என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் தென்மேற்கு பருவமழை 339.2 மி.மீ. பதிவு - இயல்பை விட 17 சதவீதம் குறைந்தது
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.






