என் மலர்
இந்தியா

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஜோதி மல்கோத்ரா செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.
கேரள அரசால் விருந்தினராக அழைக்கப்பட்ட யூடியூபர் ஜோதி- பரபரப்பு தகவல்கள்
- கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது.
- கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
திருவனந்தபுரம்:
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும், டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்ததும், அதன்மூலமாக பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும், அந்த நாட்டுக்கு உளவு வேலை பார்த்ததும் தெரியவந்தது. அவரைத்தொடர்ந்து பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே யூடியூபர் ஜோதி, கேரள அரசுக்கு பிரசாரம் செய்த பரபரப்பு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், 'கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டது.
அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். அதில் ஜோதி மல்கோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் கூறியதாவது:-
கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக ஜோதி மல்ஹோத்ராவும் அழைக்கப்பட்டார். அனைத்தும் வெளிப்படையாகவும், நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டன.
கேரளாவில் உள்ள இடது முன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரசாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என அவை கேள்வி எழுப்பி உள்ளன.
இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், "பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்களா?. சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
கேரள அரசை விமர்சித்துள்ள பா.ஜ.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சந்தோஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேரள அரசா ஜோதியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது?. மத்திய அரசின் உளவுத்துறை செயலிழந்து விட்டது. தங்கள் மீதுள்ள குறையை மறைக்க மற்றவர்கள் மீது பழி சுமத்துவதா?' என்று கூறியுள்ளார்.






