழாவில் 107 பேரும், கோட்டயத்தில் 81 பேரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 184 பேர் குழந்தைகள் ஆவர்.
மாநிலத்தில் எர்ணாகுளம், களமச்சேரி, காக்கநாடு பகுதிகளிலும் மழைக்கு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அங்கு வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த சூழலில் ஆண்டு தோறும் ஜூன் 1-ந்தேதி கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்றே (30-ந்தேதி) அதற்கான சாதகமான நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தென்மேற்கு பருவமழை மாநிலத்தில் இன்று தொடங்கியது.
இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை முதலில் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் தொடங்கி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் என கேரள மாநிலம் முழுவதும் பெய்யும். தொடர்ந்து கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்றும், நாளையும் (30,31-ந்தேதிகள்) குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.