search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala govt"

    • இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான்.
    • ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை.

    வேலூர்:

    தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும், பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

    அதில் ஒன்றுதான் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால் தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் கன்னியாகுமரிக்கு வந்து தடை உத்தரவு போட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதை தான் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர். அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது. அதைக்கூட பார்த்திருக்க மாட்டாரா?. காந்தி பற்றி தெரியாதா?. அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான். ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் கவர்னர்.

    புதிய அணை கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, டி.பி.ஆர். தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். ஆனால் மேகதாது, சிலந்தி ஆறு, முல்லை பெரியாறில் எந்த காரணத்தைக் கொண்டும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றியும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

    ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள், சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம் தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. ஒடிசாவில் எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்கோடு உள்ளனர். அதேபோன்றுதான் ஒரு தமிழர் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையாக உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணை 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் பலமிழந்து விட்டது என்றும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

    இது குறித்து உச்சநீதிமன்றம் வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்பு கூடுதல் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

    இந்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேரள அரசு கடிதம் எழுதி புதிய அணை கட்ட இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தது. கேரள அரசின் மனு மீது நாளை (28-ந் தேதி) விசாரணை நடைபெறுகிறது. 11 பேர் கொண்ட குழுவினர் இந்த மனு மீது விசாரணை நடத்த உள்ளனர்.

    கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்ட விவசாயிகள் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். பேரணியாக சென்று பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளி நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று காலை லோயர் கேம்ப் பஸ் நிலையத்தில் முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் முன்னிலையில் திரண்ட விவசாயிகள் அங்கிருந்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு சென்றனர். அதன் பின்பு பேரணியாக செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இது குறித்து முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவில் எந்த அரசு அமைந்தாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சட்டசபை தொடரின் போதே கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பையே மதிக்காதது கேரள அரசு. சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டி வந்த போது பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளது. அதே போல உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி புதிய அணை கட்ட முடியாது என்று தெரிந்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு மனு அளித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றமும் தாமாக முன் வந்து கேரள அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    இதற்கு பின்பும் முல்லைப்பெரியாறு அணையை வைத்து கேரளா அரசியல் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

    • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
    • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

    இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

    அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

    கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • தற்போது கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே பெருகுடா எனும் இடத்தில் தடுப்பணையை கட்டி தமிழ்நாட்டின் பிரதான அணையான அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் வாயிலாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நூற்றுக்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரள அரசால் கட்டப்படும் இந்த புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக கட்டப்படுவதாக கூறப்படும் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    அமராவதி ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பகுதிகளில் தமிழக அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில், கூட்டணி தர்மத்திற்காக கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.

    எனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியையும், பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சேர்த்து மாநில உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

    • ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
    • ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.


    ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

    ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


    • குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்.
    • பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.

    • பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் வசூல்.
    • பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.

    உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் காணப்படாத சடலங்கள் (பிணங்கள்) கேரள அரசுக்கு வருவாய் ஈட்டி தந்துள்ளது.

    2008ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் இருந்து உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அன்று முதல் உரிமை கோரப்படாத 1,122 உடல்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒப்படைத்ததன் மூலம் மாநில அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.

    இந்த நடைமுறை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சாதகமாக உள்ளது. கற்பித்தல் நோக்கங்களுக்காக உடல்களைப் பெறுவது கடினமாக இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இது பயனளிக்கிறது.

    அதன்படி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிக எண்ணிக்கையிலான இறந்த உடல்களை விற்பனை செய்துள்ளது.

    கடந்த 16 ஆண்டுகளில் 599 உடல்களை மருத்துவமனை ஒப்படைத்துள்ளது. பட்டியலில் முதலிடத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகள் பரியாரம் மருத்துவக் கல்லூரி (166), திருச்சூர் மருத்துவக் கல்லூரி (157) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (99) ஆகும்..

    2000-களின் தொடக்கத்தில்தான் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆய்வு நோக்கத்திற்காக அதிகமான சடலங்கள் தேவைப்படுகின்றன.

    60 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்காக 5 சடலங்கள் தேவை என்று விதி புத்தகம் கூறுகிறது. அதாவது மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒவ்வொரு 12 மாணவர்களுக்கும் ஒரு சடலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
    • வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாளை மறுநாள் (ஜனவரி 13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மகர விளக்கு பிரசாத சுத்திக் கிரியைகள் நடைபெற உள்ளன.

    ஜனவரி 14-ந்தேதி உஷ பூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15-ந்தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

    மகரவிளக்கு பூஜைக்காக திங்கட்கிழமை(வருகிற15) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, வருகிற15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.

    மேலும் வருகிற15-ந் தேதியிலிருந்து வருகிற18-ந்தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெற உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜனவரி 19-ந்தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.


    வருகிற 20-ந்தேதி அன்று மாளிகைப் பரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. வருகிற 21-ந் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் என்பதாலும், அடுத்த 10 நாட்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி 50 ஆயிரம் பேரும், 15-ந்தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.

    கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்விரு நாட்களிலும் குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட சில மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.
    • நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட்டிச் செல்கின்றனர். இந்த நிலையில், கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும்.

    பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
    • மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த வாரம் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

    நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் 4 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்துள்ளார். வழக்கமாக ரெயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்பும் ஷாருக் ஷைபி, பாட்டிலில் பெட்ரோல் எடுத்து சென்று, அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்களில் இதுபோன்று யாராவது எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

    அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் எங்காவது பெட்ரோல் தீர்ந்து விட்டால் பெட்ரோல் பங்க் வரை வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றுதான் பெட்ரோல் வாங்க வேண்டும். பாட்டிலில் வாங்க சென்றால் அபராதத்திற்கு ஆளாவார்கள். இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×