search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala flood"

    கேரளாவை நிலைகுலைய வைத்த வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் வாடகையாக மத்திய அரசு ரூ.290 கோடியை கேட்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது.

    கேரளாவில் வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது. குறிப்பாக விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் மக்களை துரிதமாக மீட்பதில் பெரும் உதவியாக இருந்தது.

    வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கேரள வெள்ள பாதிப்பு குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தகவல்களை தெரிவித்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-


    வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவில் ரூ.26 ஆயிரம் கோடியே 718 லட்சத்திற்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக ஐ.நா. சபை ஏஜென்சிகள் கணக்கு எடுத்து உள்ளன. கேரள மறு சீரமைப்புக்கு ரூ.31 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசு கேரள மீட்பு பணிக்கு விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களை வழங்கியது. இந்த செலவுக்காக ரூ.290 கோடியே 74 லட்சத்தை வழங்க வேண்டுமென மத்திய அரசு நம்மிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மீட்புப்பணியின் போது 56 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம், கோவை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தூரத்தை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 மணி நேரம் ஹெலிகாப்டர் பறக்க ரூ.3 லட்சம் செலவாகிறது. பெரிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்கு இதை விட கூடுதல் கட்டணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods
    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய கப்பல்படை கேப்டன்களான விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி உள்ளது. #KeralaRain #KeralaFlood
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்தது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தது.

    இதைத் தொடர்ந்து கேரளாவில் மீட்பு பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. கேரள மீனவர்களும் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலம் ஆலுவா செங்கமனநாடு என்ற இடத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தவித்த நிறைமாத கர்ப்பிணி சஜிதா என்பவரை ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை கேப்டன்கள் விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோர் காப்பாற்றினார்கள்.

    ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட சஜிதா, குழந்தையுடன் சஜிதா

    விமானப்படை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மறுநாளே சுக பிரசவம் மூலம் ஆண் குழந்தையும் பிறந்தது. இதைப்போல மேலும் 26 பேரை இவர்கள் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்கள்.

    இந்த நிலையில் விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி உள்ளது. சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் சிங்கப்பூர் என்ற விருது வழங்கி அவர்கள் பாராட்டப்பட்டனர். #KeralaRain #KeralaFlood
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #MKStalin
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அந்த கட்சியின் எம்.பி.க்கள், தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

    உங்களுடைய இந்த உதவிக்கு கேரள மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #DMKMLAs #DMKMPs #KeralaFlood #KeralaCM #PinarayiVijayan
    கேரளாவில் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு புயல் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், வருகிற 9-ந்தேதி வரை சூறைக்காற்றுடன் மிகப்பலத்த மழை பெய்யுமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு அரபிக்கடலையொட்டி உள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதி வழியாக ஒமன் கடல் பகுதிக்கு செல்லும்.

    இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது புயலாக மாறும்போது காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும். அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் மிகப் பலத்த மழை பெய்யும். 7, 8, 9-ந்தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை 7-ந்தேதி மிக கனத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

    வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கேரளம், மத்திய கேரள மாவட்டங்களில் 18 முதல் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநில அரசு பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், எர்ணா குளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

    கேரளம் கடந்த ஆகஸ்டு மாதம்தான் மழையால் பேரிழப்பை சந்தித்தது. அடுத்தும் இது போன்ற இழப்பை தடுக்க இப்போதே தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவிற்கு வரவழைத்தது. 6 கம்பெனிகளில் இருந்து 400 வீரர்கள் கேரளா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

    இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டர்கள், நீச்சல் வீரர்களும் இம்மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளாவின் மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


    இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மிகப்பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தால் ‌ஷட்டர்களை திறக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் மாநிலத்தின் முக்கிய அணைகளின் ‌ஷட்டர்கள் உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    வயநாட்டில் உள்ள பாணசூர சாகர், கோழிக்கோட்டில் உள்ள காக்கயம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, பம்பா, மணிமாலா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மட்டுபேட்டி, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பீச்சி உள்பட 20 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பம்பை ஆறு, மூளியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர்.

    ரன்னி, கோலஞ்சேரி, அடூர், மல்லப்பள்ளி, திருவல்லா பகுதி மக்கள் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தை கண்டு மிரண்டனர். அவர்கள் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, மழை பாதிப்பு அதிகம் ஏற்படும் என அஞ்சப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, கட்டிடங்கள் இடியும் அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்போர் நிவாரண முகாம்களில் தங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அணைகளில் தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இப்போது அபாய அளவிற்கு நீர்மட்டம் இல்லை. அனைத்து அணைகளிலும் அபாய மட்டத்திற்கு கீழ்தான் தண்ணீர் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கேரள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக விழிஞ்ஞம், கொல்லம் துறைமுகங்களில் கடலோர காவல் படை, கப்பல் படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடிக்கவும், விற்கவும் அடுத்த 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.  #KeralaRain
    கேரளாவில் வருகிற 30-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது.

    வரலாறு காணாத பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் அந்த பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. கேரளாவிற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவிகள் அளித்துள்ளன.

    ஆனாலும் மழை பாதிப்பில் இருந்து அந்த மாநிலம் சகஜ நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 26, 27 ஆகிய தேதிகளில் இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டதால் இந்த 8 மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி, கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    கோப்புப்படம்

    ஆனாலும் இந்த மழை வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 30-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அவர்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த மழை காரணமாக மலை கிராமப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பினராயி விஜயன் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

    கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    கோப்புப்படம்

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi

    கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின் மீண்டும் கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்தது. இதில் மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 488 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர்.

    தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மத்திய குழு 2 நாட்களுக்கு முன்பு தான் அங்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை (25-ந் தேதி) மாநிலத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மழை அளவு 66.4 மில்லி மீட்டர் முதல் 124.4 மில்லி மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.


    இந்த தகவல் முதல்-மந்திரி அலுவலகத்துக்கும், மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த 3 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவித்துள்ளது. அதோடு இந்த 3 மாவட்டங்களுக்கும் மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல 26-ந் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #KeralaRain
    கேரளாவில் மழை, வெள்ள பாதிப்புக்குப்பின் நீர் நிலைகள், கிணறுகளில் மளமளவென குறையும் நீர் மட்டம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. #KeralaStudy #KeralaFloods #RiversDryUp
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாநிலமே நீரில் மூழ்கி தத்தளித்தது.

    அணைகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மாநிலத்தின் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    சுமார் 13 நாட்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி தவித்த கேரளம் இப்போது தான் அந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் அடிக்கிறது.

    கேரளாவில் கடந்த சில நாட்களாக அடிக்கும் வெயில் மாநில மக்களை மிரள வைத்துள்ளது. பெரு மழைக்கு பின்னர் ஏன் இப்படி வெயில் அடிக்கிறது ? அடுத்து வரும் வெயில் காலத்தில் இதனால் பாதிப்பு ஏற்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதற்கேற்ப தற்போது கேரளாவின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிணறுகளில் பொங்கி பெருகிய வெள்ளம், இப்போது காணப்படவில்லை. வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து போனது.

    இதுபோல குளங்கள், ஆறுகளில் வழக்கத்தைவிட வெள்ளத்தின் அளவு குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை ஆகிய நதிகள் ஆர்ப்பரித்து பெருகி ஓடியது. இன்று இந்த நதிகளில் வெள்ளம் மிகவும் குறைவாக ஓடுகிறது.

    இதுபோல திடீரென அதிகரித்த வெப்பநிலை காரணமாக விவசாயிகளின் தோழன் என்று அழைக்கப்படும் மண் புழுக்களும் அழிந்து வருகிறது.


    இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் பெருமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு இயல்பு நிலை மாறியுள்ளது. அதோடு இப்போது அங்கு காணப்படும் வெப்பமும், இதனால் ஏற்பட்ட வறட்சியும் இப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இது பற்றி விவசாயிகள் அரசின் வேளாண்மை துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிபுணர்கள் பலர் இது குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் கேரளாவின் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர்.

    இது குறித்து அறிந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர்வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல்லுயிர் பெருக்கத்தை சீரமைக்க கேரள வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இது தவிர வறட்சிக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாநில அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaStudy #KeralaFloods #RiversDryUp
    கேரள மழை வெள்ளம் காரணமாக பல்லடத்தில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு வாரத்திற்கு 70 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 30 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

    சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமானோர் முகாம்களில் தங்கினர். இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இதனால் கேரளாவில் நுகர்வோர் பெருமளவில் கோழிக்கறிகளை உண்ண முடியாத நிலையில் உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் கறிக்கோழிகள் அதிகளவில் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த மாதம் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.77 வரை இருந்தது. அதனைத்தொடர்ந்து கிடுகிடுவென விலை வீழ்ச்சியடைந்தது. தற்போது பண்ணை கொள்முதல் விலை ரூ.57 ஆக குறைந்தது. சில்லரை விற்பனையை பொறுத்தவரை கிலோவுக்கு ரூ.160-ல் இருந்து ரூ.120 ஆக குறைந்தது.

    இது குறித்து கறிக்கோழி பண்ணை ஒருங்கிணைப்பாளர் சுவாதி கண்ணன் கூறும்போது, கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளது. தேக்கத்தால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கேரளாவில் இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு திரும்பினால் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, தேக்கம் அடைந்த கோழிகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவனம், பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிகம் செலவு செய்துள்ளோம். ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் பண்ணை உரிமையாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.

    ஓரளவு நிலைமையை சமாளிக்க உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளோம். இதனால் குஞ்சு பொரிப்பு, தீவனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் குறையும் என்றார்.
    அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். #ARRahman
    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

    வெள்ளச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், பல நடிகர்கள், நடிகைகள் நிதியுதவி மற்றும் தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

    முன்னதாக, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடியிருந்தார். அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ரூ.738 கோடி நிதி வந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப் போட்ட பேய் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை முப்படை வீரர்களும், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர்.

    தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கேரள மந்திரி சபை கூட்டம் நடந்தது.

    இதில் கேரள வெள்ளப் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கவும் கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள சேத நிலவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு இப்போது ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

    வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.

    கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.

    கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள். கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan

    கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு ஐ மண் தொண்டு நிறுவனம் சார்பில் நிதி வழங்கப்பட்டது. #KeralaFloods
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்த பருவமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள் உருக்குலைந்துள்ளன. கேரளாவை மீட்டெடுக்க நிதி உதவி வழங்கும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று பல்வேறு தரப்பினரும் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

    அவ்வகையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ மண் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதியானது, ஐ மண் தொண்டு நிறுவன நிறுவனர் ம.குப்புராஜ்  மற்றும் பொருளுதவி செய்தவர்கள் முன்னிலையில் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. #KeralaFloods
    ×