என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்கள்"

    • 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
    • அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 01.07.2016-ம் ஆண்டு 7-வது ஊதிய குழு பரிந்துரை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி 6-வது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.

    குறிப்பாக தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் 6-வது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    இந்நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுனங்களில் 6-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

    அதனடிப்படையில், புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

    இந்த அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இத்திட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருப்பதன் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டமே தொடரும்; பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

    அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்களுக்கான அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை ஏற்காமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஆணையிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தான், தமிழக அரசு இவ்வாறு தெரிவித்திருக்கிறது.

    ''தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணியில் சேர்ந்து, அக்டோபர் வரை ஓய்வு பெற்ற 54,000 பேரில் 51,000 பேருக்கு முழுமையான பலன்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இது அப்பட்டமான பொய் ஆகும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்தவர்களில் கடந்த மார்ச் மாத இறுதி வரை 45,625 பேரும், அக்டோபர் வரை சுமார் 54,000 பேரும் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவருக்குக் கூட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்களின் பணிக்காலத்தில் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பங்களிப்பு ஊதியத் தொகை, அதற்கு இணையாக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட தொகை, அதற்கான வட்டி ஆகியவை மட்டுமே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெறும் போது வழங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது தொடர் வைப்புத்தொகை திட்டம் போன்று தான் செயல்படுத்தப்படுகிறதே தவிர, சமூகப் பாதுகாப்புத் திட்டமாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

    மேலும், பங்களிப்பு தொகையை திரும்பக் கொடுக்கும் போது, இனி எந்தக் காலத்திலும் ஓய்வூதியம் கேடக மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதி வாங்கப்படுகிறது. இது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கொத்தடிமைகளாக்கும் செயலாகும். அரசு ஊழியர்களை இதை விட மோசமாக அவமதிக்க முடியாது.

    அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்குக் கூட அவர்கள் ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடைக் கூட வழங்கப் படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. ஓய்வூதியத் திட்டம் என்பதன் உண்மையான நோக்கமே, ஓய்வுக்காலத்திற்கு பிறகு அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வழங்குவது தான். ஆனால், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு, பணிக்கொடை ஆகிய இரண்டுமே வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டம் என்று கூறுவதே கிஞ்சிற்றும் பொருத்தமற்றது ஆகும்.

    ஆனால், இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதில் தேவையான திருத்தங்களை செய்து செயல்படுத்தப்போவதாகவும் கூறுவதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறது,. இதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மன்னிக்கவே மாட்டார்கள்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் தான் அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை தி.மு.க. அரசு இரு வகைகளில் ஏமாற்றியும், துரோகமிழைத்தும் வருகிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைப்பதற்காக மூத்த இ.ஆ.ப. அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டிய அந்தக் குழு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததுடன் முடங்கிக் கிடக்கிறது.

    இன்னொருபுறம், தமிழ்நாட்டில் புதிய ஒய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தி.மு.க. அரசு தெளிவுபடுத்தி விட்டது. ஒருவேளை ககன்தீப்சிங் பேடி குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்தாலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பது தான் தி.மு.க. அரசின் நிலைப்பாடு ஆகும். தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதை விட மோசமான துரோகத்தை தி.மு.க.வால் செய்ய முடியாது.

    நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த துரோகத்திற்கான தண்டனையை தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வழங்குவார்கள். தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
    • சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.

    2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

    1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

    ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.

    சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
    • ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது.

    அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு.

    பேடி குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

    ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அரசு அமைத்தது.

    இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை; குழுவின் அறிக்கையை பெறுவதை தாமதப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றும் என்று எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கை இப்போது உண்மையாகிருக்கிறது.

    தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாகவும் ககன்தீப்சிங் குழு கூறியுள்ளது. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது; அவற்றின் மூலம் ஏராளமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

    ஆனால், குழு அமைக்கப்பட்ட பிப்ரவரி 4-ம் தேதியில் தொடங்கி இன்று வரையிலான 8 மாதங்களில் இவை செய்து முடிக்க முடியாத பணிகள் அல்ல. ஆனால், இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கக் கூடாது என்று அரசும், ககன்தீப்சிங் குழுவும் செய்த கூட்டுச் சதியின் காரணமாகவே இப்போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.

    ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    மேலும், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ககன்தீப்சிங் குழு அரசு ஊழியர்களிடம் கருத்துக் கேட்கத் தொடங்கியது. இப்பணியை பிப்ரவரி மாதமே தொடங்கியிருந்தால் 3 மாதங்களுக்கு முன்பாகவே முழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கலாம்.

    அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் அதன் மீது முடிவெடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் ககன்தீப்சிங் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.

    பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27-.11.2018-ம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது.

    அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

    ககன்தீப்சிங் குழுவின் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தெரியாத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்.

    அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.

    எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரண்டு அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.

    இந்த ஊழியர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுக்காக வேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

    இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லஷ்கர்-இ-தொய்பாவின் உதவியுடன், அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  

    • பிப்ரவரி 4-ஆம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த ககன்தீப் சிங் பேடி குழு.
    • வரும் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு வரும் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது மனநிறைவளிக்கிறது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ககன்தீப் சிங் பேடி குழு அமைக்கப்பட்டும் கூட, அக்குழு அதன் பணிகளை தொடங்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் அரசு விழித்துக் கொண்டு ககன்தீப் சிங் பேடி குழு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ஆகும்.

    கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அடுத்த மாதம் 9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசுத் தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வுப் பணிகளையும் முடித்து செப்டம்பர் மாத மத்திக்குள் ககன்தீப் சிங் பேடி குழு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. மிகவும் பழமையான அந்த குடியிருப்புகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன. எனவே, பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு, அதே பகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    இதேபோல கோத்தகிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி, தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் (தாசில்தார் குடியிருப்பு உள்பட) என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு அலுவலர்கள் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பின் பலகையில் குடியிருப்பு பெயர் தமிழில் தவறாக எழுதப்பட்டு உள்ளது. அதாவது அரசு அலுவலர்கள் குடியிருப்பு என எழுதுவதற்கு பதிலாக 'அரசு அலுவலரகள குடியிருப்பு' என புள்ளி வைக்காமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், அரசு குடியிருப்பில் பெயர் பலகை எழுத்து பிழையுடன் எழுதப்பட்டு உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அதை திருத்தி, சரியாக எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும்.

    ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
    • ம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக மோகன் யாதவ் உள்ளார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சம்பள பணத்தில் ரூ.230 கோடி ஊழல் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இந்த 50 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் சம்பளம் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

    அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. ஆனால் சம்பளம் வழங்கப்படாததால் இந்த ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்களா? என்ற தகவல் இல்லை.

    அதேவேளையில் இவர்கள் போலியாக உருவாக்கப்பட்ட ஊழியர்களா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதன்மூலம் ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் யாரும் பணி புரியவில்லை என்பதைச் சான்றளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகை சம்பளத்தில் போலி பெயர்களைச் சேர்த்து மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
    • அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.

    மேலும், இதுகுறித்து நிதி அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்க வேண்டும்.

    விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.

    இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.

    இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டன.

    இந்நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி.சாருஸ்ரீ, வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.
    • காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.

    அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

    மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.

    மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.

    • தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது.
    • அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் ஒரு அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். மேலும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.

    தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிடலாம்.

    அந்த புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். புத்தகம் மூலம் பதிப்பகத்தாரிடம் இருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்.

    அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. இந்த புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    ×