என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் - நெல்லையில் அதிக மழைப்பதிவு
    X

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் - நெல்லையில் அதிக மழைப்பதிவு

    • செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
    • கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக் கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.

    அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான (செப்டம்பர் 29-ந்தேதி) நிலவரப்படி, 32.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பைவிட ஒரு சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது.

    இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகம் மழை பெய்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அங்கு 8.9 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் 31.3 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதற்கடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 55 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 39 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர, அரியலூர் (+6 சதவீதம்), சென்னை (+30 சதவீதம்), கடலூர் (+14 சதவீதம்), நீலகிரி (+13 சதவீதம்), சிவகங்கை (+4 சதவீதம்), தஞ்சாவூர் (+7 சதவீதம்), தேனி (+10 சதவீதம்),

    திருப்பத்தூர் (+21 சதவீதம்), திருவள்ளூர் (+33 சதவீதம்), திருவண்ணாமலை (+9 சதவீதம்), திருவாரூர் (+9 சதவீதம்), வேலூர் (+36 சதவீதம்), விழுப்புரம் (+18 சதவீதம்) மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.

    மேலும், செங்கல்பட்டு (-7 சதவீதம்), தர்மபுரி (-21 சதவீதம்), திண்டுக்கல் (-41 சதவீதம்), ஈரோடு (-26 சதவீதம்), கள்ளக்குறிச்சி (-31 சதவீதம்), காஞ்சீபுரம் (-3 சதவீதம்), கன்னியாகுமரி (-1 சதவீதம்), கரூர் (-35 சதவீதம்), கிருஷ்ணகிரி (-17 சதவீதம்), மதுரை (-24 சதவீதம்), நாகப்பட்டினம் (-22 சதவீதம்), நாமக்கல் (-31 சதவீதம்), பெரம்பலூர் (-2 சதவீதம்), புதுக்கோட்டை (-6 சதவீதம்), ராமநாதபுரம் (-48 சதவீதம்), சேலம் (-15 சதவீதம்),

    திருப்பூர் (-59 சதவீதம்), தூத்துக்குடி (-62 சதவீதம்), திருச்சி (-26 சதவீதம்), விருதுநகர் (-46 சதவீதம்) ஆகிய 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர, புதுச்சேரியில் 51 சதவீதமும், காரைக்காலில் 32 சதவீதமும் அதிகமாக இந்த பருவமழையில் மழை பெய்துள்ளது.

    பொதுவாக தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழையை பெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

    Next Story
    ×