என் மலர்
நீங்கள் தேடியது "gaja cyclone damage"
சட்டசபையில் இன்று கஜாபுயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கஜாபுயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பயிர்களும் மரங்களும் விழுந்தன. வீடுகள் பெரும் சேதம் அடைந்தன. 78 ஆயிரத்து 584 ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. 23 ஆயிரத்து 141 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
20 ஆயிரத்து 357 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 5 லட்சத்து 5 ஆயிரத்து 742 குடிசைகள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இவை அனைத்தையும் சீரமைத்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.
கஜா புயல் பாதிப்பு பற்றி அறிந்ததும் உறவினர்கள் மூலம் நான் அந்த பகுதிகளை பார்வையிட சென்றேன். மழை மற்றும் வானிலை காரணமாக சில இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பாதிப்பின் தாக்கத்தை என்னால் அறிய முடிந்தது. அந்த மக்களுக்கான உதவிகளை உடனடியாக செய்வதற்காக அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.
மின் இணைப்புகள் கொடுக்கும் பணி இரவு பகலாக நடந்தது. நிவாரண பணிகளில் தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கின்றன.
பல்வேறு சூழ்நிலை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் இந்த பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிவாரண முகாமில் தங்கிய அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. சரிந்த தென்னை மரங்களை அகற்றவும், விவசாயிகள் மறு சீரமைப்புக்காக சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதுபோன்று விவசாயிகளுக்கும் தேவையான நிவாரண உதவியை வழங்க அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கும்.
கஜா புயலின் போது இரவு-பகலாக மீட்பு பணிக்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் அங்கேயே தங்கி இருந்து பணிகளை விரைவாக செய்ய உதவிய அமைச்சர்களுக்கும், நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கீட்டின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
கடலூருக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வருகை தந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமானால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்றனர்.
குழு அமைத்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேத மதிப்பீடு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 4 லட்சத்து 19 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரம்.
இதுபோக வெளியிடங்களிலும் வெளி நபர்களிடம் பலர் கடன் வாங்கியுள்ளனர். அனைவரையும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளோம்.

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை தனிப்பட்ட நிர்வாக அமைப்பு. இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்க முடியாது மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகக் குழு தீர்மானம் செய்து அவர்கள் நிதி ஒதுக்குவார்கள்.
தமிழகத்தில் 22 ஆயிரத்து 265 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் சாமர்த்தியமாக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு முக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் பாண்டியன் (வயது39). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர்.
இவர் தனது தந்தை ராமையனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி தாக்கிய கஜா புயலில் இவருடைய கூரை வீடு சேதமடைந்தது.
புயலால் சேதமான வீட்டை சீரமைக்க பணம் இல்லாமல் பாண்டியன் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். மேலும் வேலையும் இல்லாமல் இருந்து வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
நேற்று அதே பகுதியில் ஒரு விவசாயிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பாண்டியன் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் அங்கு சென்று பாண்டியனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 16-ந்தேதி வீசிய கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புயலால் இந்த கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புயல் வீசி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த அதிகாரிகளும் துளசேந்திர புரம் பகுதிக்கு வரவில்லை. மேலும் இந்த பகுதிக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி - பட்டுக் கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப்பொருள்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நமது மேட்டுப்பாளையம் அமைப்பு மற்றும் அனைத்து பொதுநல அமைப்பினர் இணைந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பந்தல் அமைத்து நிவாரணப் பொருள்களை சேகரித்து வருகின்றனர். அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் நிவாரணத் தொகைகளையும் பொருள்களையும் வழங்கி செல்கின்றனர்.
நேற்று இரவு மாற்றுத்திறனாளி முதியவர் தயங்கியபடி நிவாரணத்தொகை சேகரிக்கும் மையம் முன்பு நின்றார். அங்கிருந்தவர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு அவர் நான் ஒரு பிச்சைக்காரன். பிச்சையாக கிடைத்த பணத்தில் சாப்பிட்டதுபோக 12 ரூபாய் மீதம் உள்ளது. அதனை புயல் நிவாரணத்திற்கு தர விரும்புகிறேன். அதனை வாங்கிக்கொள்வீர்களா? என்று கேட்டார். நெகிழ்ச்சியடைந்த முகாமில் உள்ளவர்கள் கண்டிப்பாக வாங்கிக்கொள்கிறோம் என்று கூறினர். மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரர் பையில் வைத்திருந்த 12 ரூபாயை கொடுத்தார்.
