search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி- உற்பத்தியாளர்கள் கவலை
    X

    கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி- உற்பத்தியாளர்கள் கவலை

    கேரள மழை வெள்ளம் காரணமாக பல்லடத்தில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு வாரத்திற்கு 70 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 30 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

    சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமானோர் முகாம்களில் தங்கினர். இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இதனால் கேரளாவில் நுகர்வோர் பெருமளவில் கோழிக்கறிகளை உண்ண முடியாத நிலையில் உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் கறிக்கோழிகள் அதிகளவில் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த மாதம் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.77 வரை இருந்தது. அதனைத்தொடர்ந்து கிடுகிடுவென விலை வீழ்ச்சியடைந்தது. தற்போது பண்ணை கொள்முதல் விலை ரூ.57 ஆக குறைந்தது. சில்லரை விற்பனையை பொறுத்தவரை கிலோவுக்கு ரூ.160-ல் இருந்து ரூ.120 ஆக குறைந்தது.

    இது குறித்து கறிக்கோழி பண்ணை ஒருங்கிணைப்பாளர் சுவாதி கண்ணன் கூறும்போது, கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளது. தேக்கத்தால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கேரளாவில் இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு திரும்பினால் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, தேக்கம் அடைந்த கோழிகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவனம், பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிகம் செலவு செய்துள்ளோம். ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் பண்ணை உரிமையாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.

    ஓரளவு நிலைமையை சமாளிக்க உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளோம். இதனால் குஞ்சு பொரிப்பு, தீவனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் குறையும் என்றார்.
    Next Story
    ×