என் மலர்
இந்தியா

விராட் கோலி உணவகத்தில் பிரியாணி விலை ரூ.978- எல்லா வகையான உணவுகளும் கிடைக்கிறது
- உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார்.
- இந்த உணவகத்தின் பெயரான ‘ஒன்8 கம்யூன்’ என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். கிரிக்கெட் தவிர விளம்பரங்கள் மூலம் அவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். விராட் கோலியும், அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் மும்பை உணவகம் பற்றியும், ரெஸ்டாரண்டில் இருக்கும் உணவுகளின் விலை விவரம் பற்றிய தகவலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
மும்பையில் பிரபலமான ஜூகு பகுதியில் 'ஒன் 8 கம்யூன்' என்ற பெயரில் அவர் 2022-ம் ஆண்டில் உணவகத்தை தொடங்கினார். பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவை விராட் கோலி வாங்கி புதுப்பித்து உணவகம் அமைத்துள்ளார்.
இந்த ரெஸ்டாரண்டின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பிரியாணி விலை ரூ.978 ஆகும்.
வெறும் சாதம் ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ.118 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.2,318 -ல் மிகவும் விலை உயர்ந்த அசைவ உணவு கிடைக்கிறது.
விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், 'விராட் பேவ ரைட்ஸ்' என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது. இதில் டோபு ஸ்டீக், ட்ர பிள் ஆயில் சேர்த்த மஸ்ரூம் டம்ப்ளிங்ஸ், சூப்பர் புட் சாலட் போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன. எல்லா வகையான உணவுகளும் இந்த ரெஸ்டாரண்டில் கிடைக்கிறது.
இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் சற்று அதிகமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதேபோல் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகத்தின் பெயரான 'ஒன்8 கம்யூன்' என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது. அவரது ஜெர்சி எண் 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவகத்தின் சுவரில் இந்த எண் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இங்கு பகல் நேரத்தில் வெளிச்சம் நன்றாக வர வசதியாக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டு, அழகான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார். இந்த ரெஸ்டாரண்ட் மூலம், விருந்தினர்கள் திருப்தி அடைந்து மீண்டும் வர வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது. மும்பையில் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களிலும் 'ஒன்8 கம்யூன்' கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.






