search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southwest Monsoon"

    • பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிககள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணை முழு கொள்ளவை எட்டியது.

    தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதனால் நேற்று இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி சுமார் 20000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது.

    தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, நேற்று வரை 85 அடியாக இருந்து வந்த பில்லூர் அணை இன்று காலை 93 அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்ததால் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, பில்லூர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்தான 20 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    ஆற்றல் தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.
    • ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தருமபுரி:

    கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று 1 லட்சம் கனஅடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வரை 56 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 ஆயிரம் கன அடியாகவும் தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி உள்ளது.

    மகாராஷ்டிராவில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை முதல் மிகக் கனமழை (115.6 முதல் 204.4 மிமீ வரை) பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த சில தினங்களாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் பெய்த கனமழையால் சில பொது போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி உள்ளது.

    • ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    • மழை நிலவரத்துக்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பலத்த மழை காரணமாக அதிக அளவில் வெள்ளம் தேங்கி நிற்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதேபோல் கனமழை பெய்துவரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் கனமழை பெய்துவரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை சேர்ந்த மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும், நிவாரண மையங்களை

    அமைத்து மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

    ஏற்கெனவே பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மீட்பு குழுவினர் தேவைப்பட்டாலும் உடனடியாக அனுப்பி வைக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களிடமும், அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மீட்பு பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததுடன் மீட்பு பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் மழை நிலவரத்துக்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான தகவல்களை தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    • கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
    • பலத்தமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதிலிருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டிருப்பதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

    ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, தாழ்வான பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளையும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. அது மட்டுமின்றி பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மழையால் வயநாடு மாவட்டம் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு கனமழை காரணமாக இன்றும் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

    வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி வருகிற 23-ந்தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு இருக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு மழையின் தீவிரம் குறையும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பலத்தமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மிகவும் அதிகளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 13-ந்தேதி முதல் நேற்று (19-ந்தேதி) வரையிலான ஒரு வார காலத்தில் சராசரியாக 150 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டும்.

    ஆனால் மாநிலத்தில் 315.5 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. சராசரி அளவை விட இருமடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஒரு வார காலத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 171 சதவீதமும், கோழிக்கோட்டில் 132 சதவீதமும், மாஹே பகுதியில் 160 சதவீதமும், வயநாட்டில் 95 சதவீதமும் மழை பதிவாகியிருக்கிறது.

    • வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் சாரல் மழையினால் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் அருவிகளில் நீர்வரத்து சற்று சீராக தொடங்கியதால் ஒவ்வொரு அருவிகளிலும் படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தாலும் குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வமுடன் அருவிகளில் குளிக்க தொடங்கி உள்ளனர்.

    மேலும் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் இன்று மாலையில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத் தப்படும் எனகூறப்படுகிறது. 

    • பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.
    • விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுற்றி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டது.

    தரைப்பாலம் மூழ்கியதால் மசினகுடி ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர் கோக்கால் பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்களில் விரிசல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள முதியோர் காப்பகம் மற்றும் வீடுகளில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

    இருவயல் கிராமத்தை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 48 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பந்தலூர், சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் முன்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கனமழையால் ராஜகோபாலபுரம் புதுக்காலனியில் மண்சரிவு ஏற்பட்டது. நெலாக்கோட்டை அடுத்த விலாங்கூர் கிராமத்தில் மழைக்கு மதரசா கட்டிடம் விழுந்து சேதமானது.

    எருமாடு அருகே சிறைச்சாலை பகுதியில் இருந்து வெள்ள கட்டு என்ற இடத்திற்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதுமாக மூடியது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலை, முத்தோரை பாலடாவில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையிலும் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.

    அப்பர் பவானியில் விடிய, விடிய பெய்த மழைக்கு அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதிக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு மண் திட்டு சரிந்து விழுந்தது.

    பாலடா அருகே பைகமந்து ஒசட்டி பகுதியில் சாலையோர மண்திட்டு சரிந்து நடுரோட்டில் விழுந்தது. சாலையோரம் இருந்த மின் கம்பமும் சாய்ந்ததால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தது.

    இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் 3 இடங்கள், பிக்கட்டி, மணியட்டி, அட்டுபாயில் ஆகிய பகுதிகளில் 3 என மொத்தம் 6-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-204, எமரால்டு-123, அப்பர் பவானி-106, கூடலூர்-72, அப்பர் கூடலூர்-71, தேவாலா-68, நடுவட்டம்-63, செருமுள்ளி-56, பாடந்தொரை-52.

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • கர்நாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

    இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கேரளா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஜூலை 17) வரை தமிழ்நாட்டில் 160.6 மி மீ மழை பெய்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 85.5 மி மீ ஆகும். ஆகவே தற்போதுவரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 88% அதிகமாக பெய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
    • உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இந்நிலையில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் விரைந்தனர்.

    உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    நீலகிரிக்கு சென்ற ஒவ்வொரு குழுவிலும் தலா 10 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து.
    • வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு செடிகளில் தண்டு உடைந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஊட்டி நகரிலும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஊட்டி நகரின் மத்திய பகுதியான பிரிக்ஸ் பள்ளி அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பிங்கர் போஸ்ட் பகுதியில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. ஊட்டி பெர்ன்ல் பகுதியிலும் மரம் விழுந்து, அது உடனடியாக அகற்றப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இருவயல் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    மேலும் தொரப்பள்ளியில் இருந்து இருவயல் செல்லும் சாலையில் மூங்கில்கள் கொத்தாக சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அத்துடன் மூங்கில் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதம் அடைந்து, அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. பல மணி நேரங்களுக்கு பிறகு இடர்பாடுகள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.

    மேல் கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்குள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    மாயாறு, பாண்டியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2-வது நாளாகவும் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை, அவலாஞ்சி அணை, அப்பர் பவானி அணை உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியும் நிரம்பி வழிகிறது.அணைக்கு வினாடிக்கு 300கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக 150 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குந்தா அணை திறக்கப்பட்டதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கூடலூருக்கு விரைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-339, அப்பர் பவானி-217, பந்தலூர்-136, தேவாலா-152, சேரங்கோடு, எமரால்டு-125, குந்தா-108, பாடந்தொரை-102, ஓவேலி-98, கூடலூர்-97, செருமுள்ளி-96, அப்பர் கூடலூர்-95, பாலகொலா-67, ஊட்டி, நடுவட்டம்-58.

    • மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று தொடங்கி இன்று காலை வரையிலும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று காலை வரை 44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 4 ½ அடி உயர்ந்து 110.80 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 129.20 அடியாகவும் உள்ளது.

    இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக மாவட்டத்தின் 7 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் நீர் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த கால்வாய் வரத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த அணை பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பரவலாக பெய்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது. கன்னடியன் பகுதியில் 6.4 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.6 மில்லிமீட்டரும், களக்காட்டில் 6.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாங்குநேரியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையில் சுமார் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை நிரம்பி ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் நேற்று கூடுதல் தண்ணீர் வெளியேறியது.

    கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் அந்த அணையின் நீர் இருப்பு 4 ½ அடி உயர்ந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது.

    அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் விவசாய பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள தென்காசியில் 15 மில்லிமீட்டரும், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டையில் 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் தமிழக -கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பாலருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

    ×