என் மலர்
நீங்கள் தேடியது "teachers protest"
- சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று 24-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் என்று கோஷமிட்டனர். பல்வேறு பகுதியிலிருந்து கோட்டை ரெயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் மொத்தமாக பாரிமுனை பகுதியில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 13-வது நாளாக கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முகாமிட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். அரசின் ஊதிய உயர்வை ஏற்காமல் தொடர்ந்து போராடி வரும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு ஊழியர் மயக்கம் அடைந்தார். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
- மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
* பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
* பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
* கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.
* மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.
கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 14 நாட்களாக, சம வேலைக்கு, சம ஊதியம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் உழைப்பிலும், ஆசிரியப் பெருமக்கள் அக்கறையிலும் சாதனை செய்யும்போது, வெட்கமே இல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டிப் பெருமை பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை, பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாய் இருப்பதை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஊதியம் வழங்க மாட்டோம் என்று அச்சுறுத்துவது, முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே.
திமுக அரசு, கல்வியை மதிப்பதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. சமத்துவம், சமூகநீதி என்றெல்லாம் வெறும் வாய்வார்த்தையில் நாடகமாடும் முதலமைச்சர், உண்மையில் ஆசிரியப் பெருமக்களுக்குக் கொடுப்பது அநீதியும் அச்சுறுத்தலும் தான்.
பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகால வலி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஆகியவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்குச் செய்துள்ள துரோகத்தையே காட்டுகிறது.
ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி. ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம்.
ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கும்போது மட்டுமே, சமூகம் முன்னேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், அத்துமீறலையும், தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கான பதிலும் திமுகவுக்குக் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.
சென்னை:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 26-ந்தேதி இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 27-ந்தேதி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சென்னை எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இருவழி சாலையில் ஒரு பகுதியில் முழுவதும் ஆசிரியர்கள் அமர்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:-
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இதுவரை விடுமுறை நாட்களில் போராடி வந்தோம். இனி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனாலும் நாங்கள் வேலை நாட்களில் விடுமுறை எடுத்து போராட்டத்தை தொடருவோம். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் அமர்ந்து போராடுவோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். புத்தாண்டு, பொங்கல் நாட்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
- மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் தள்ளுமுள்ளு.
- காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேரணியை தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள் மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், காமராஜர் சாலையில் பேரணி சென்ற இடத்தில் ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
பேரணியாக சென்றபோது காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.
கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது.
- பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று (டிச. 26) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இடைநிலை ஆசிரியர்களிடம் உள்ள ஊதிய முரண்பாட்டைக் கலைய வேண்டும் எனவும், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த 311வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும் முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
"சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே!
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2009ம் ஆண்டுக்குப்பின் பணி வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது
- 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
பாட்னா:
பீகாரின் பாட்னா நகரில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்து, இதுவரை 6 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுளள்து. 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். 7வது கட்ட ஆட்சேர்ப்பின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடன் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர்.
- இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு உள்ளது என்று கூறி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை கையில் எடுத்து கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடனும் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு டி.பி.ஐ. வளாகத்திலேயே படுத்து உறங்கினார்கள்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களாக சாப்பிடாமல் உடலை வருத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பலர் சோர்வாக காணப்பட்டனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிவகங்கையைச் சேர்ந்த வசந்தி, திருவண்ணாமலையைச் சேர்ந்த கவிதா ஆகிய 2 ஆசிரியைகள் இன்று காலையில் திடீரென மயக்கம் அடைந்தனர்.
அங்கு தயார் நிலையில் இருந்த ஆரம்புலன்சில் ஏற்றப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும் போது, "கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கூறியிருந்தனர். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.
- ஊதிய உயர்வு குறித்த உறுதி மொழி அரசு தரப்பில் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- 144 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 27-ந்தேதி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் தொடங்கிய உண்ணாவிரதம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
இதுவரையில் 144 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். போராட்ட தளத்திலும் சிலருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஊதிய உயர்வு குறித்த உறுதி மொழி அரசு தரப்பில் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது.
ஆசிரியர்கள் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது." என கூறப்பட்டுள்ளது.
முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விரைவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.






