search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 738 crore"

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ரூ.738 கோடி நிதி வந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப் போட்ட பேய் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை முப்படை வீரர்களும், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர்.

    தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கேரள மந்திரி சபை கூட்டம் நடந்தது.

    இதில் கேரள வெள்ளப் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கவும் கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள சேத நிலவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு இப்போது ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

    வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.

    கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.

    கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள். கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan

    ×