விசாரித்ததில் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (வயது70) என்பது தெரியவந்தது. #GajaCyclone
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
இயற்கைப் பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடிமுடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின் வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. குடிசைகளை இழந்தவர்கள் பரிதவிக்கிறார்கள். தென்னை, வாழை, நெற்பயிர் எல்லாம் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வைச் சாய்த்துப் பறித்திருக்கிறது.
நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டத்தின் மக்கள் நடுவீதியில் நின்று, தங்கள் உணவுக்காக உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலத்தைப் பார்க்கும் மனதிடம் இதயமுள்ள எவருக்கும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகால வாழ்வையும் சேமிப்பையும் சூறையாடி விட்டது கஜா புயல். முழுமையாக மீண்டு வருவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் என்றாலும், பேரிடரை எதிர் கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது.
தி.மு.க.வின் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. கழக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற் கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 11 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைக் கொடியசைத்து அனுப்பும்போது, அவற்றில் இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஆவண செய்துள்ளேன்.
இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்க்ரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக் கூடாது என்ற உறுதிமொழியையும்தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது.
ஒரு மரத்துக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவதுடன், புதிய தென்னங்கன்றுகளையும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பே சரிவர நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்த காலநீட்டிப்பு வேண்டும், கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் டெல்டா மக்கள். நியாய விலைக் கடைகளில் டிசம்பர் மாதத்திற்கான மண் எண்ணையை நவம்பரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.
ஆனால், இருமாத காலத்திற்கான மண்எண்ணையை விலை கொடுத்து வாங்கும் சக்தி, புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இல்லை. நியாய விலைக் கடைகள் மூலமாக அவர்களுக்கு இயன்றவரை இலவசமாகப் பொருட்கள் கிடைக்க வழி கண்டிட வேண்டும்.

தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடியபோது அவற்றை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும் அளவுக்கு வேகம் காட்டிய மத்திய அரசும் அதற்குத் துணை நின்ற மாநிலஅரசும், தற்போது இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித மீட்புக் குழுவும் வரவில்லையே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எங்களை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு கஜா பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனவா என்பது தான் மக்களின் சந்தேகமும் அச்சமாகவும் இருக்கிறது.
மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.
சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகைதான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.
காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் கழகத்தின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். கழக உடன்பிறப்புகளின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்!.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.
புயலில் சேதமான மரங்கள், மின்கம்பங்கள், உள்ளிட்டவை சரி செய்வதற்காக மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இருந்த போதிலும் கிராமங்களில் முழுமையாக மின்விநியோம் சென்றடையவில்லை.
மின்கம்பங்களை சரிசெய்வதற்காக மாவட்டங்களில் உள்ள மின் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் உள்ள ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதியை பார்வையிட இன்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வந்திருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தார். பின்னர் மின் கம்பங்களை சரிசெய்வதற்காக திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, பேராவூரணியில் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கருணாஸ் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இன்று குருவிக்கரம்பை முனுமாக்காடு அரசு பள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், மற்றும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.
அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் பாதி முறிந்து நிற்கும் தென்னை மரங்களையும் கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
புதிய தென்னை கன்றுகளை வழங்க வேண்டும், விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மந்திரி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டி தரப்படும். நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும்.
மேலும் மேற்கூரை இழந்த வீடுகளுக்கு மத்திய அரசு சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தார் பாய் வழங்கப்படும். தென்னை வாரியம் மூலம் இலவசமாக தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிதி மந்திரியிடம் பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் மல்லிப்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
முன்னதாக பேராவூரணி பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களிடம் விவரங்களை அவர் கேட்டறிந்தார். #GajaCyclone #NirmalaSitharaman
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம், நாகை, கோடியக்கரை பகுதிகளை நேற்று பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையில் இருந்து காரில் அவர் நேராக நெடுவாசல் கிராமத்திற்கு சென்றார். அங்கு அதிக அளவிலான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா மரங்கள் சாய்ந்தன.
அதேபோல் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்திருந்தன. அவற்றை பார்வையிட்ட நிர்மலா சீதாராமனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் மறுவாழ்விற்காக உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் டெல்டா மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறேன். ஏராளமான மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். குறிப்பாக பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டித்தரப்படும், இந்த திட்டத்தின்கீழ் ஏராளமானர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசுக்கு அளிக்கப்படும் பெயர் பட்டியல் படி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை மாவட்ட கலெக்டரிடம் தாங்களாகவே கொடுக்க வேண்டும். இதுவரை கொடுக்காதவர்கள் உடனே கலெக்டரை சந்தித்து தகவல்களை கொடுங்கள்.
