என் மலர்
நீங்கள் தேடியது "gaja cyclone"
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டத்தை இப்பகுதிக்கு சுமார் ரூ.450 கோடி செலவில் பழனிமாணிக்கம் நிறைவேற்றியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தை மோடி பார்வையிடவில்லை. ஆறுதல் கூட தெரிவிக்க வில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய எந்த நிவாரண உதவியும் முறையாக வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க எடப்பாடி அரசு லஞ்சம் கேட்டதால் வேறு மாநிலங்களுக்கு அவை சென்றுவிட்டன. பல பணக்காரர்கள் வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்து மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியின் தயவால் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
எனவே மக்களுக்கு விரோதமான மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சியை அகற்ற நமது தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன், திருவோணம் ஒன்றிய செயலாளர் மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் காந்தி, செல்வராஜ், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். #vaiko #pmmodi
கடலூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடலூர் உழவர் சந்தை, ரெட்டிச்சாவடி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.
பொதுமக்கள் மத்தியில் திறந்த ஜீப்பில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார்.
வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இன்று கூட்டணி என்ற நாடகம் கடந்த ஒரு வாரமாக நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.
தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவதை விட எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அமைச்சர் பொறுப்பை வாங்கி தங்கள் நிலையை பாதுகாத்து கொள்ள தங்களை பலப்படுத்திக் கொள்ள ஒரு கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து உள்ளது.
தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய பாரதீய ஜனதா கட்சியும், தமிழக மக்களால் வெறுக்கப்பட்டு உள்ள ஆளுங்கட்சியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றும் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறைச்சாலையில் இருந்து இருப்பார் என்றும் தவறாக பேசியவர்களும் கூட்டணி வைத்துள்ளார்கள்.
காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மக்களை அச்சுறுத்தும் திட்டமான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளுக்கு அனுமதி தந்தது காங்கிரஸ் ஆட்சி. இதனை அனுமதித்தது தி.மு.க. ஆட்சி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து தொடங்கி வைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த திட்டத்தை வராமல் மக்கள் நலன் கருதி தடுத்தார்.
ஆனால் ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு பணிந்து விட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் கிளை கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 முறை வந்து விட்டார். ஆனால் கஜா புயல் தாக்கியபோது மக்கள் பாதிக்கப்பட்டபோது வராதவர்கள் தற்போது வாக்குகளுக்காக வருகிறார்கள். அவர்களை நீங்கள் முறியடிக்க வேண்டும்.
ஜெயலலிதா இருக்கும்போது கடலூர் பாராளுமன்ற தொகுதி உள்பட 37 தொகுதியில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல 95 சதவீதம் தொண்டர்களை வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். எத்தனை சதி நடந்தாலும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெறுவோம். இளைஞர்களும், மக்களும் எங்களுடன் இருப்பதால் வேறு கூட்டணி தேவையில்லை.
வரும் தேர்தலில் பிரதமரை நிர்ணயம் செய்பவர்கள் தமிழக மக்களாகத் தான் இருப்பார்கள். அப்படியொரு வாய்ப்பினை அ.ம.மு.க.வினருக்கு பொதுமக்கள் வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #parliamentelection
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் புயலால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காத அரசை கண்டித்தும், அதனை உடனே சீரமைக்க கோரியும், கஜா புயலுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் வழங்கிட வேண்டியும், புயலால் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே சரி செய்யக்கோரியும், ஊராட்சியில் உள்ள உட்புற சாலைகளை சீர் செய்ய கோரியும் உப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் சடங்கு நடத்தி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் உப்பூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிராம கமிட்டி தலைவர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் செல்வரெத்தினம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாரதிராமன் மற்றும் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னை மட்டையை சாலையில் வைத்து அதில் குடங்களை அடுக்கி வைத்து சடங்கு செய்து தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைராஜன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் கஜா புயலால் சேதமான கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் கேட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க மண்டலத்தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 210 கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன.
இந்த கோழிப் பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் கேட்டு பலமுறை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலின் போது விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சேதமான 1200 கோழிப்பண்ணைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவில்லை எனில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க கட்சியின் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. பட்ஜெட்டில் மக்கள் பயன்படும் திட்டங்களும் தற்போதைய செயல்பாட்டு திட்டங்களுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதேர்தல் நோக்கத்திற்காக போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட் இல்லை. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கபடவில்லை என அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #relief #gajacyclone
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். வேளாண்மை அதிகாரிகள் வேளாங்கண்ணி, மனோகர் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேடசந்தூர் அருகே உள்ள ஆர். கோம்பை, வடுகம்பாடி விவசாயிகள் கஜா புயலுக்கு நிவாரணம் வழங்ககோரி கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆனால் 600 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது.
மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
கொடைக்கானலில் புயலால் சிசு வாழை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மானியம் வழங்ககோரியும் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காய்கறி விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தங்களது பகுதியில் விளையும் சவ்சவ், வாழை, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகளை திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சிலநாட்களாக அங்கு உள்ள காண்டிராக்டர்கள் தலா ஒரு மூட்டைக்கு பணம் கேட்கிறார்கள்.
பணம் தரவில்லை என்றால் உள்ளே கொண்டு வர அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே முன்பு போலவே இலவசமாக காய்கறிகள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றனர்.