search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biryani"

    • பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது.
    • ஹீனா கவுசத் ஏற்கனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தவர் ஆவார்.

    உணவு பிரியர்களை கவருவதற்காகவே சமூக வலைதளங்களில் புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண் தயாரித்த 'ஸ்பைடர் மேன் பிரியாணி' குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில் நீல நிற பிரியாணி நிறப்பப்பட்ட பாத்திரம் உள்ளது. அதில் பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. ஹீனா, பிரியாணியின் பகுதிகளை வெளியே எடுக்கும்போது வலைகள் முழுவதுமாக சாப்பிடும் வகையில் இருப்பதாக விளக்குகிறார். அவர் சுவைக்காக அதில் மேலும் சில கலவைகளை சேர்க்கிறார்.

    அவரது இந்த 'ஸ்பைடர் மேன் பிரியாணி' குறித்த வீடியோயை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹீனா கவுசத் ஏற்கனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தவர் ஆவார்.


    • காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
    • பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). இவர் அங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இது காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து காலை 11 மணிக்கு கடையை திறந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்தூர் டவுன் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    இதனை தொடர்ந்து உரிமையாளர், 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.

    வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார்.
    • நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அவரது 2-வது மகளும் மனைவியுடன் சென்றுவிட்டார். இதனால் டைல்ஸ் வியாபாரி தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று தனது மூத்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.

    அங்குள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தினார். மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டு அவரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் மேம்பாலத்தில் இருந்து இறங்கவில்லை.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த வியாபாரியிடம் தயவு செய்து கீழே இறங்குங்கள்.

    உங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை. தொடர்ந்து பாலத்தில் நின்று கொண்டே இருந்தார்.

    மேலும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி அவரை தயவு செய்து குதிக்க வேண்டாம் என தெரிவித்தனர் .

    அந்நேரத்தில் தான் போலீசாருக்கு ஒரு யோசனை வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஓட்டல் ஒன்றில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.


    அது பற்றி டைல்ஸ் வியாபாரியிடம் கூறினர். தற்கொலை முடிவை கைவிட்டால் பிரபல ஓட்டலில் இருந்து பிரியாணி  வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.

    இதனை கேட்டதும் வியாபாரி தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தனர்.

    அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்தால் சயின்ஸ்சிட்டி மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது.
    • முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    தருமபுரி:

    தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி 2 கைகளிலும் செங்கல் தூக்கி நிற்கும் போட்டி, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது.

    அதன் ஒருபகுதியாக, நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு 'சாப்பாட்டு ராமன் போட்டி' என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில்,1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும், பெண்களுக்கான 25 பேர் பங்கேற்ற இப்போட்டியில் பிரியாணி குதுகலமாக சாப்பிடும் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஷாலினி (15) என்பவர் 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வருவலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.


    இதில் பச்சியப்பன் என்பவர் 1 கிலோ சில்லி சிக்கனை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். முனுசாமி என்பவர் 1 கிலோ சிக்கனை 7 நிமிடத்தில் சாப்பிட்டு 2-ம் பரிசு பெற்றார்.

    இறுதி நிகழ்வாக, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதில் ராஜ்குமார் என்பவர் 2 நிமிடத்தில் 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்
    • ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

    அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    • கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.
    • பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

    அதில் பிரியாணி சாப்பிட்டால் மாபெரும் பரிசு காத்திருக்கிறது என தெரிவித்தனர்.

    அதன்படி பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் ஒன்றை வழங்கினர்.

    இதன் அடிப்படையில் ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.

    இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.

    அதில் திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் கார் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு காரை பரிசாக வழங்கினர். பிரியாணி சாப்பிட்டதற்கு கார் பரிசா! என்ற ஆச்சரித்துடன் அவரும் பெற்று சென்றார்.

    பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
    • வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.

    அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

    மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

    ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.

    இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • அஜித் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட படக்குழுவினர் அவரை பாராட்டி மகிழ்ந்தனர்.
    • வருகிற பிப்ரவரி மாதம் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    துணிவு படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜூன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அஜித், திரிஷா பங்கேற்ற ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

    இந்நிலையில் படப்பிடிப்புக்கு சிறிய இடைவெளி விடப்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். மீண்டும் அஜர் பைஜானில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் அடிக்கடி படப்பிடிப்பில் பட குழுவினருக்கு உணவு சமைத்து விருந்தளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    அதேபோல் இந்த முறை விடா முயற்சி படக் குழுவினருக்கு தனது கையால் பிரியாணி சமைத்தது மட்டுமின்றி சிக்கன் கிரேவியும் ருசியாக சமைத்து அனைவருக்கும் தனது கையால் உணவு பரிமாறி உள்ளார். அஜித் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட படக்குழுவினர் அவரை பாராட்டி மகிழ்ந்தனர்.

    முதற்கட்ட படப்பிடிப்பில் கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. சூட்டிங் இடைவெளியில் அஜித் போட்டோகிராபராக மாறி அனைவரையும் புகைப்படம் எடுத்து மகிழ்வித்து வருகிறார். வருகிற பிப்ரவரி மாதம் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
    • சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் முதலிடத்தை பிடிக்கும் உணவு எது என்பதை பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து 8-வது ஆண்டாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் தொடர்ந்து பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

    இதுகுறித்து தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு வீடு தேடி வரும் உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 8-வது ஆண்டாக பிரியாணியே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி வீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன.

    மேலும் 6 பிரியாணிகளில் ஒரு பிரியாணி ஐதராபாத்தில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐதராபாத் மக்களின் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெரிகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற கடந்த நவம்பர் 19-ந்தேதி நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் பெறப்பட்டு உள்ளன. அதிகபட்ச பீட்சா ஆர்டர்கள் சென்னை, புதுடெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளன.

    மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.

    துர்கா பூஜையின் போது இதுவரை முதலிடத்தில் இருந்த ரசகுல்லாவை குலோப் ஜாமூன் முந்தியது. அன்று மட்டும் 77 லட்சத்துக்கும் அதிகமான குலோப் ஜாமூன்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

    சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    பெங்களூரில் அதிக அளவில் கேக்குகள் ஆர்டர் பெறப்பட்டுள்ளன. சாக்லெட் கேக் மட்டும் 85 லட்சம் ஆர்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. டெலிவரி நிறுவன ஊழியர்கள் உணவு டெலிவரிக்காக இந்த ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 16.64 கோடி கி.மீ. தூரம் பயணித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
    • பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்

    திருப்பதி:

    ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

    இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

    இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

    இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
    • ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

    மிச்சாங் புயல் மழை காரணமாக சென்னையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.

    காய்கறி வரத்து குறைந்ததால் பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளது. மழையை காரணம் காட்டி பொருட்கள் எடுத்து வரும் சரக்கு வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி எடுத்து வரும் லாரிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் இருந்து சில்லரை வியாபாரத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

    வழக்கமாக வாடகை கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் இடத்தில் 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அது போல முட்டை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இத்தகைய காரணங்களால் சென்னையில் சில இடங்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் பால் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அசைவ உணவு கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக சிக்கன் பிரியாணி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.240-க்கு விற்பனையாகும் சிக்கன் பிரியாணி புயல் மழை பாதிப்பால் பொருட்கள் கிடைக்காததால் பார்சலுக்கு ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சிக்கன் பிரியாணி விலை சராசரியாக 60 ரூபாய் உயர்ந்துள்ளது.

    ×