என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஊதிய குறைபாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தர மாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றன. ஜனவரி மாதத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தையும் பல்வேறு சங்கங்கள் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் வருகிற 22-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






