search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணையில் நிலஅதிர்வு மானி பொருத்தும் பணிக்கு இடையூறு- கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்
    X

    முல்லைப்பெரியாறு அணையில் நிலஅதிர்வு மானி பொருத்தும் பணிக்கு இடையூறு- கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

    • கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்டுள்ள அணையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் அணை பலவீனமாக இருப்பதாக கேரளஅரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    தற்போது நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால் நில அதிர்வு மானி பொருத்த கண்காணிப்பு குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.

    கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் அக்ஸ்சலரோ கருவிகள் வாங்க ரூ.99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தை சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரு மாநில பிரச்சினை என்பதால் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வு குழுவிற்கு தகவல் சொல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பெரியாறு அணையில் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறையின் இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில்தான் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறையை கேரளா வற்புறுத்தி உள்ளது.

    இதற்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் வர்ணம் பூசுதல், மராமத்து பணி என அனைத்துக்கும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸிஅகஸ்டின் தலைமையில் உள்ள இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை என்பதால் கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஏற்றிய அணைகள் பாதுகாப்பு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கேரளாவின் செயலுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

    Next Story
    ×