தென்னை மரங்கள் சாய்ந்துள்ளது மிகவும் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தென்னங்கன்று என்ற வார்த்தையை தென்னைக்கு மட்டுமே நாம் குறிப்பிடுகிறோம். வேறு எந்த இடத்திலும் இந்த வார்த்தையை நாம் கூறுவது கிடையாது. முதலில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் பிறகு தென்னங்கன்றுகள் நடப்படுவதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும். ஆந்திரா, ஒடிசா, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்தும் ராணுவ கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன்.

புயல் பாதித்த மாவட்டங்களில் மண்எண்ணை தட்டுப்பாடின்றி கிடைக்க பெட்ரோலியத்துறை மந்திரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள மண்எண்ணையை மாநில அரசு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. இதனால் நகர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதை நான் கண்கூடாக பார்த்தேன். மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் என்னை நேரில் சந்தித்து சீரமைப்பு பணிகள் குறித்து விபரங்களை தெரிவித்தார்.
அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மின் சப்ளை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் தான் நாட்டிற்கே நெற்களஞ்சியம் ஆகும். நாடு பஞ்சமில்லாமல் இருக்க டெல்டா விவசாயிகள் தான் காரணம். எனவே இந்த பாதிப்பை கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது. யாரும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.
உங்களுக்கு கேள்வி கேட்க உரிமைகள் உண்டு. ஏன் வரவில்லை என்று நீங்கள் கேட்கலாம். கஷ்டமான இந்த சூழ்நிலையில் உங்களின் கேள்வி நியாயமானதுதான். ஏற்கனவே இங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து ஆய்வு செய்திருக்கிறார். அவர் என்னை விட மூத்தவர்.
தைரியமாக இருங்கள். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்னும் காப்பீட்டு தொகையை செலுத்தாதவர்களுக்கு மாநில அரசே அந்த தொகையினை செலுத்திவிட்டு, அதன் பின்னர் காப்பீட்டு தொகை வரும்போது பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #BJP #NirmalaSitharaman #GajaCyclone
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது கொடைக்கானல் மலைச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நானும், துணை முதல்-அமைச்சரும், அதிகாரிகளும் மறுநாளே பார்வையிட வந்தோம்.
நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை விரைவில் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். மலை கிராமங்களில் புயலால் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது எங்களுடன் வந்திருந்த போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேஷ்வரன் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
அதன் காரணமாகவே நாங்கள் புயல் பாதித்த மாவட்டங்களான நாகை, திருவாரூர் பகுதிக்கு சென்று விட்டோம். அதன்பிறகு கொடைக்கானலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காமனூர் ஊராட்சி பகுதியில் 43 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மதியம் 12.30 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். அமைச்சர் வருகை ரத்து என தகவல் வந்ததால் அதிகாரிகளே அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அதன்பிறகு அமைச்சர் சீனிவாசன் வருகை உறுதி செய்யப்பட்டதால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.
பின்னர் அமைச்சர் வந்தவுடன் நிவாரண பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், உதயகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சீனிவாசன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையான பேச்சுகளை கூறி வருவது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது கஜா புயல் பாதிப்பு குறித்தும் அமைச்சர் தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இயற்கை சீற்றத்தை தடுக்க இயலாது. ஆனால் அதனால் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் வகையில் மாநில அரசு இதுவரை சரியான நடவடிக்கையோ, நிவாரண உதவியோ வழங்கவில்லை. இன்னும் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 நிவாரணம் என்பது வருந்தத்தக்கது. எனவே நிவாரணத் தொகையை கூடுதலாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாய மற்றும் கல்வி, சுயஉதவிக்குழு கடன்கனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபடியும் தென்னை விவசாயிகள் மரம் வைத்து காய்ப்புக்கு வருவதற்கு 5 ஆண்டு ஆகும். எனவே அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. உடனடியாக வீடு இழந்தவர்கள் மற்றும் தென்னை, பயிர்களை இழந்தவர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணங்களை வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GRamakrishnan
கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. குறிப்பாக மின்சார கம்பங்கள், துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் அதிக அளவில் சேதமடைந்தது.

தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit






