search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dams water opened"

    கேரளாவில் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு புயல் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், வருகிற 9-ந்தேதி வரை சூறைக்காற்றுடன் மிகப்பலத்த மழை பெய்யுமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு அரபிக்கடலையொட்டி உள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதி வழியாக ஒமன் கடல் பகுதிக்கு செல்லும்.

    இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது புயலாக மாறும்போது காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும். அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் மிகப் பலத்த மழை பெய்யும். 7, 8, 9-ந்தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை 7-ந்தேதி மிக கனத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

    வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கேரளம், மத்திய கேரள மாவட்டங்களில் 18 முதல் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநில அரசு பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், எர்ணா குளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

    கேரளம் கடந்த ஆகஸ்டு மாதம்தான் மழையால் பேரிழப்பை சந்தித்தது. அடுத்தும் இது போன்ற இழப்பை தடுக்க இப்போதே தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவிற்கு வரவழைத்தது. 6 கம்பெனிகளில் இருந்து 400 வீரர்கள் கேரளா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

    இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டர்கள், நீச்சல் வீரர்களும் இம்மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளாவின் மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


    இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மிகப்பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தால் ‌ஷட்டர்களை திறக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் மாநிலத்தின் முக்கிய அணைகளின் ‌ஷட்டர்கள் உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    வயநாட்டில் உள்ள பாணசூர சாகர், கோழிக்கோட்டில் உள்ள காக்கயம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, பம்பா, மணிமாலா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மட்டுபேட்டி, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பீச்சி உள்பட 20 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பம்பை ஆறு, மூளியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர்.

    ரன்னி, கோலஞ்சேரி, அடூர், மல்லப்பள்ளி, திருவல்லா பகுதி மக்கள் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தை கண்டு மிரண்டனர். அவர்கள் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, மழை பாதிப்பு அதிகம் ஏற்படும் என அஞ்சப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, கட்டிடங்கள் இடியும் அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்போர் நிவாரண முகாம்களில் தங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அணைகளில் தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இப்போது அபாய அளவிற்கு நீர்மட்டம் இல்லை. அனைத்து அணைகளிலும் அபாய மட்டத்திற்கு கீழ்தான் தண்ணீர் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கேரள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக விழிஞ்ஞம், கொல்லம் துறைமுகங்களில் கடலோர காவல் படை, கப்பல் படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடிக்கவும், விற்கவும் அடுத்த 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.  #KeralaRain
    ×